17 நவம்பர், 2009

சரணடைந்த புலிகளுக்கு 20 புனர்வாழ்வு நிலையங்கள் : ஆணையாளர் தகவல்



படையினரிடம் சரணடைந்த மற்றும் மனிதாபிமான நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்ட புலி உறுப்பினர்களின் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கென 20 புனர்வாழ்வு நிலையங்கள் நிறுவப்படவுள்ளன.

புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் தயா ரத்னாயக்க இதனைத் தெரிவித்ததாக அரச இணையத் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

தகவல் ஊடகத்துறை அமைச்சில் தேசிய அபிவிருத்தி தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

"ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட பணிப்பின்பேரில் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் நிறுவப்படவுள்ள இப்புனர்வாழ்வு நிலையங்களில் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பத்தாயிரம் பேருக்கு புனர்வாழ்வு அளிக்கப்படவுள்ளது.

இதன் முதல்கட்டமாக வவுனியா மெனிக்பாம் பகுதியில் 10 நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. இம்மாதம் இவை அமைக்கப்படுவதுடன் மேலும் 10 நிலையங்கள் அடுத்த மாதம் அமைக்கப்படவுள்ளன.

எவ்வாராயினும் இவர்கள் அனைவருக்கும் உரிய முறையில் புனர்வாழ்வு அளிக்கும் திட்டம் ஜனவரி முதல் ஆரம்பமாகவுள்ளன.

ஒரு வருட காலத்திற்குள் அதனைப் பூர்த்திசெய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. தேவைக்கு ஏற்ப புனர்வாழ்வுக்கான காலத்தை நீடிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.

புனர்வாழ்வு அளிக்கப்பட உள்ளவர்களுள் 1854 பெண் உறுப்பினர்களும் 566 பாடசாலை மாணவர்களும் அடங்குகின்றனர். பாடசாலை செல்லும் மாணவர்கள் தமது கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குச் சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

கல்வியைத் தொடரத் தகுதியான 273 மாணவர்கள் இலங்கையிலே மிகவும் பிரபல்யம் வாய்ந்த இரத்மலானை இந்துக்கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் மிகவும் ஆர்வத்துடன் மகிழ்ச்சிசியாகத் தமது கற்றல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த மாணவர்களுக்கான சகல வசதிகளையம் செய்து கொடுக்க 35 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த இவர்களது செயற்பாடுகளையும், சிந்தனைகளையும் முழுமையாக மாற்றியமைத்து சமாதான சிந்தனையுடன் வாழ்வதற்குத் தேவையான வகையில் உச்சக்கட்ட புனர்வாழ்வு வழங்குவதே இந்நிலையங்களின் பிரதான நோக்கமாகும்.

பெருந்தொகை போராளிகளுக்கு இதுபோன்று புனர்வாழ்வு அளிக்கப்படுவது உலகிலேயே இதுவே முதற் தடவையாகும்.

பயங்கரவாதத்தை முறியடித்ததன் பின்னர் அரசாங்கம் முன்னெடுத்து வரும் புனர்வாழ்வு திட்டத்தைப் பாராட்டும் வகையில் உலகின் பல நாடுகள் மற்றும் முன்னணி அமைப்புக்கள் என்பன இலங்கைக்கு ஒத்துழைப்புக்களை வழங்க முன்வந்துள்ளன" என புனர்வாழ்வு ஆணையாளர் மேலும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக