மலையக மக்களுக்கான அபிவிருத்திப் பணிகளை எதிர்காலத்தில் மேற்கொள்ளப் போவதாகச் சரத் பொன்சேகா கூறுகிறார். ஆனால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவோ அப்பணிகளை கடந்த 4 வருடங்களாக முன்னெடுத்து வருகிறார். அதுவே ஜனாதிபதிக்குப் பலமாகவுள்ளதென இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்தார்.
புதுவருடத்தை முன்னிட்டு கொழும்பு 05, வஜிரா வீதியிலுள்ள அவ் அமைச்சின் செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு விடையளிக்கும் போதே இதனை அவர் தெரிவித்தார்.
அச்சந்திப்பின் போது ஊடகவியலாளர்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கே ஆதரவு வழங்க இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இம்முடிவு தொடர்பாக மாற்றுக் கருத்து கொண்டுள்ள சிலர் எமது கட்சியை விட்டு விலகிச் சென்றுள்ளனர். அதற்காக அவர்கள் பல்வேறு கருத்துகளை முன்வைத்துள்ள போதிலும் அவை திருப்திகரமானதாகவில்லை. அவர்கள் கூறும் காரணங்களின் படி அவர்கள் தேர்தல் அறிவிப்பின் முன்னரோ, அல்லது தேர்தல் முடிந்த பின்னரோ கட்சியை விட்டு விலகிச் சென்றிருக்க வேண்டும். ஆனால், தேர்தல் அறிவிப்பின் பின் அவர்கள் வெளியேறியமை அவர்களின் சுயநலப் போக்கையே வெளிக்காட்டுகின்றது.
அதைத் தவிரவும், எமது கட்சி எமது பாட்டனார் சௌமியமூர்த்தி தொண்டமான் காலம் முதல் ஒரே கொள்கையில் உறுதியாகவுள்ளது. கொடுத்த வாக்கை மீறுவதில்லை. அதே நிலைப்பாட்டிலேயே இன்றும் உள்ளோம்.அத்துடன் எமது கட்சி உறுப்பினர்கள் மீது உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தோம். அவர்கள் கட்சியை விட்டு வெளியேறுவார்கள் என எதிர்பார்த்திருக்கவில்லை. வெளியேறுபவர்களை தடுத்து நிறுத்தவும் எம்மால் முடியாது. அவர்கள் வெளியேறியமைக்கான சரியான காரணமும் தெரியாது. அந்தக் காரணத்தை அவர்களிடமே கேட்க வேண்டும் அல்லது நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.
ஆனால், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது மகிந்த ராஜபக்ஷ மலையக மக்களின் பெரும்பான்மை வாக்குப் பலத்துடன் வெற்றி பெறுவார் என்பது உறுதி. ஏனெனில் கடந்த 4 வருடங்களில் அத்தகைய பெறுமதி மிக்க அபிவிருத்திப் பணிகளை மலையகத்தில் மேற்கொண்டுள்ளாரெனக் கூறினார்.தொடர்ந்து, மேலும் சில உறுப்பினர்கள் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை விட்டு வெளியேறப் போவதாக ஊகங்கள் வெளியிடப்படுவது தொடர்பாக அமைச்சரிடம் கருத்துக் கேட்டபோது அவ்வாறு யாரும் வெளியேற மாட்டார்கள் என நம்புவதாகவும் விலகிப் போனாலும் தன்னால் தடுக்க இயலாதெனவும் ஆனால் அவ்வாறு விலகுபவர்களால் ஆலமரம் போன்ற கட்சிக்கு எவ்வித பாதிப்புமில்லையெனவும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக