27 மே, 2011

கொழும்பில் இன்று யுத்த வெற்றிவிழா




* இராணுவ, படைக்கலங்களுடன் அணிவகுப்பு

* விமானப்படையினர், கடற்படையினர் சாகசம்

* காலி முகத்திடலில் பிரமாண்ட வைபவம்

ஸாதிக் ஷிஹான்

யுத்த வெற்றியின் இரண்டாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெற்றி விழா அணிவகுப்பு மற்றும் தேசிய படை வீரர்கள் நினைவு தின நிகழ்வு வைபவங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று கொழும்பில் கோலாகலமாக நடைபெறுகிறது.

யுத்த வெற்றி அணிவகுப்பின் பிரதான வைபவம் காலை 8.30 மணிக்கு கொழும்பு காலி முகத்திடலிலும் தேசிய படை வீரர்கள் நினைவு தின பிரதான வைபவம் மாலை 4.30 மணிக்கு பாராளுமன்ற முன்றலில் அமைக்கப்பட்டுள்ள படை வீரர் நினைவு தூபிக்கு அருகிலும் இடம்பெறவுள்ளன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் பிரதமர் தி.மு. ஜயரட்ன பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி எயார் சீப் மார்ஷல் றொஹான் குணதிலக்க, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக்க திஸாநாயக்க, விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம, பொலிஸ் மா அதிபர் கலாநிதி மஹிந்த பாலசூரிய மற்றும் சிவில் பாதுகாப்புப் படை பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் உட்பட அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் வெளிநாட்டு உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

காலி முகத்திடலில் நடைபெறவுள்ள வெற்றி அணிவகுப்பு வைபவத்தில் இம்முறை இராணுவம், கடற்படை, விமானப் படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படைவீரர்கள் என்ற அடிப்படையில் 9035 வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இவற்றில் 108 அதிகாரிகளும், 8927 வீரர்களும் அடங்குவர்.

கிளிநொச்சி பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த மற்றும் மேஜர் ஜெனரல் சாகி கால்லகே ஆகியோர் வெற்றி அணிவகுப்புக்கு தலைமை வகிக்கவுள்ளனர்.

படைவீரர்களை கெளரவித்து நினைவு கூரும் வகையில் ஜனாதிபதி அவர்கள் விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.

இராணுவம்

இராணுவ அணி வகுப்பில் மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தின் சகல படைப்பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இராணுவத்தின் கனரக வாகனங்கள், கவச வாகனங்கள், ஆட்லரி படைப் பிரிவு உட்பட மனிதாபிமான நடவடிக்கையின் போது பயன்படுத்தப்பட்ட சகல உபகரணங்களும் இந்த அணிவகுப்பில் செல்லவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல தெரிவித்தார்.

கடற்படை

கடற்படை அணி வகுப்பில் மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையின் சகல படைப்பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

அணிவகுப்புக்கு மேலதிகமாக கடற்படைக்குச் சொந்தமான வேகப் படகுகளான ‘சுரனிமல’, ‘நந்தமித்ர’, படகுகள், ஆழ்கடல் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும். ‘சயுரல’, ‘சமுதுர’, ‘சாகர’, ‘சக்தி’ கப்பல்கள், ஜெட்லைனர் கப்பல், அதிவேக டோரா படகுகள் மற்றும் பெருந்தொகையான சிறிய ரக படகுகள் காலி முகத்திடல் கடலில் சாகசங்களை காண்பிக்கவுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் பிரசன்ன கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

விமானப்படை

இந்த அணிவகுப்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானப்படை வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளதுடன் விமானப் படைக்குச் சொந்தமான சுமார் 34 விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்கள் கொழும்பு வான் பரப்பில் பறந்து செல்லவுள்ளதுடன் சாகசங்களையும் காண்பிக்கவுள்ளதாக விமானப் படைப் பேச்சாளர் குறூப் கப்டன் என்ரு விஜேசூரிய தெரிவித்தார்.

அம்பலங்கொடைக்கும் புத்தளத்திற்கும் இடைப்பட்ட பகுதிகளிலிருந்து இந்த விமானங்கள் பறக்கவுள்ளன. கல்கிசையில் ஒன்றிணையும் விமானங்கள் ஒவ்வொன்றும் 20 செக்கன்கள் இடைவெளியில் பெல் 412, 212 ஹெலிகள் தேசிய கொடிகளை பறக்க விட்ட வண்ணமும் வை – 12, கே - 8, ஏ.என். – 32 மற்றும் ஜெட் விமானங்களும் காலி முகத்திடல் வான் பரப்பில் சாகசங்களுடன் பறந்து செல்லவுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக