சந்திரனில் காணி விற்பனை சூடு பிடிக்கிறது
ஒரு ஏக்கர் 20 டாலர்கள் மட்டுமே 34 இலட்சத்து 70 ஆயிரம் பேர் விண்ணப்பிப்பு
நிலவில் நீர் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டதையடுத்து நிலவு தொடர்பான பல்வேறு ஆய்வுகளில் பெரும் திருப்பு முனைகள் ஏற்பட்டுள்ளன. அதேவேளை, நிலவில் காணி வாங்கும் ஆர்வமும் மக்கள் மத்தியில் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பூமியில் இருந்து சுமார் 240,000 மைல் தொலைவில் உள்ள சந்திரனில் முதன் முதலாக மனிதன் கால் பதித்து 40 வருடங்கள் நிறைவடையும் நிலையிலே மனிதனின் நீண்ட கால கனவு நனவாகியுள்ளது.
அங்கு நீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பது வானியல் ஆய்வில் மிகப் பெரும் வெற்றியாகக் கருதப்படுகிறது.
1969 ஆம் ஆண்டு அமெரிக்க விண்கலமான ‘அப்பலோ - விண்கலம்’ முதன் முதலாக நிலவில் இறங்கியது. அன்றில் இருந்து ரஷ்யாவும் அமெரிக்காவும் பல தடவைகள் விண்கலங்களை அனுப்பி பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டன.
ஆனால் மருந்துக்குக் கூட சந்திரனில் தண்ணீர் இருக்கும் தடயம் கிடைக்கவில்லை. ஆனால் விஞ்ஞானிகள் சந்திரனில் தண்ணீரை தேடும் ஆய்வுகளை கைவிடுவதாக இல்லை.
ந்த நிலையிலே இந்தியா சந்திராயன் - 1 எனும் விண்கலத்தை சந்திரனுக்கு அனுப்பியது. இதன் போது நிலவில் நீர் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன் நாசா நிறுவனம் எல்கிராஸ் எனும் ராக்கெட்டை சந்திரனுக்கு அனுப்பி ஆய்வு நடத்தியது. சந்திரனில் எதிர்பார்த்தைவிட அதிகளவு தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் தற்பொழுது தெரிவித்துள்ளது.
இந்த ராக்கெட்டில் இணைக்கப்பட்ட ஒரு கருவியை சந்திரனில் சூரிய ஒளியேபடாத பரப்பின் மீது விஞ்ஞானிகள் மோதச் செய்தனர். மோதலின் விளைவை, ராக்கெட் மூலம் எடுக்கப்பட்ட படங்களை வைத்து நாசா விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.
மிகக் குறைந்த அளவிலேயே நிலவில் தண்ணீர் இருப்பதாக இதுவரை நம்பியிருந்தோம். ஆனால், சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் வியக்கத்தக்க வகையில் உள்ளன. ராக்கெட் மோதிய இடத்தில் ஏற்பட்ட பள்ளத்தில் குறைந்தது 25 கலன் தண்ணீர் இருக்கக் கூடும். சந்திரனை வறட்சியான பாலைவனப் பகுதி என்ற கருத்து இதன் மூலம் சிதைக்கப்பட்டு விட்டது என்று நாசா ஆய்வுக் குழுவில் உள்ள விஞ்ஞானியான ஜோன் லோக்ஸ்டோன் கூறியுள்ளார்.
சந்திரனில் தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பது, சந்திரன் தொடர்பான பல்வேறு புதிய ஆய்வுத் தளங்களுக்கு அடிப்படையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில வாரத்திற்கு முன் ரொக்கெட்டை நிலவில் மோதச் செய்து அப்போது ஏற்படும் அதிர்வு மூலம் நிலவின் மேற்பரப்பை தகர்த்து அதில் தண்ணீர் இருக்கிறதா? என நாசா ஆய்வு மேற்கொண்டது. இதில் தற்போது ஆச்சரியப்படும் வகையிலான தகவல்கள் வெளியாகியுள்ளன.
மொத்தம் 2 ரொக்கெட்கள் மோத விடப்பட்டன. இரண்டுமே வெற்றிகரமாக நிலவின் தளத்தில்மோதி நின்றதாக நாசா தெரிவித்துள்ளது.
முதலில் சென்டார் என்ற ராக்கெட்டை மோத விட்டனர். நிலவின் தென் முனையில் இந்த ராக்கெட் மோத விடப்பட்டது,
2000 கிலோ எடை கொண்ட அந்த ரொக்கெட் மணிக்கு 900 கிலோ மீற்றர் வேகத்தில பாய்ந்து சென்று மோதியது.
இதையடுத்து வெபர்டிங் என்ற 2வது ராக்கெட் மோதவிடப்பட்டது, முதல் ராக்கெட் மோதிய நான்கு நிமிடங்களில் 2வது ரொக்கெட் மோத விடப்பட்டது. அதே கோணத்தில் இந்த ராக்கெட்டும் விடப்பட்டது.
எது எப்படியோ நிலவில் நீர் இருப்பது உறுதியாகி விட்டது. இதனால் அங்கு ஜீவராசிகள் வாழ முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நிலவில் காணி வாங்குவதற்கு மக்கள் போட்டி போடத் துவங்கியுள்ளதாக பல நாடுகளில் இருந்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பல நாடுகளில் தண்ணீருக்குப் பஞ்சமாக இருக்கையில் நிலவில் குறைந்த விலையில் காணி கிடைக்குமென்றால் யார் தான் வேண்டாமென்பார்கள்.
நிலவில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதையடுத்து நிலவில் இடம் வாங்க மக்களிடையே ஆர்வம் பிறந்துள்ளதாம். இது குறித்துதான் இப்போது இன்டர்நெட்டில் சூடான விவாதம் இடம்பெறுகிறது.
நிலவில் ஒரு ஏக்கர் நிலம் சுமாராக 20 டாலருக்கு விலை பேசப்படுகிறதாம். அமெரிக்காவைச் சேர்ந்த லூனார் எம்பசி என்ற நிறுவனம் இவ்வாறு நிலவின் காணிகளை விற்பனை செய்யும் வியாபாரத்தை ஆரம்பித்துள்ளது.
இந்நிறுவனம் இன்று நேற்றல்ல, கடந்த 29 ஆண்டுகளாக இந்த வேலையைத் தான் செய்து வருகிறதாம், நிலவில் இடத்தைப் தபிவு செய்வதும் விற்பது தாம் இந்த நிறுவனத்தின் வேலை. இந்த நிறுவனத்தின் இணையத் தளத்தில் நிலவில் இடம் வாங்குவது தொடர்பான அனைத்து விபரங்களையும் பதிவு செய்துள்ளனர்.
சிலர் இதனை ஏமாற்று வியாபாரம் என்று நினைப்பர். ஆனால் இது மோசடி வேலை அல்ல என்றும் ஒரு விளக்கத்தை இந்த நிறுவனம் கூறுகிறது.
சந்திரன் மற்றும் பிற கிரகங்களில் நிலத்தை விற்பனை செய்யவும், பதிவு செய்யவும் அங்கீகாரம் பெற்ற ஒரே கம்பனி எங்களுடையதுதான் என்று இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுவரை தங்களது நிறுவனத்தில் 34 இலட்சத்து 70 ஆயிரத்து 72 பேர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர் என்றும் இவர்கள் கூறுகிறார்கள்.
பிற கிரகங்களில் காணிகளை விற்பதற்கு இவர்களுக்கு யார் உரிமை வழங்கினார்கள்? அதற்கும் ரு விளக்கம் இந்த இணையத் தளத்தில் உள்ளது. அதாவது ஐ. நா. சபையிலும் அமெரிக்கா மற்றும் ரஷ்ய அரசுகளிடமும் இது குறித்து முறையாக பதிவு செய்து உரிமையைப் பெற்றுள்ளனராம்.
லூனார் எம்பசியைச் சேர்ந்த டென்னிஸ் ஹோப் என்பவர் இது தொடர்பான உரிமத்தை 29 ஆண்டுகளுக்கு முன்பே வாங்கி விட்டாராம். பின்னால் சட்டப் பிரச்சினை வந்து விடக் கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடாம். தங்களது உரிமையை இதுவரை எந்த நாடும் கேள்வி கேட்கவில்லை என்றும் வாதிடுகிறார்கள்.
கடந்த 1979 ஆம் ஆண்டு சர்வதேச நிலவு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் 1984ம் ஆண்டு அமுலுக்கு வந்தது. இந்த ஒப்பந்தப்படி எந்த ஒரு தனி நபரும் நிலவில் உரிமை கோர முடியாது., 2008 ம் ஆண்டு ஜனவரி 1ம் திகதி நிலவரப்படி இந்த ஒப்பந்தத்தை இதுவரை 13 நாடுகள் மட்டுமே ஏற்றுக் கொண்டுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக