2 ஜனவரி, 2010

மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பெ.சந்திரசேகரனுக்கு புளொட் அஞ்சலி-

கொழும்பில் இன்றுஅதிகாலை காலமான மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், சமுதாய அபிவிருத்தி மற்றும் சமூக அநீதி ஒழிப்பு அமைச்சருமான பெரியசாமி சந்திரசேகரனுக்கு புளொட் அமைப்பு தனது அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறது. 52வயதான அமைச்சர் பெ.சந்திரசேகரன் இன்றையதினம் அதிகாலை மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபின் காலமானார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியில் நீண்டகாலமாக செயலாற்றிவந்த சந்திரசேகரன் அவர்கள், இ.தொ.காவின் இளைஞர் அணித் தலைவராகவும் செயற்பட்டு வந்தார். இந்நிலையில் மலையக மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யம் மிக்க தலைவர்களில் ஒருவராக விளங்கினார். 1989ம் ஆண்டு முற்பகுதியில் இ.தொ.காவின் தலவாக்கலை அமைப்பாளராக செயற்பட்டு வந்த அவர், இ.தொ.காவுடன் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக அக்கட்சியிலிருந்து வெளியேறியிருந்தார். 1989ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின்போது எமது புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் நங்கூரம் சின்னத்தில் போட்டியிட்டார்.

அதேயாண்டில் ஸ்தாபிக்கப்பட்ட மலையக மக்கள் முன்னணியின் தலைவராக செயலாற்றி வந்த சந்திரசேகரன் அவர்கள். 1994ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவானார். இக்காலத்தில் பிரதமராக இருந்த சந்திரிக்கா பண்டாரநாயக்க அரசாங்கம் ஆட்சியமைப்பதற்கு இவரது ஒரு ஆசனமே உதவியாக அமைந்தது.

2001ம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலின்போது ஐ.தே.கட்சியுடன் இணைந்து போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவானதுடன், சமூக அபிவிருத்தியமைச்சராக 2006ம் ஆண்டுவரை கடமையாற்றினார். அதன் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்துகொண்ட அவர், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் சமுதாய அபிவிருத்தி மற்றும் சமூக அநீதி ஒழிப்பு அமைச்சராக இறுதிவரை பதவி வகித்து வந்தார்.

இதேவேளை மலையகத்தில் பிரசித்தி பெற்ற அரசியல்வாதியாக திகழ்ந்த சந்திரசேகரன் அவர்கள், பல்வேறு போராட்டங்களிலும் பங்குபற்றியுள்ளார். கடந்த 1992ம் ஆண்டுகாலப் பகுதியில் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் மாகாணசபைத் தேர்தலில் வெற்றிபெற்றமை அவரது அரசியல் வாழ்க்கையில் முக்கியமான கட்டமாக கருதப்படுகிறது.

தமிழ்மக்களின் நலனுக்காக பெரிதும் பாடுபட்டுவந்த சந்திரசேகரன் அவர்கள், மலையகத் தமிழ் மக்களின் பிரச்சினைகளில் மாத்திரமன்றி வடகிழக்கு தமிழ்மக்களின் பிரச்சினைகளிலும் மிகவும் கரிசனையுடன் செயற்பட்டு வந்ததுடன், தமிழ் மக்களின் போராட்டத்திற்கு சார்பாகவும் குரல்கொடுத்து வந்தார். அத்துடன் உலகம் முழுவதிலும் தமிழர்கள் தொடர்பிலான பல்வேறு மாநாடுகளில் பங்குபற்றிய அவர், தமிழ் மக்களுக்கான அதிகாரப்பகிர்வு தொடர்பில் எடுத்துக் கூறுவதற்கு ஐரோப்பிய நாடுகள் பலவற்றுக்கும் விஜயம் செய்து தமிழ்மக்களுக்கான தீர்வினை வலியுறுத்துவதில் பெரும் பங்காற்றினார்.

இந்நிலையில் சந்திரசேகரன் அவர்கள், இறுதியாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதியுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின்போது, மலையக மக்களுக்கு தனியான பல்கலைக் கழகம் அமைத்தல், அதிகரித்த உள்ளுராட்சி மன்றங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் அவரது பிரதான கோரிக்கைகளாக அமைந்திருந்தன. இத்தகைய ஒரு சமூக அக்கறை கொண்ட அன்னாருடைய இழப்பானது இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்கள் அனைவருக்குமே ஒரு பாரிய இழப்பாகும்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர், நண்பர்களுக்கு புளொட் அமைப்பினராகிய நாம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகளையும் காணிக்கையாக்குகின்றோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக