17 நவம்பர், 2009

ஈழக்கொடியை மீண்டும் உயர்த்த எவருக்கேனும் இடமளிக்கப்போவதில்லை

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

ஈழக் கொடியை வீழ்த்த உதவியவர்கள் மீண்டும் அதனை உயர்த்த இடமளிக்க முடியாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

இவர்கள் வெளிநாடுகளில் ஈழக்கொடி யினை உயர்த்த முற்படுவார்களேயானால் நாட்டு மக்கள் அதற்குத் தகுந்த பதிலடி கொடுப்பர் என்றும் ஜனாதிபதி மேலும் கூறினார்.

அரச காணிகளிலுள்ள விஹாரைகளுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கும் வைபவம் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடை பெற்றது. இந்நிகழ்வில் காணி உறுதிப்பத்திரங்களை வழங்கிவைத்து உரையாற்றிய ஜனாதிபதி, அங்கு மேலும் பேசுகையில், இனத்துரோகிகளுக்கு வீரர்களை உருவாக்க முடியாது. தேசப்பற்று உள்ளோரால் மாத்திரமே அது முடியும். நாம் சரியான பாதையை வகுத்துவருகிறோம். எத்தகைய சவால்களை எதிர்கொள்ளவும் நாம் தயாராகவுள்ளோம் என்றார்.

அமைச்சர்களான ஜீவன் குமாரதுங்க, தினேஷ் குணவர்தன, பண்டு பண்டார நாயக்க, பிரதியமைச்சர் சந்ரசிறி சூரியாரச்சி உட்பட பெளத்த நாயக்கதேரர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது;

ஈழக் கொடியை வீழ்த்துவதற்கு எம்மோடு உறுதுணையாக பெளத்த மதகுருமார்களுடன் மேலும் பலர் இருந்தனர். அதற்குத் தலைமைத்துவம் வழங்கியும் செயற்பட்டனர். அவர்கள் எவருமே இந்த நாட்டில் ஈழக் கொடியைக் காண விரும்பமாட்டார்கள்.

எனினும் எவருக்காகவாவது உலகில் எங்காவது ஈழக்கொடி உயர்த்தப்படுமானால் அதற்கு இந்நாட்டு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பது உறுதி, சர்வதேச சூழச்சிகள் வெற்றி பெறுவதற்கு உதவியாக இந்நாட்டில் மேற்கொள்ளப்படும் சூழ்ச்சிகளுக்கு ஆயுள் மிகக் குறைவானது என்பது உறுதி.

எஸ். எம். எஸ். மூலம் ஜனாதிபதியாக முடியாமற்போனது போல இணையத்தளங்கள் மூலம் ஈழக் கொடியை உயர்த்த முற்படுவதும் முடியாத காரியம். அதற்கு இந்நாட்டின் தேசப்பற்றுள்ளவர்கள் இடமளிக்க மாட்டார்கள்.

எவராவது அவ்வாறு கனவு காண்பார்களானால் அது ஒருபோதும் பலிக்காது.

இனத் துரோகிகளால் வீரர்களை உருவாக்க முடியாது. வரலாற்றில் தொடர்ச்சியாக தேசப்பற்றாளர்களே நாட்டை நேசிக்கும் மனிதர்களை உருவாக்கியுள்ளனர். நாட்டிற்கான புதிய பாதையை நாம் வகுத்துள்ளோம். அன்று போலவே என்றும் பயமின்றி சவால்களை வெல்வோம் என ஜனாதிபதி அங்கு கூறினார்.

பெளத்த மத விஹாரைகள் கடந்த காலங்களில் சந்தித்த அவலங்கள் சம்பந்தமாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி; கிழக்கில் பெளத்த மதத்தவர்கள் வழிபாடுகளில் ஈடுபட முடியாதிருந்த காலகட்டத்தைக் குறிப்பிட்டதுடன், திருகோணமலையில் புத்தர் சிலை முட்கம்பிகளால் வளைக்கப்பட்டு அதனருகே பெளத்த மதத்தவர்கள் சென்று வழிபடமுடியாமலிருந்த சம்பவத்தையும் குறிப்பிட்டார்.

வடக்கு, கிழக்கில் பெளத்த தேரர்கள் கஷ்டமான வாழ்க்கையை அனுபவித்தனர். வெளியில் நடமாட முடியாதிருந்தனர். அதற்கான சுதந்திரமும் அவர்களுக்கு இருக்கவில்லை. அரந்தலாவையில் பிக்குமார் கொலை செய்யப்பட்ட போதும், அவர்கள் அப்பிரதேசத்தைக் கைவிட்டு ஓடவில்லை. விஹாரைகளைப் பாதுகாத்தனர்.

இதனால் நாம் பெளத்த விஹாரைகளை புனரமைக்க நடவடிக்கை எடுத்தோம். இப்போதும் சூழ்ச்சிகள் உள்ளன. எனினும் மீண்டும் இந்த நாட்டில் விஹாரைகள் முள்வேலிகளுக்குள் அடைக்கப்படும் யுகம் உருவாக இடமளிக்கப் போவதில்லை. இது எமது பொறுப்பு மட்டுமல்ல எமது உரிமையுமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக