
3 ஜனவரி, 2010
வவுனியாவில் பொது சுகாதார பிரிவுகள்தோறும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை தீவிரம்

ஜனநாயகத்தையும், நீதியையும் மலரச் செய்யவே ஜே.வி.பியுடன் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளோம் - ரணில் விக்கிரமசிங்க

இதன்போது அவர் மேலும் தெரிவித் தவை வருமாறு: மிக நீண்ட காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் முயற்சிகளை ஏற்கனவே நாம் ஆரம்பித்துவிட்டோம். இதற்காக புதிய தோர் அரசமைப்புச் சட்டம் ஒன்றைக் கொண்டு வருவது தொடர்பாக தொடர்ச்சி யான கலந்துரையாடல்களை பல்வேறு கட்சிகளுடனும் நடத்தி வருகின்றோம். குறிப்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட சகல கட்சிகளுடனும் இத் தகைய கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன.
இதன் மூலம் நாடாளுமன்றத் தெரிவுக் குழு ஒன்றின் மூலம் இனப்பிரச்சினைக் குத் தீர்வு காணப்படும். இதுநாள் வரையும் காலத்தை இழுத்தடிப்பதற்கே இத்தகைய நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டு வந்தது. ஆனால் இம்முறை புதிய அரசமைப்பின் கீழ், சக்திமிக்க நாடாளுமன்றக் குழுவை அமைத்து மிக விரைவாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியும்.
சர்வாதிகார ஆட்சி புரியும் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை அகற்றி சரத் பொன்சேகாவை ஜனாதியாக்க நாம் முயற்சிப்பது ஜனநாயகம், நீதி, கருத்துச் சுதந்திரம் என்பவற்றை நாட்டில் மீண்டும் நிலைநாட்டுவதற்கே. இதற்காகத் தான் எதிரும் புதிருமாக இருந்த ஐ.தே.கவும், ஜே.வி.பியும் இணைந்து செயற்படுகின்றன.
இதேபோல வருங்காலத்திலும் இனப்பிரச்சினை உள்ளிட்ட சகல பிரச்சினைகளையும் ஏனைய கட்சிகளுடனும் இணைந்து செயற்பட்டு தீர்வுகாண்போம். மீண்டும் ஒரு தடவை தமது உரிமைகளுக்காகத் தமிழ் மக்கள் போராடுவதற்குத் தேவையற்ற வகையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு அமைந்திருக்கும். இது குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுடனும் விரிவாக ஆராய்ந்துள்ளோம்.
தோழனே! வரலாறு உன் வாழ்வை மீட்டுத்தரும்- (தோழர் சுந்தரம் நினைவாக)

70க்களின் முற்கூறுகளில் சிங்களப் பெருந்தேசியவாதம் தமிழர்கள்மீது கட்டவிழ்த்துவிட்ட இன ஒடுக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த தோழர் சுந்தரம் "ஆற்றல்மிகு கரங்களிலே ஆயுதமேந்துவதே மாற்றத்திற்கான வழி, மாற்றுவழி ஏதுமில்லை"என கண்டார். விடுதலைப் போராட்ட வரலாறுகளைத் தேடித்திரிந்து கற்றார். அன்றிருந்த பொதுவுடமை தலைவர்களிடம் பழகி, பொதுவுடமை கொள்கைகளின்பால் ஈர்க்கப்பட்டார்.
தமிழீழ விடுதலையை வேண்டிநின்ற தோழர் சுந்தரம், "தனிமனித பயங்கரவாதமும், வெறும் வீரதீர சம்பவங்களும் அடக்கியொடுக்கப்படும் ஒரு தேசிய இனத்தின் விடுதலையைப் பெற்றுத் தந்துவிடாது. மாறாக, போராட்டமானது முழு மக்களையும் இணைத்ததாக, எதிரிகளை சரியாக இனங்கண்டு நட்பு சக்திகளுடன் கைகோர்த்து முன்னெடுக்கப்பட வேண்டியது. தமிழீழ விடுதலையென்பது வெறும் மண் மீட்பு அல்ல. அது, எமது மக்களின் சமூக-பொருளாதார விடுதலையையும் குறித்ததானது" என்ற கருத்தியல் அடிப்படையில் கழகத்தை வளர்த்த தோழர்களில் தோழர் சுந்தரம் முதன்மையானவர்!
தொலைநோக்கு அரசியல், அசாத்திய துணிவு, நேர்மை, கடின உழைப்பு, தன்னலங்கருதாத தியாகம், இவற்றிக்குமப்பால் மனித நேயம், தோழமை இவையெல்லாம் ஒருசேர்ந்த மக்களை நேசித்த மகத்தான, சமூக போராளி சுந்தரம்.
கருத்து முரண்பாடுகளால் தமிழீழ விடுதலைப் புலிகள் பிளவுண்டு கலைந்தபோதும் தமிழ் மக்களின் உண்மையான விடுதலையை வேண்டி முற்போக்கு சிந்தனை கொண்ட போராளிகளுடன் இணைந்து தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தை நிறுவி அதன் படைத் தளபதியாகவும், அதேவேளை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் உத்தியோகபூர்வ ஏடான "புதியபாதை"யின் ஆசிரியராகவும் இறுதிவரை உழைத்தார். புதியபாதையில் அன்று அவர் தவறுகின்ற தமிழ் தலைமைகளையும், பிற்போக்குவாத சக்திகளையும் தயவுதாட்சண்யமின்றி விமர்சனத்திற்குள்ளாக்கினார். மக்கள் விரோதிகளை அம்பலப்படுத்தினார். அதேவேளை "புளொட்"டின் படைத்தளபதியாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதன் முதலாக ஆனைக்கோட்டை பொலீஸ் நிலையத்தை முற்றாக தாக்கியழித்து வரலாறு படைத்தார். ஒரு தொலைநோக்குள்ள பத்திரிகையாசிரியராகவும், சிறந்த படைத்தளபதியாகவும், மனித நேயமிக்க போராளியாகவும், பல்வேறு பரிமாணங்களை கொண்ட தோழர் சுந்தரம் மரணம்வரை மக்களின் வாழ்வை நேசித்தார்.
02.01.1982அன்று "புதியபாதை" பணி தொடர்பாக யாழ்.சித்திரா அச்சகத்தில் முகாமையாளருடன் உரையாடிக் கொண்டிருந்தபோது, பாசிஸ்ட் பிரபாகரனால் கோழைத்தனமாக மறைந்திருந்து தோழர் சுந்தரம் படுகொலை செய்யப்பட்டார். "புதியபாதை" அச்சிட்ட அதே சித்திரா அச்சகத்திலேயே தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அழிவுவரலாற்றுக்கான முதல் எழுத்தும்
எழுதப்பட்டதென்பதை தவிர வேறு என்ன சொல்ல...?
"தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மறுபடியும் தர்மம் வெல்லுமெனும் மருமத்தை நம்மால் உலகம் கற்கும்."
எங்கள் பெருமதிப்பிற்குரிய தோழனே! வரலாறு உன் வாழ்வை மீட்டுத்தரும்.
2 ஜனவரி, 2010
ஆலமரம் போன்ற பெருவிருட்சம் இ.தொ.கா. விலகிச்செல்வோரால் முறிந்துவிடப்போவதில்லை - ஆறுமுகம் தொண்டமான்
மலையக மக்களுக்கான அபிவிருத்திப் பணிகளை எதிர்காலத்தில் மேற்கொள்ளப் போவதாகச் சரத் பொன்சேகா கூறுகிறார். ஆனால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவோ அப்பணிகளை கடந்த 4 வருடங்களாக முன்னெடுத்து வருகிறார். அதுவே ஜனாதிபதிக்குப் பலமாகவுள்ளதென இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்தார்.
புதுவருடத்தை முன்னிட்டு கொழும்பு 05, வஜிரா வீதியிலுள்ள அவ் அமைச்சின் செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு விடையளிக்கும் போதே இதனை அவர் தெரிவித்தார்.
அச்சந்திப்பின் போது ஊடகவியலாளர்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கே ஆதரவு வழங்க இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இம்முடிவு தொடர்பாக மாற்றுக் கருத்து கொண்டுள்ள சிலர் எமது கட்சியை விட்டு விலகிச் சென்றுள்ளனர். அதற்காக அவர்கள் பல்வேறு கருத்துகளை முன்வைத்துள்ள போதிலும் அவை திருப்திகரமானதாகவில்லை. அவர்கள் கூறும் காரணங்களின் படி அவர்கள் தேர்தல் அறிவிப்பின் முன்னரோ, அல்லது தேர்தல் முடிந்த பின்னரோ கட்சியை விட்டு விலகிச் சென்றிருக்க வேண்டும். ஆனால், தேர்தல் அறிவிப்பின் பின் அவர்கள் வெளியேறியமை அவர்களின் சுயநலப் போக்கையே வெளிக்காட்டுகின்றது.
அதைத் தவிரவும், எமது கட்சி எமது பாட்டனார் சௌமியமூர்த்தி தொண்டமான் காலம் முதல் ஒரே கொள்கையில் உறுதியாகவுள்ளது. கொடுத்த வாக்கை மீறுவதில்லை. அதே நிலைப்பாட்டிலேயே இன்றும் உள்ளோம்.அத்துடன் எமது கட்சி உறுப்பினர்கள் மீது உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தோம். அவர்கள் கட்சியை விட்டு வெளியேறுவார்கள் என எதிர்பார்த்திருக்கவில்லை. வெளியேறுபவர்களை தடுத்து நிறுத்தவும் எம்மால் முடியாது. அவர்கள் வெளியேறியமைக்கான சரியான காரணமும் தெரியாது. அந்தக் காரணத்தை அவர்களிடமே கேட்க வேண்டும் அல்லது நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.
ஆனால், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது மகிந்த ராஜபக்ஷ மலையக மக்களின் பெரும்பான்மை வாக்குப் பலத்துடன் வெற்றி பெறுவார் என்பது உறுதி. ஏனெனில் கடந்த 4 வருடங்களில் அத்தகைய பெறுமதி மிக்க அபிவிருத்திப் பணிகளை மலையகத்தில் மேற்கொண்டுள்ளாரெனக் கூறினார்.தொடர்ந்து, மேலும் சில உறுப்பினர்கள் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை விட்டு வெளியேறப் போவதாக ஊகங்கள் வெளியிடப்படுவது தொடர்பாக அமைச்சரிடம் கருத்துக் கேட்டபோது அவ்வாறு யாரும் வெளியேற மாட்டார்கள் என நம்புவதாகவும் விலகிப் போனாலும் தன்னால் தடுக்க இயலாதெனவும் ஆனால் அவ்வாறு விலகுபவர்களால் ஆலமரம் போன்ற கட்சிக்கு எவ்வித பாதிப்புமில்லையெனவும் தெரிவித்தார்.
சகல இனத்தவர்களும் ஏற்கும் விதத்தில் அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும்- எதிர்க்கட்சித் தலைவர் ரணில்

இவ்விடயம் தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட விசேட அறிக்கையில் தெரி விக்கப்பட்டிருப்பவை வருமாறு, பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதுடன் ஆயுதப் போராட்டமும் முடிவுக்கு வந்தது. எமது நாட்டில் பயங் கரவாதம் மீண்டும் தலைதூக்காமல் இருப் பதை உறுதிசெய்வதாயின் தமிழ் பேசும் மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்குப் பின்வரும் காரணிகளை அடிப்படையாகக் கொண்ட நிரந்தரத் தீர்வுத்திட்டம் பெற்றுக்கொடுக் கப்பட வேண்டும்.
அ) சகல இனத்தவர்களுக்கும் பாதுகாப்புடன் வாழக்கூடிய சூழல் உருவாக்கப் பட்டு, மனிதப் பெறுமானங்களை மதிக் கின்ற இலங்கையர் என்ற தனித்துவத்தை ஊக்குவித்தல்.
ஆ) சகல இனத்தவர்களினதும் கலாசார புனிதத் தன்மையைப் பேணிப்பாது காத்தலும் மதத்தைப் பின்பற்றுதல், மொழியைப் பேணிப் பாதுகாத்து, வளர்ச்சியடையச் செய்து, தம் தனித்துவத்தை மேம்படுத்துதல் மற்றும் வெளிப்படுத்துவதற்கும் அவர்களுக்கு வாய்ப்பளித்தல்.
இ) சகல பிரஜைகளுக்கும் எதுவித பேதமுமின்றி, சட்டத்தின் முன் சமத்துவம் மற்றும் நியதி பேணப்பட்டு முழுமையாக மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகளை அனுபவிக்கும் சுதந்திரம்.
ஈ) தமது விருப்பத்தின் பிரகாரம் தான் விரும்பிய அரச கரும மொழியில் கருமமாற்றுவதற்கான உரிமை.
உ)சகலரும் சமமாக மதிக்கப்படுவதை ஊக்குவித்தல்
* பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கும் அதேவேளை, சகல பிரஜைகளுக்கும் தத்தமது மதங்களை சுதந்திரமாகவும், தடையின்றியும் பின்பற்றும் உரிமையை ஊக்குவித்தல்.
* ஓர் இனத்தை அல்லது மதத்தைவிடவும் கூடுதலான சலுகையை மற்றொரு மதத்திற்கோ அல்லது சமூகத்திற்கோ காட்டாதிருத்தல்.
* ஓர் இனத்தை அல்லது மதத்தை விடவும் கூடுதலான பொறுப்புகளை மற்றுமொரு இனத்திற்கோ அல்லது மதத்திற்கோ வழங்காதிருத்தல்.
ஊ) புதிய நாடாளுமன்றத்தின் மூலம் இலங்கை வாழ் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய அரசியல் யாப்புச் சட்டம் ஒன்றை சட்டமாக்கும்வரை நடைமுறையிலுள்ள அரசியல் யாப்புச் சட்டத்தை அமுல்படுத்தல்.
எ) மாகாண மற்றும் அங்கு வாழும் இனங்களை நிலையான பன்முக ஜனநாயகத்தின் சரத்திற்குப் பங்காளிகளாக்குவதனை ஊக்குவிப்பதனூடாக சகல பிரஜைகளுக்கும் மத்திய,மாகாணசபை மற்றும் உள்ளூராட்சிமன்ற மட்டத்தில் தேசத்திற்கு உயிரூட்டும் செயற்பாட்டால் முழுமையாக இணைந்து செயற்படுவதனை உறுதிப்படுத்தல்.
ஏ) பிரிக்கப்படாத இலங்கைக்குள் சிங்கள,தமிழ்,முஸ்லிம், பறங்கியர்கள் ஆகிய சகல இனத்தவர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளும் முறை ஒன்றை ஏற்படுத்தல். போதியளவு நிதி மற்றும் நீதி அதிகாரம் உட்பட மாகாணத்தில் சுபீட்சம் மற்றும் நல்லாட்சிகளைக் கொண்டுநடத்துவதற்கும் சமூகப் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்குத் தேவையான பரவலான அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குதல் என்று கூறப்பட்டுள்ளது.
மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பெ.சந்திரசேகரனுக்கு புளொட் அஞ்சலி-

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியில் நீண்டகாலமாக செயலாற்றிவந்த சந்திரசேகரன் அவர்கள், இ.தொ.காவின் இளைஞர் அணித் தலைவராகவும் செயற்பட்டு வந்தார். இந்நிலையில் மலையக மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யம் மிக்க தலைவர்களில் ஒருவராக விளங்கினார். 1989ம் ஆண்டு முற்பகுதியில் இ.தொ.காவின் தலவாக்கலை அமைப்பாளராக செயற்பட்டு வந்த அவர், இ.தொ.காவுடன் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக அக்கட்சியிலிருந்து வெளியேறியிருந்தார். 1989ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின்போது எமது புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் நங்கூரம் சின்னத்தில் போட்டியிட்டார்.
அதேயாண்டில் ஸ்தாபிக்கப்பட்ட மலையக மக்கள் முன்னணியின் தலைவராக செயலாற்றி வந்த சந்திரசேகரன் அவர்கள். 1994ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவானார். இக்காலத்தில் பிரதமராக இருந்த சந்திரிக்கா பண்டாரநாயக்க அரசாங்கம் ஆட்சியமைப்பதற்கு இவரது ஒரு ஆசனமே உதவியாக அமைந்தது.
2001ம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலின்போது ஐ.தே.கட்சியுடன் இணைந்து போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவானதுடன், சமூக அபிவிருத்தியமைச்சராக 2006ம் ஆண்டுவரை கடமையாற்றினார். அதன் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்துகொண்ட அவர், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் சமுதாய அபிவிருத்தி மற்றும் சமூக அநீதி ஒழிப்பு அமைச்சராக இறுதிவரை பதவி வகித்து வந்தார்.
இதேவேளை மலையகத்தில் பிரசித்தி பெற்ற அரசியல்வாதியாக திகழ்ந்த சந்திரசேகரன் அவர்கள், பல்வேறு போராட்டங்களிலும் பங்குபற்றியுள்ளார். கடந்த 1992ம் ஆண்டுகாலப் பகுதியில் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் மாகாணசபைத் தேர்தலில் வெற்றிபெற்றமை அவரது அரசியல் வாழ்க்கையில் முக்கியமான கட்டமாக கருதப்படுகிறது.
தமிழ்மக்களின் நலனுக்காக பெரிதும் பாடுபட்டுவந்த சந்திரசேகரன் அவர்கள், மலையகத் தமிழ் மக்களின் பிரச்சினைகளில் மாத்திரமன்றி வடகிழக்கு தமிழ்மக்களின் பிரச்சினைகளிலும் மிகவும் கரிசனையுடன் செயற்பட்டு வந்ததுடன், தமிழ் மக்களின் போராட்டத்திற்கு சார்பாகவும் குரல்கொடுத்து வந்தார். அத்துடன் உலகம் முழுவதிலும் தமிழர்கள் தொடர்பிலான பல்வேறு மாநாடுகளில் பங்குபற்றிய அவர், தமிழ் மக்களுக்கான அதிகாரப்பகிர்வு தொடர்பில் எடுத்துக் கூறுவதற்கு ஐரோப்பிய நாடுகள் பலவற்றுக்கும் விஜயம் செய்து தமிழ்மக்களுக்கான தீர்வினை வலியுறுத்துவதில் பெரும் பங்காற்றினார்.
இந்நிலையில் சந்திரசேகரன் அவர்கள், இறுதியாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதியுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின்போது, மலையக மக்களுக்கு தனியான பல்கலைக் கழகம் அமைத்தல், அதிகரித்த உள்ளுராட்சி மன்றங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் அவரது பிரதான கோரிக்கைகளாக அமைந்திருந்தன. இத்தகைய ஒரு சமூக அக்கறை கொண்ட அன்னாருடைய இழப்பானது இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்கள் அனைவருக்குமே ஒரு பாரிய இழப்பாகும்.
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர், நண்பர்களுக்கு புளொட் அமைப்பினராகிய நாம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகளையும் காணிக்கையாக்குகின்றோம்.
புலிகளின் தலைவர் பிரபாகரனால் தோழர் சுந்தரம் படுகொலை செய்யப்பட்ட 28வது ஆண்டு நினைவுநாள்!!!

பொன்சேகா தமது உத்தேச திட்டத்தை இன்று யாழ்.நகரில் அறிவிப்பார்

மேலும் ஆயுதக் குழுக்கள் அனைத்தையும் கலைத்து அவற்றிடமிருந்து ஆயுதங்களைப் பறிமுதல் செய்வது குறித்தும் அவர் இன்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் வைத்து அறிவிப்பார் எனத் தெரியவந்தது.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள எதிர்க்கட்சி களின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா இங்கு வைத்து இந்த அறிவிப்புகளை விடுப்பார் எனத் தெரிகின்றது.
சரத் பொன்சேகாவுடன் இன்று யாழ்ப்பாணம் வரும் எதிர்க் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணே சன், ரவூப் ஹக்கீம், டாக்டர் ஜயலத் ஜயவர்த்தனா ஆகியோர் மதத் தலைவர்கள், அரச சார்பற்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுடன் சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளனர். யாழ்ப்பாணத்திற்கான தமது விஜ யத்தை இன்று காலை 9 மணிக்கு நல்லூர் விஜயத்துடன் எதிர்க்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகா ஆரம்பிக்கவுள்ளார். பின்னர் காலை 10.00 மணிக்கு யாழ். ஆயரைச் சந்திக்கவுள்ள அவர்கள் அதன் பின் னர் யாழ். அரசசார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளனர்.
பிற்பகல் 2.00 மணிக்கு மானிப்பாய் வீதியில் உள்ள எதிர்க்கட்சிகளின் அலுவல கத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் இவர்கள் கலந்துகொள்வர்.
பின்னர் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெறும் பொதுக்கூட்டத்தில் உரை யாற்றவுள்ள எதிரணித்தலைவர்கள் மாலை 6.00 மணியளவில் பத்திரிகையாளர் களைச் சந்திக்கவுள்ளனர். யாழ். விஜயத்தின்போது யுத்தத்தி னால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தனது உடனடி நிவாரணத் திட்டங்கள் குறித்து சரத் பொன்சேகா அறிவிப்பார் எனக் கூறப்பட்டது. மக்களை மீளக் குடியமர்த்துவதைத் துரிதப்படுத்துவது, தமது வீடுகளை இழந்த மக்களுக்கு மாற்றுத் தங்குமிடங்களை வழங்குவது, நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவது போன்ற தமது யோசனை களையும் சரத் பொன்சேகா அங்கு வெளி யிடுவார் எனத்தெரிவிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் உட்பட வடமாகாணத் தில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்துவது, தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு படையினரைக் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் மட்டும் நிறுத்தி ஏனைய இடங்களிலிருந்து அவர்களைப் படிப்படியாகக் குறைப்பது ஆகியவை பற்றிய தமது யோசனைத் திட்டங்களை யும் அவர் முன்வைப்பார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
31 டிசம்பர், 2009
ஜனாதிபதி தேர்தல் பிரச்சார மேடைகளில் எதிர்கட்சித் தலைவர்கள் பலரும் ஆட்சிமாற்றம் பற்றியே பேசிவருகின்றனர். இவர்கள் கருதும் ஆட்சி மாற்றம் என்பது ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகா வெற்றி பெறுவது மட்டும்தானா?.
ஆட்சி மாற்றம் ஏற்படுவதானால் பொது தேர்தலிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை ஆட்சியில் இருந்து இறக்கவேண்டும். இறக்கியபின்னர் அடுத்து ஆட்சி அமைக்கக்கூடிய கட்சி ஐக்கிய தேசியக் கட்சியே. இந்த ஆட்சி மாற்றம் சிங்கள மக்களுக்கு தேவையாக இருக்கலாம். ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஆட்சி மாற்றதால் தமிழ் மக்களுக்கு ஏதாவது நன்மையுண்டா என்பதுதான் மக்கள் மனதில் எழும் சந்தேகம்.
பிரித்தானியர் பெரும்பான்மை இனத்தவரின் கைகளில் இலங்கை ஆட்சியை ஒப்படைத்து சென்றபின்னர் இதுவரையும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுமே மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன. ஆனால் இரண்டு கட்சி ஆட்சியிலுமே இனப்பிரச்சினை கொழுந்து விட்டெரிய எண்ணை ஊற்றப்பட்டது குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்காலத்திலேயே தமிழ் மக்கள் பலதடவை வன்முறைகளுக்கு உள்ளாகியுள்ளனர்.
பலதடவைகள் இனப்பிரச்சினைக்கு தீர்காணும் முயற்சியில் பல ஒப்பந்தங்கள் ஏற்பட்டபோதும் அவை அப்போதுள்ள எதிர்கட்சிகளினால் முறியடிக்கப்பட்டன. தமிழ் மக்களுக்கு இன்றுள்ள முக்கிய பிரச்சினை இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வேயாகும்.
அரசியல் மாற்றத்தால் இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா? இதுதான் தமிழ் மக்கள் முன்நிற்கும் கேள்வியாகும். அதேவேளை ஆட்சிமாற்றத்தைக் கோரும் கட்சிகள் இனப்பிரச்சினை தொடர்பாக கடந்த காலங்களில் அவர்கள் என்ன நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார்கள் என்பதுதான் இன்று ஆராயவேண்டிய விடயமாகும்.
ஜனாதிபதி வேட்பாளராக சரத் பொன்சேகாவை நிறுத்தியுள்ள எதிர்கட்சிகளில் பிரதான கட்சிகள் ஐக்கிய தேசியக்கட்சிஇ மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) ஆகிய இரண்டுமேயாகும். இனப்பிரச்சினை தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு திடமான நிலைப்பாடு கிடையாது. ஜே.வி.பி.யை பொறுத்தமட்டில் அவர்கள் இனப்பிரச்சினைக்கு தீர்வாக 13வது அரசியலமைப்பு திருத்தத்தையே நடைமுறைப்படுத்தக்கூடாது என்ற தீவிர நிலைப்பாட்டை கொண்டுள்ள கட்சியாகும்.
இனப்பிரச்சினைக்கு தீர்வாக 13வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு மேலான தீர்வை வைப்பதாக சரத் பொன்சேகா தெரிவிக்கிறார். இதை ஜே.வி.பி ஏற்றுக்கொள்கிறதா என்பதை சரத் பொன்சேகா தெளிவு படுத்தவேண்டும். சரத் பொன்சேகாவை இயக்கும் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சிஇ ஜே.வி.பி ஆகிய இருகட்சிகளும் மகிந்த ராஜபக்ஷாவை ஜனாதிபதி பதவியிலிருந்து இறக்குவதிலேயே ஒத்த கருத்துடையவர்களாக காணப்படுகின்றனர். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சிபிடத்தில் அமர்த்துவது ஜே.வி;பி;யின் நோக்கமாக இருக்காது.
சரத் பொன்சேகா வெற்றி பெற்றால் நாடாளுமன்றத்தைக் கலைத்து காபந்து அரசை உருவாக்கவேண்டும் என்றும் அதில் ரணிலைப் பிரதமராக்கவேண்டும் என்ற நிபந்தனையை ஐக்கிய தேசியக் கட்சி சரத் பொன்சேகாவிடம் வைத்திருந்தது. ஆரம்பத்தில் சரத் பொன்சேகா அந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டிருந்த போதிலும் இப்போது ஜே.வி.பி.யின் நிர்ப்பந்தத்தால் அந்த நிபந்தனையை கைவிடவேண்டிய நிலைக்கு சரத்பொன்சேகா வந்துள்ளார்.
சரத் பொன்சேகாவை ஆதரித்து கொழும்பில் ஜே.வி.பி. ஒழுங்கு செய்திருந்த பேணியில் பேசிய சரத் பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றபின்னர் அமையும் தற்காலிக அரசு பிரதமர் இல்லாத தற்காலிக அரசாகவே அமையும் எனத் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
எதிர்கட்சிகள் ஆட்சிமாற்றம் பற்றி பேசுகின்றரே அன்றி ஆட்சி மாற்றத்தின் பின் ஏற்படும் அரசு எப்படி அமையப்போகிறது என்பது பற்றி யாரும் தெரிவிக்கவில்லை. ஜனாதிபதி முறையை ஒழிக்கப்போவதாக கூறும் சரத் பொன்சேகா ஜனாதிபதிமுறைக்குப் பதிலாக ஏற்படும் புதிய அமைப்பு எப்படி இருக்கும் என்பது பற்றி எந்தக் கருத்தையும் அவர் தெரிவிக்கவில்லை. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி அதுபற்றி ஒரு கருத்தைத் தெரிவிக்கிறது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைக்கு பதிலாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்படும் பிரதமர் தலைமையிலான பாராளுமன்ற அரசமைப்பை உருவாக்குவதாக எதிர்கட்சித் தலைவர் ரணில் தெரிவிக்கிறார்.
அப்படியானால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்குப் பதிலாக அதே அதிகாரங்களை பிரதமருக்கு கொடுப்பதினால் என்ன மாற்றம் ஏற்படப்போகிறது.? இதை ஜே.வி.பி. ஏற்றுக்கொள்ளுமா? இந்தக் கேள்விகளுக்கு மனோகணேசனிடம் இருந்து மக்கள் பதிலை எதிர்பார்க்கிறார்கள்.

ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவிடம் 500மில்லியன் ரூபா நஷ்டஈடுகோரி முன்னாள் கடற்படை தளபதியும் தற்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளருமான வசந்த கரன்னாகொட தனது சட்டத்தரணி ஊடாக கோரிக்கை கடிதமொன்றை அனுப்பியுள்ளார். தனக்கு அபத்தமாகவும், அபகீர்த்தி ஏற்படும் வகையில் பொதுமக்களின் பார்வையில் தனக்கு அவமதிப்பு ஏற்படும் வகையிலும் சரத்பொன்சேகா சிரச தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தமைக்காகவே அவர் இவ்வாறு கோரிக்கைக் கடிதம் அனுப்பியுள்ளார். தனது சட்டத்தரணி அத்துல டிசில்வா மூலம் குறிப்பிட்ட பணம் 14நாட்களுக்குள் செலுத்தப்பட தவறினால் 500மில்லியன் ரூபாவை வசூலிக்க சட்டநடவடிக்கையில் இறங்கநேரிடும் என்று அக்கோரிக்கைக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. முன்னாள் கடற்படைத் தளபதியின் அறிவித்தலின்பேரில் தனது கட்சிக்காரருக்கு மேற்படி பேட்டியில் கூறப்பட்ட பிதற்றல்கள் வேண்டுமென்றே செய்யப்பட்டதாகவும் தனது கட்சிக்காரரின் கண்ணியம் நற்பெயர் மற்றும் பொதுமக்களிடையிலான மதிப்புக்கு களங்கம் ஏற்படுத்துவதுடன் மீளப்பெற முடியாத அளவுக்கான பாதிப்பையும் தோற்றுவித்துள்ளது என்றும் முன்னாள் கடற்படை தளபதியின் சட்டத்தரணி அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.