3 ஜனவரி, 2011

மத வழிபாடுகளுடன் ஜனாதிபதி செயலக வேலைகள் ஆரம்பம்


புதிய வருடத்தில் இன்று மத வழிபாடுகளுடன் ஜனாதிபதி செயலக வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பல மதவழிபாடுகள் இடம்பெற்றதோடு, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் ஜனாதிபதி செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

புதிய ஹெல உறுமய கட்சித் தலைவர் கைது!




புதிய சிஹல உறுமய கட்சித் தலைவர் இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என சற்று முன்னர் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கியைக்காட்டி இருவரை அச்சுறுத்தினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டே புதிய ஹெல உறுமய கட்சித் தலைவர் சரத் மனமேந்திரா கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் வெலிக்கடை பொலிஸார் இவரைத் தமது காவலில் வைத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

உள்ளூராட்சித் தேர்தலில் கொழும்பிலும் போட்டியிடுவது குறித்து ஆராய்கின்றோம்: த.தே.கூ


எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் கொழும்பிலும் போட்டியிடுவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆராய்ந்து வருகின்றது. இது தொடர்பில் விரைவில் தீர்மானம் எடுக்கப்படும் என்று கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

மார்ச் மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்கின்றது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் கூட்டமைப்பு போட்டியிடும். அதுமட்டுமல்லாது கொழும்பிலும் போட்டியிடுவது குறித்து தற்போது ஆராய்ந்து வருகின்றோம். இது தொடர்பில் விரைவில் தீர்மானம் எடுக்கப்படும்.

அரசாங்கம் எந்த வேளையில் தேர்தலை நடத்தினாலும் அதனை எதிர்கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகவே உள்ளது என்று தெரிவித்தார்.

இதேவேளை உள்ளூராட்சி தேர்தலின் போது மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கல்முனை மாநகர சபைகள் உட்பட அனைத்து சபைகளிலும் கூட்டமைப்பு போட்டியிடும். தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்தும் சபைகளுக்கான மேயர், தலைவர், வேட்பாளர்கள் நியமனம் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து 4ஆம் திகதி கூடும் கட்சியின் உயர்மட்டக் கூட்டத்தில் ஆராயப்படுமென்று கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

தமிழ்க் கூட்டமைப்பு தமிழ் கட்சிகளின் அரங்கம் என்பவற்றின் உபகுழு இவ்வாரம் கூடவுள்ளது-புளொட் தலைவர் த.சித்தார்த்தன்





தீர்வு தொடர்பாக ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்க் கட்சிகளின் அரங்கம் ஆகியன ஒன்றிணைந்து அமைத்திருக்கும் ஆறுபேர் கொண்ட உபகுழுவானது இந்தவாரம் நடுப்பகுதியில் கூடவுள்ளதாக புளொட் அமைப்பின் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இதன்போது தமிழ் மக்கள் எதிர்பார்த்துள்ள அரசியல் தீர்;வினைத் தயாரிப்பது தொடர்பிலான ஆரம்பக்கட்டப் பணிகள் குறித்து விசேடமாக கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழர் பிரச்சினைகள் தொடர்பில் தமிழ்க் கட்சிகளிடையே ஏற்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் அமைக்கப்பட்டிருக்கும் அரசியல்குழுவே இவ்வாரம் நடுப்பகுதியில் கூடவுள்ளது என்றும் புளொட் தலைவர் த.சித்தார்த்தன் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கு, கிழக்கில் அதிக மழை பெய்யும் சாத்தியம் நாட்டில் 4 இலட்சம் பேர் பாதிப்பு: அம்பாந்தோட்டையிலும் வெள்ளம்


கிழக்கு ஊடாக வீசுகின்ற காற்றில் அழுத்தம் ஏற்பட்டிருப்பதால் கிழக்கு, வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று (3ம் திகதி) அதிக மழை பெய்யும் என்று வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் தமயந்தி இந்திஹெட்டி ஹேவகே நேற்றுத் தெரிவித்தார்.

இதேவேளை கடந்த சில தினங்களாக நாட்டில் பெய்த அடைமழை காரணமாக ஒரு இலட்சத்து 11 ஆயிரத்து 646 குடும்பங்களைச் சேர்ந்த 4 இலட்சத்து 19 ஆயிரத்து 190 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடுப்பிலி கூறினார்.

அடைமழை காரணமாகப் பாதிக்கப்பட்டிருப்பவர்களில் 5 அயிரத்து 695 குடும்பங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்து 675 பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

அடைமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களு க்கு தொடர்ந்தும் அவசர நிவாரண நடவடிக்கைகளை உடனுக்குடன் முன்னெடுக்குமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சி பதிவுப்படி ஆகக் கூடிய மழை அம்பாந்தோட்டையில் 100.6 மில்லி மீற்றர்களாகப் பெய்துள்ளது எனவும் வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் கூறினார்.

இதேவேளை இன்று பிற்பகலிலும், மாலையிலும் நாடெங்கிலும் இடி, மின்னலுடன் மழை பெய்யமுடியும். அதனால் இடி, மின்னல் பாதிப்பைத் தவிர்த்துக் கொள்ளுவதில் ஒவ்வொருவரும் கூடிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடுப்பிலி மேலும் கூறுகையில், இம்மழை காரணமாக மட்டு. மாவட்டத்தில் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 474 குடும்பங்களைச் சேர்ந்த 3 இலட்சத்து 86 ஆயிரத்து 359 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 5166 குடும்பங்களைச் சேர்ந்த 18 ஆயிரத்து 341 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 2248 குடும்பங்களைச் சேர்ந்த 7889 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 1464 குடும்பங்களைச் சேர்ந்த 5841 பேரும் திருமலை மாவட்டத்தில் 285 குடும்பங்களைச் சேர்ந்த 1054 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இம்மழை காரணமாக 1488 வீடுகள் முழுமையாக அழிவுற்றுள்ளதுடன் 3962 வீடுகள் பகுதியாக சேதமடைந்துள்ளது என்றார்.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஹம்பாந்தோட்டை இணைப்பாளர் சார்ஜண்ட் எம்.ஜி.ஏ. நந்தன கூறுகையில், சாமோதா கமவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள திஸாவெவ குளத்தின் அணை நேற்று முன்தினமிரவு திடீரென உடைப்பெடுத்தது.

இதன் காரணமாக 39 குடும்பங்கள் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர். அத்தோடு 500 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இவர்களுக்கு சமைத்த உணவு நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் கடல் அடி மின் கேபிள் பரிமாற்ற திட்டம்

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே முதன் முறையாக கடலுக்கு அடியில் மின் பரி மாற்றக் கேபிள்களை அமைக்க திட்டமிடப்பட்டு ள்ளது. இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே கடலுக்கு அடியில் மின் பகிர்மான கேபிள்களை இந்திய மின் தொகுப்பு கழக நிறுவனமும் (பவர் கிரிட்) இலங்கை மின்சார சபையும் இணைந்து அமைக்க திட்டமிட்டுள்ளன.

இதற்கான விரிவான திட்ட அறிக்கையை (டி.பி.ஆர்.) இந்திய மின் தொகுப்புக் கழகம் இன்னும் ஒரு மாதத்தில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்க உள்ளது.

இந்திய மின் தொகுப்புக் கழகத்தின் உயர் மட்ட அதிகாரிகள் இது பற்றி கூறியதாவது; இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் 250 முதல் 300 கி.மீ, நீளத்திற்கு மின் பரிமாற்றக் கேபிள் வயர்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன. இதில் 50 கி.மீ. நீளம் கடலுக்கு அடியில் அமைய உள்ளது. கடலுக்கு அடியில் அமையும் கேபிள் திட்டத்தை இந்திய மின் தொகுப்புக் கழகமும் இலங்கை மின்சார வாரியமும் இணைந்து மேற்கொள்ளும்.

இதற்கான விரிவான திட்ட அறிக்கை இன்னும் ஒரு மாதத்தில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும், இந்த திட்டப்பணிகள் 2014 ஆம் ஆண்டில் தொடங்கும், இந்த திட்டத்திற்காக 3,000 முதல் 4,000 கோடி வரை தேவைப்படுமென மதிப்பிடப்பட்டுள்ளது.

12 வது ஐந்தாண்டு திட்ட காலத்தின் முடிவில் ஆயிரம் மெகா வாட் மின்சாரம் இந்த கேபிள் மூலம் பரிமாற்றம் செய்யப்படும். தமிழகத்தின் இராமேஸ்வரத்திலிருந்து இலங்கையின் தலை மன்னார் வரை இந்த கேபிள்கள் அமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. எனினும், இந்த திட்டத்திற்கான இறுதித் தடத்தை மத்திய அரசு முடிவு செய்யும். அமெரிக்கா, பிரிட்டன், கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கடலுக்கு அடியில் மின் கேபிள்கள் அமைக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த முறையை பின்பற்றி, இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே கடலுக்கு அடியில் கேபிள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய மின் தொகுப்புக் கழகம் ஏற்கனவே இது போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பூட்டான் இடையேயான திட்டம் செயல் வடிவத்தில் உள்ளது. வங்கதேசம் இடையேயான திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. எனினும், இலங்கை இடையேயான திட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த திட்டம் குறித்து இ.மி.சபை தலைவர் வித்ய அமரபால கூறியதாவது, இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் கடலுக்கு அடியில் மின்பரிமாற்ற கேபிள்கள் அமைக்க திட்டமிடப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கான திட்டப்பணிகள் விரைவில் தொடங்கும். எந்த திகதியில் தொடங்கும் என்பதை திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டு அரசின் அனுமதி கிடைத்ததும் அறிவிக்கப்படும்.இவ்வாறு வித்ய அமரபால கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

புதிதாக 15 அரசியல் கட்சிகளை பதிவு செய்ய அங்கீகாரம்


புதிதாக பதினைந்து அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கு தேர்தல் செயலகம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கடந்த வருடம் அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கென 85 விண்ணப்பங்கள் கட்சிகளிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றிலிருந்தே 15 புதிய அரசியல் கட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக செயலகம் தெரிவித்தது.

இவற்றைப் பதிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வு அடுத்த வாரம் நடை பெறவுள்ளது. தற்போது நாட்டில் பதிவு செய்யப்பட்ட 66 அரசியல் கட்சிகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்டமூலம் நாளை சபையில்; பிரதமர் தெரிவிப்பு






உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான திருத்தச் சட்ட மூலம் நாளை (04) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருப்பதாக பிரதமர் தி. மு. ஜயரத்ன தெரிவித்தார்.

மல்வத்த மற்றும் அஸ்கிரிய மகா நாயக்க தேரர்களுடனான சந்திப்பின்போது பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இச்சந்திப்பு நேற்று (2) காலை ஞாயிற்றுகிழமை இடம்பெற்றது.

பிரதமர் அங்கு தொடர்ந்து உரை யாற்றுகையில்:-

குறித்த திருத்தசட்டமூலம் தொடர்பில் பரிசீலனை செய்வதற்கும் அவை தொடர்பில் கருத்துக்களை முன்வைப்பதற்கும் பிரதான எதிர்க்கட்சி உட்பட அனைத்து கட்சிகளுக்கும் அவகாசம் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்ட பிரதமர், முறையான தேர்தலொன்றை நடாத்துவதற்கான அனைத்து சிறந்த தீர்மானங்களையும் எதிர்க்கட்சியினர் முன்வைப்பார்கள் எனவும் பிரதமர் எதிர்ப்பு தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலங்கள் மார்ச் மாதம் நிறைவடைய வுள்ளன.

இருந்தபோதும் எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் தற்போது நடைமுறையில் உள்ளவாறு இடம்பெறும் எனவும் பிரதமர் மேலும் தெரிவித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

‘மனித நேயத்துடன் மக்கள் சேவை’ அரசின் வேலைத் திட்டம் இன்று ஆரம்பம்; ஜனாதிபதி செயலகத்தில் பிரதான வைபவம்






புது வருடத்தில் அரச நிறுவனங்கள் மக்களுக்கான சேவையை ‘மனித நேயத்துடன் மக்களுக்கு சேவையாற்றுவோம்’ எனும் தொனிப் பொருளில் ஆற்ற வேண்டுமென பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு சகல அமைச்சுக்களுக்கும், திணைக்களத் தலைவர்களுக்கும் சுற்றறிக்கை வாயிலாக அறிவித்துள்ளது.

இது தொடர்பான வேலைத் திட்டம் தேசிய, மாகாண, மாவட்ட, பிரதேச செயலக மட்டத்தில் நடத்தப்பட வேண்டுமெனவும் இவ்வேலைத்திட்டத்தின் பிரதான வைபவம் இன்று திங்கட்கிழமை 03ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

அன்றைய தினம் சகல அரச அலுவலகங்களிலும் தேசியக் கொடியேற்றப்பட்டு தேசிய கீதம் பாடப்படுவதுடன், நாட்டுக்காக உயித் தியாகம் செய்த படை வீரர்களுக்காக இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட வேண்டும்.

நிகழ்வின் இறுதியில் மனித நேயத்துடன் மக்களுக்கு சேவையாற்றுவது தொடர்பாக சகல அரசாங்க ஊழியர்களும் உறுதி மொழியொன்றை எடுத்துக்கொள்ள வேண்டுமென பொது நிருவாக அமைச்சின் செயலாளர் பி. பீ. அபயக்கோன் அறிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

கொழும்பு - பதுளை ரயில் சேவை வழமைக்குத் திரும்பின





மண் சரிவு காரணமாகத் தடைப்பட்ட பதுளை - கொழும்பு ரயில் சேவைகள் மீண்டும் வழமைக்குத் திரும்பின.

கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட மண் சரிவு காரணமாக ரயில் சேவைகள் தடைப்பட்டன. இதனால், சனிக்கிழமை “உடரட்ட மெனிக்கே" மற்றும் “பொடி மெனிக்கே" ஆகிய ரயில்களின் சேவைகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டன.

எனினும், நேற்றுக் காலை முதல் ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பியதுடன், காலை உடரட்ட மெனிக்கே ரயில் பதுளை நோக்கிப் புறப்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்தது
மேலும் இங்கே தொடர்க...