27 மே, 2011

பல்கலைக்கழகங்களை மூடியாவது பகிடிவதைக்கு முடிவு கட்டப்படும்

பல்கலைக்கழகங்களில் பகிடிவதை அடுத்த வருடம் முதல் முற்றாக நிறுத்தப்படும். பல்கலைக்கழகங்களை மூடியாவது இதற்கொரு முடிவு கட்டப்படும் என உயர் கல்வியமைச்சர் எஸ். பி. திசாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பல்கலைக்கழகங்களில் ஒரு சிறு குழுவினர் மேற்கொள்ளும் இத்தகைய அநாகரிகமான நடவடிக்கை களினால் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களுமே பாதிக்கப்படுவதாகத் தெரிவித்த அமைச்சர், இதற்கு தீர்க்கமான தீர்வு ஒன்று எட்டப்படும் எனவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று ஜே. வி. பி. எம். பி. அநுரகுமார திசாநாயக்க முன் வைத்த பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கவனயீர்ப்புப் பிரேரணைக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

சில பல்கலைக்கழகங்களில் பகிடிவதை என்ற பெயரில் மாணவ மாணவியர் பெரும் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். அண்மைக் காலமாக பெண்கள் மிக மோசமான விதத்தில் வதைக்கப்படுவதுடன் பல்கலைக்கழக வளாகத்துக்குள் ஆங்கிலத்தில் பேசுவதற்குக் கூட கட்டுப்பாடு விதிக்கப்பட்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர இனியும் இடமளிக்க முடியாது. அடுத்த வருடத்தில் இதற்கு முற்றுப் புள்ளி வைப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். தேவையேற்படின் பல்கலைக்கழகங்களை மூடியாவது இதற்கு தீர்க்கமான முடிவு கட்டப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக