31 டிசம்பர், 2009

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக அரச தாதியர்சங்கம் ஆர்ப்பாட்டம்-

அரச தாதியர் மேற்கொண்டுவரும் தொழிற்சங்க நடவடிக்கையானது நண்பகல் 12மணிமுதல் 1மணிவரையில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. நாட்டிலுள்ள 15அரச வைத்தியசாலைகளுக்கு முன்பாக ஒரே நேரத்தில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக அரச தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார். அத்துடன் எதிர்வரும் 06ம் திகதி மற்றுமொரு எதிர்ப்பு நடவடிக்கையினையும், எதிர்வரும் 12ம் திகதி கொழும்பில் பிறிதொரு எதிர்ப்பு நடவடிக்கையினையும் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தாதியர் சேவைக்கு ஆட்களைச் சேர்த்துக்கொள்ளும் முறை, முதலாவது தரப்பிற்கான பதவியுயர்வை 14வருட சேவைக்காலத்தில் பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட ஆறு கோரிக்கைகளை முன்வைத்தே இந்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

திருமலை மீனவர்களுக்கு மீன்பிடித்தடை நீக்கம், யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு நீக்கம்-
திருகோணமலைக் கடற்பரப்பில் மீன்பிடித் தடையானது முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜேவிக்கிரம தெரிவித்துள்ளார். மீனவச் சங்கங்களுடன் கிழக்கு மாகாண ஆளுநர் இன்றையதினம் காலையில் நடத்திய கலந்துரையாடலின்போதே இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். இந்தவகையில் திருமலையில் சகல பகுதிகளுக்கும் சென்று மீன்பிடிப்பதற்கு மீனவர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. யாழ். குடாநாட்டில் நாளை நள்ளிரவுமுதல் ஊரடங்கு முற்றாக நீக்கப்படும் என இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்தியநிலையத்தில் இன்றுபிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.. இதுவரை காலமும் நள்ளிரவு 12.00மணிமுதல் அதிகாலை 4.00மணிவரை யாழ்.குடாநாட்டில் ஊரடங்கு அமுலில் இருந்து வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்கென யாழ்ப்பாணம் செல்கின்றனர் வேட்பாளர்கள்-

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாண குடாநாட்டிற்கு எதிர்வரும் தினங்களில் விஜயம் செய்யவுள்ளனர். இந்த வகையில் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரும் இடதுசாரி முன்னணியின் தலைவருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன 2010, ஜனவரி முதலாம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்கிறார். அதுபோல் எதிர்க்கட்சி பொதுவேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகா ஜனவரி 02ம் திகதியும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்வரும் ஜனவரி 18இலும் யாழ்ப்பாணம் செல்லவுள்ளனர். இவர்கள் யாழ். குடாநாட்டில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளனர்.
முன்னாள் கடற்படைத்தளபதி ஜெனரல் சரத்பொன்சேகாவிடம் நட்டஈடு கோருகிறார்-

ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவிடம் 500மில்லியன் ரூபா நஷ்டஈடுகோரி முன்னாள் கடற்படை தளபதியும் தற்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளருமான வசந்த கரன்னாகொட தனது சட்டத்தரணி ஊடாக கோரிக்கை கடிதமொன்றை அனுப்பியுள்ளார். தனக்கு அபத்தமாகவும், அபகீர்த்தி ஏற்படும் வகையில் பொதுமக்களின் பார்வையில் தனக்கு அவமதிப்பு ஏற்படும் வகையிலும் சரத்பொன்சேகா சிரச தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தமைக்காகவே அவர் இவ்வாறு கோரிக்கைக் கடிதம் அனுப்பியுள்ளார். தனது சட்டத்தரணி அத்துல டிசில்வா மூலம் குறிப்பிட்ட பணம் 14நாட்களுக்குள் செலுத்தப்பட தவறினால் 500மில்லியன் ரூபாவை வசூலிக்க சட்டநடவடிக்கையில் இறங்கநேரிடும் என்று அக்கோரிக்கைக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. முன்னாள் கடற்படைத் தளபதியின் அறிவித்தலின்பேரில் தனது கட்சிக்காரருக்கு மேற்படி பேட்டியில் கூறப்பட்ட பிதற்றல்கள் வேண்டுமென்றே செய்யப்பட்டதாகவும் தனது கட்சிக்காரரின் கண்ணியம் நற்பெயர் மற்றும் பொதுமக்களிடையிலான மதிப்புக்கு களங்கம் ஏற்படுத்துவதுடன் மீளப்பெற முடியாத அளவுக்கான பாதிப்பையும் தோற்றுவித்துள்ளது என்றும் முன்னாள் கடற்படை தளபதியின் சட்டத்தரணி அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கடத்தப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்ட மருதானை ஐ.தே.கட்சி அமைப்பாளர் கைது-

ஐக்கிய தேசியக் கட்சியின் சுதுவெல தேர்தல் தொகுதி அமைப்பாளர் கித்சிறி ராஜபக்ஷ பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கித்சிறி ராஜபக்ஷ இனந்தெரியாத நபர்களினால் கடத்திச் செல்லப்பட்டதாக முன்னர் தகவல் வெளியிடப்பட்டது. இதனைத் தொடாட்ந்து மருதானைப் பொலீசிலும் கட்சியினரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் கித்சிறி ராஜபக்ஷ பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினால் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மருதானைப் பகுதியில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப்பிரிவினர் அவரை கைதுசெய்ததாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சகர் ஐ.எம்.கருணாரத்ன தெரிவித்துள்ளார். சுதுவெல பகுதியில் இடம்பெற்ற பல்வேறு திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் கித்சிறி ராஜபக்ஷவிற்கு தொடர்பிருப்பதாக விசேட அதிரடிப்படையினர் அறிவித்துள்ளனர். முகத்தை மூடிய குழுவொன்று கித்சிறி ராஜபக்ஷவை கடத்திச் சென்றதாக அவரது பாரியாரும் ஆதரவாளர்களும் முன்னர் தகவல் வெளியிட்டிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக