17 நவம்பர், 2009

சரத் பொன்சேகா அரசுக்கு சவாலாக விளங்குவார் : ஏஎப்பி கருத்து


சரத் பொன்சேகாவால் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க முடியுமானால், எதிர்காலத்தில் தேர்தலில் அவர் அரசுக்குக் கடும் சவாலாக விளங்குவார். ஜனாதிபதி, தேர்தல் குறித்த அறிவிப்பை அவர் ஞாயிறன்று வெளியிடாமைக்கு இதுவே காரணம்" என ஏ.எவ்.பி. செய்திச் சேவை கருத்துத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஏ.எவ்.பி. செய்திச் சேவை மேலும் தெரிவித்துள்ளதாவது :

"ஜெனரல் சரத் பொன்சேகா அரசியலில் நுழைவது நிச்சயம். அவர் தற்போது அதிலிருந்து பின்வாங்க முடியாது" எனப் பேராதனைப் பல்கலைக்கழக அரசியல் பேராசிரியர் சுமணசிறி லியனகே தெரிவித்திருக்கின்றார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதித் தேர்தல் குறித்த அறிவிப்பை ஞாயிற்றுக்கிழமை வெளியிடாமல் தவிர்த்தமைக்கு சரத் பொன்சேகாவின் சவாலே காரணம் என சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

விடுதலைப் புலிகளைத் தோற்கடித்ததன் மூலம் கிடைத்துள்ள ஆதரவைப் பயன்படுத்துவதற்காக மஹிந்த ராஜபக்ஷ தேர்தலை நடத்துவார், இது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை காணப்பட்டது.

சரத் பொன்சேகாவினால் எதிர்க்கட்சிகளை ஐக்கியப்படுத்த முடியுமானால் தேர்தலில் அவர் ஜனாதிபதிக்குக் கடும் சவாலாக விளங்குவார் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

"நாட்டில் இராணுவத்தின் செல்வாக்கை அதிகரித்தமை அரசுக்கு இறுதியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது" என ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக அரசியல் விரிவுரையாளர் டெரன்ஸ்புரசிங்க தெரிவிக்கிறார்.

இராணுவத் தலைவர் ஒருவர் ஊழலற்ற, சுத்தமான அரசு ஒன்றை உருவாக்கித் தருவார் என மக்கள் கருதுகின்றனர். அதேவேளை, சரத் பொன்சேகா தேர்தலில் குதிப்பது ஜன நாயகத்திற்கு ஆபத்தாக மாறலாம் என்றும் பலர் எச்சரிக்கின்றனர்.

சரத் பொன்சேகா ஜனாதிபதியாவது இலங்கையை பாகிஸ்தான், மியான்மார் போன்ற நிலைக்குக் கொண்டு செல்லலாம் என மற்றுமொரு விரிவுரையாளர் தெரிவிக்கின்றார்.ஜெனரல் சரத் பொன்சேகாவின் 40 வருட கால இராணுவ சேவையே அவரது அரசியல் பங்களிப்புக்கான அடி நாதமாக அமையும்.

"குறுகிய கால அளவில் அவர் அரசியலில் நுழைவது ஜனநாயகத்திற்கு நல்லது. காரணம், அவர் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கிறார்" என்று தெரிவித்துள்ள சுமணசிறி லியனகே, "ஜனநாயகம் செழிப்பதற்கு வலுவான எதிர்க்கட்சி அவசியம்" என்றார்.

அதேவேளை, நீண்டகால அடிப்படையில் இது ஆபத்தானது என்றும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

இதற்கிடையில், சரத் பொன்சேகாவுக்கும் அரசுக்கும் இடையிலான பிளவு மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பவர்களின் கரங்களைக் குறுகிய காலத்திற்கேனும் பலப்படுத்தியுள்ளது என மனித உரிமை ஆர்வலரும் சட்டத்தரணியுமான நிமால்கா பெர்னாண்டோ கூறுகிறார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக