31 டிசம்பர், 2009

30.12.2009 தாயகக்குரல் 32


இலங்கையில் ஆட்சி மாற்றத்திற்கான அவசியத்தை புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் புரிந்து கொண்டு தமது அரசியல் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என புலம் பெயர் தமிழர்களிடமும்; இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் மனச்சாட்சிக்கு வாக்களிக்காமல் அரசியல் மாற்றத்திற்கு வாக்களிக்கும்படியும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் தெரிவிக்கிறார்.

ஜனாதிபதி தேர்தல் பிரச்சார மேடைகளில் எதிர்கட்சித் தலைவர்கள் பலரும் ஆட்சிமாற்றம் பற்றியே பேசிவருகின்றனர். இவர்கள் கருதும் ஆட்சி மாற்றம் என்பது ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகா வெற்றி பெறுவது மட்டும்தானா?.

ஆட்சி மாற்றம் ஏற்படுவதானால் பொது தேர்தலிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை ஆட்சியில் இருந்து இறக்கவேண்டும். இறக்கியபின்னர் அடுத்து ஆட்சி அமைக்கக்கூடிய கட்சி ஐக்கிய தேசியக் கட்சியே. இந்த ஆட்சி மாற்றம் சிங்கள மக்களுக்கு தேவையாக இருக்கலாம். ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஆட்சி மாற்றதால் தமிழ் மக்களுக்கு ஏதாவது நன்மையுண்டா என்பதுதான் மக்கள் மனதில் எழும் சந்தேகம்.

பிரித்தானியர் பெரும்பான்மை இனத்தவரின் கைகளில் இலங்கை ஆட்சியை ஒப்படைத்து சென்றபின்னர் இதுவரையும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுமே மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன. ஆனால் இரண்டு கட்சி ஆட்சியிலுமே இனப்பிரச்சினை கொழுந்து விட்டெரிய எண்ணை ஊற்றப்பட்டது குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்காலத்திலேயே தமிழ் மக்கள் பலதடவை வன்முறைகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

பலதடவைகள் இனப்பிரச்சினைக்கு தீர்காணும் முயற்சியில் பல ஒப்பந்தங்கள் ஏற்பட்டபோதும் அவை அப்போதுள்ள எதிர்கட்சிகளினால் முறியடிக்கப்பட்டன. தமிழ் மக்களுக்கு இன்றுள்ள முக்கிய பிரச்சினை இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வேயாகும்.

அரசியல் மாற்றத்தால் இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா? இதுதான் தமிழ் மக்கள் முன்நிற்கும் கேள்வியாகும். அதேவேளை ஆட்சிமாற்றத்தைக் கோரும் கட்சிகள் இனப்பிரச்சினை தொடர்பாக கடந்த காலங்களில் அவர்கள் என்ன நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார்கள் என்பதுதான் இன்று ஆராயவேண்டிய விடயமாகும்.

ஜனாதிபதி வேட்பாளராக சரத் பொன்சேகாவை நிறுத்தியுள்ள எதிர்கட்சிகளில் பிரதான கட்சிகள் ஐக்கிய தேசியக்கட்சிஇ மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) ஆகிய இரண்டுமேயாகும். இனப்பிரச்சினை தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு திடமான நிலைப்பாடு கிடையாது. ஜே.வி.பி.யை பொறுத்தமட்டில் அவர்கள் இனப்பிரச்சினைக்கு தீர்வாக 13வது அரசியலமைப்பு திருத்தத்தையே நடைமுறைப்படுத்தக்கூடாது என்ற தீவிர நிலைப்பாட்டை கொண்டுள்ள கட்சியாகும்.

இனப்பிரச்சினைக்கு தீர்வாக 13வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு மேலான தீர்வை வைப்பதாக சரத் பொன்சேகா தெரிவிக்கிறார். இதை ஜே.வி.பி ஏற்றுக்கொள்கிறதா என்பதை சரத் பொன்சேகா தெளிவு படுத்தவேண்டும். சரத் பொன்சேகாவை இயக்கும் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சிஇ ஜே.வி.பி ஆகிய இருகட்சிகளும் மகிந்த ராஜபக்ஷாவை ஜனாதிபதி பதவியிலிருந்து இறக்குவதிலேயே ஒத்த கருத்துடையவர்களாக காணப்படுகின்றனர். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சிபிடத்தில் அமர்த்துவது ஜே.வி;பி;யின் நோக்கமாக இருக்காது.

சரத் பொன்சேகா வெற்றி பெற்றால் நாடாளுமன்றத்தைக் கலைத்து காபந்து அரசை உருவாக்கவேண்டும் என்றும் அதில் ரணிலைப் பிரதமராக்கவேண்டும் என்ற நிபந்தனையை ஐக்கிய தேசியக் கட்சி சரத் பொன்சேகாவிடம் வைத்திருந்தது. ஆரம்பத்தில் சரத் பொன்சேகா அந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டிருந்த போதிலும் இப்போது ஜே.வி.பி.யின் நிர்ப்பந்தத்தால் அந்த நிபந்தனையை கைவிடவேண்டிய நிலைக்கு சரத்பொன்சேகா வந்துள்ளார்.

சரத் பொன்சேகாவை ஆதரித்து கொழும்பில் ஜே.வி.பி. ஒழுங்கு செய்திருந்த பேணியில் பேசிய சரத் பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றபின்னர் அமையும் தற்காலிக அரசு பிரதமர் இல்லாத தற்காலிக அரசாகவே அமையும் எனத் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

எதிர்கட்சிகள் ஆட்சிமாற்றம் பற்றி பேசுகின்றரே அன்றி ஆட்சி மாற்றத்தின் பின் ஏற்படும் அரசு எப்படி அமையப்போகிறது என்பது பற்றி யாரும் தெரிவிக்கவில்லை. ஜனாதிபதி முறையை ஒழிக்கப்போவதாக கூறும் சரத் பொன்சேகா ஜனாதிபதிமுறைக்குப் பதிலாக ஏற்படும் புதிய அமைப்பு எப்படி இருக்கும் என்பது பற்றி எந்தக் கருத்தையும் அவர் தெரிவிக்கவில்லை. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி அதுபற்றி ஒரு கருத்தைத் தெரிவிக்கிறது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைக்கு பதிலாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்படும் பிரதமர் தலைமையிலான பாராளுமன்ற அரசமைப்பை உருவாக்குவதாக எதிர்கட்சித் தலைவர் ரணில் தெரிவிக்கிறார்.

அப்படியானால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்குப் பதிலாக அதே அதிகாரங்களை பிரதமருக்கு கொடுப்பதினால் என்ன மாற்றம் ஏற்படப்போகிறது.? இதை ஜே.வி.பி. ஏற்றுக்கொள்ளுமா? இந்தக் கேள்விகளுக்கு மனோகணேசனிடம் இருந்து மக்கள் பதிலை எதிர்பார்க்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக