27 மே, 2011

உத்தேச தனியார்துறை ஓய்வூதிய சட்டமூலம்:

50 வயதுக்கு உட்பட்ட ஊழியர்கள் இணைந்து கொள்வது கட்டாயம்

50 வயதுக்கு மேற்பட்டோர் விரும்பினால் சேரலாம் கலாநிதி பி.பி. ஜெயசுந்தரஅரசாங்கம் விரைவில் அமுல்படுத்த விருக்கும் தனியார்துறை ஊழியர்களுக்கான ஓய்வூதியத்திட்டத்தில் அங்கத்த வராக இணைந்து கொண்ட ஒருவர் 50 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட காலகட்ட த்தில் மரணமடைந்தால் அவரது மனைவிக்கு அவர் செலுத்திய ஓய்வூதியத் தொகையில் 60 சதவீதம் சேமிப்பு வழங்கப்படும்.

இதேவேளையில் 60 வயதை தாண்டிய பின்னர் ஓய்வூதியத்தை பெற்றுக் கொண்டிருப்பவர் மரணமடைந்தால் அவருக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் அவரது மனைவிக்கோ குடும்பத்தாருக்கோ கொடுக்கப்படமாட்டாதென்றும் நிதி திட்டமிடல் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.பி. ஜெயசுந்தர தெரிவித்தார்.

இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று நடந்த தனியார் துறை ஊழியர்களுக்கான ஓய்வூதியம் பற்றிய கருத்தரங்கில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

தனியார் ஓய்வூதியத் திட்டத்தில் அங்கத்தவராக சேர்ந்து கொள்ளும் ஒருவரின் ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம், மற்றும் பணிக்கொடை கொடுப்பனவுகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. சம்பந்தப் பட்ட அங்கத்தவர் இந்த சலுகைகளை தங்கு தடையின்றி பெற்றுக் கொள்ளவும் முடியும்.

இலங்கையில் நடைமுறையில் இருக்கும் தொழில் சட்டங்களுக்கு ஏற்ப பெரும்பாலும் ஒருவர் 57 வயதில் இளைப்பாறுவதுண்டு. எனினும், தனியார் ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்து கொண்ட ஒருவர் 57 வயதில் இந்த ஓய்வூதியத்தை பெறும் தகுதியை அடைய மாட்டார். அவர் 60 வயதை பூர்த்தி செய்த பின்னரே அவருக்கு இந்த ஓய்வூதியம் வழங்கப்படும்.

தனியார்துறை ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம் பற்றி மேலும் விளக்கமளித்த கலாநிதி பி.பி. ஜெயசுந்தர, இந்தச் சட்டத்தின்படி 50 வயதுக்கு குறைவான தனியார் துறை ஊழியர்கள் கட்டாயம் இவ் ஓய்வூதியத்திட்டத்தில் இணைந்து கொள்ள வேண்டுமென்றும், 50 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்கள் விரும்பினால் மாத்திரமே இந்த ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்து கொள்ள முடியும்.

ஆயினும் ஒருவர் 50 வயதிற்கு பிறகு இந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு சேர்ந்து 60 வயதாகும் போது இளைப்பாறினால் அவருக்கும் இந்த ஓய்வூதியத்திட்டத்தின் மூலம் பயனடைய முடியும். தனியார் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஒருவர் 10 ஆண்டு காலம் சேவையை பூர்த்தி செய்த பின்னரே ஓய்வூதியம் பெறும் தகுதியை பெறுகிறார்.

ஒருவர் 7 ஆண்டுகளை பூர்த்தி செய்த பின்னர், சேவையில் இருந்து இளைப்பாறும் சந்தர்ப்பத்தில் அவர் எஞ்சிய மூன்று ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டிய ஓய்வூதியக் கொடுப்பனவுகளை தமக்கு கிடைக்கும் ஊழியர்சேமலாப நிதிய, ஊழியர் நம்பிக்கை நிதிய மற்றும் பணிக்கொடையில் இருந்து அதற்கான மூன்று ஆண்டுகளுக்கான முழுத் தொகையையும் செலுத்திய பின்னர் ஓய்வூதியத்தை 60 ஆவது வயதில் பெறும் தகுதியை அடைவார்.

இந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு ஊழியர் ஒருவரின் அடிப்படை சம்பளத்தின் 2சதவீதத்தையும், அவர் பணியாற்றும் நிறுவனம் அவ்விதம் 2 சதவீதத்தையும் மாதாந்தம் செலுத்த வேண்டும்.

இந்த ஓய்வூதியத் திட்டத்தில் மூன்று வெவ்வேறு பிரிவைச் சேர்ந்தவர்கள் இணைந்து கொள்வதற்கான வாய்ப்பை பெறுகிறார்கள். ஒரு சாரார் தனியார் துறை நிறுவனமொன்றில் தொழில் புரிபவர்கள். இரண்டாவது பிரிவினர் வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கையர் ஆவர். மூன்றாவது பிரிவினர் சுயதொழில் முயற்சிகளில் ஈடுபடுபவர்களாவர்.

இதேவேளை, 2025ம் ஆண்டில் இலங்கையின் சனத்தொகையில் 60 வயதிற்கு கூடியவர்கள் 20சதவீதம் இருப்பார்கள். அவர்களுக்கு தங்கள் வாழ்க்கையின் இறுதிக் காலத்தை மற்றவர்களை நம்பி வாழாமல், கெளரவ மான முறையில் வாழ்க்கையை உதவும் உன்னத திட்டத்திற்கு அமையவே இந்த ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப் படுகிறதென்று அவர் மேலும் கூறினார்.

மஹிந்த சிந்தனை எண்ணக்கருவில் தனியார் துறை ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அளித்த வாக்குறுதி இன்று நிறைவேற்றப்படுகிறது.

இந்நிகழ்வில் கலாநிதி பி.பி. ஜெயசுந்தர, தொழில் உறவுகள் அமைச்சர் காமினி லொக்குகே மற்றும் தொழில் அமைச்சின் செயலாளரும், மேலும் சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக