உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் இந்தியாவிடம் இலங்கை அணி தோல்வியடைந்தது ஒருவேளை சங்கக்காரவுக்கு நன்மையாகவே அமைந்துவிட்டது. ஏனெனில் வெற்றிக் கெப்டன்களை சிறையில் தள்ளுகின்ற இந்நாட்டில், சங்கக்கார வெற்றிக்கிண்ணத்துடன் வந்திருந்தால் அவரும் இன்று சிறைக்குள் தான் இருந்திருப்பார் என்று ஐக்கிய தேசியக்கட்சி எம்.பி. தயாசிறி ஜயசேகர நேற்று சபையில் தெரிவித்தார்.
இந்திய அணி தோல்வியடைய வேண்டுமென்று திருப்பதியில் பூஜை செய்வதை எமது நாட்டில் செய்திருந்தால் பலன் கிட்டியிருக்கும். எது எவ்வாறிருப்பினும் இலங்கை அணியின் தலைவராக இருந்த குமார் சங்கக்கார சிறைக்கு செல்லாது தப்பிப்பிழைத்தமைக்கு கடவுளுக்கு நன்றி கூறுகிறேன் என்றும் அவர் சொன்னார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அவசரகாலச் சட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே தயாசிறி எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இலங்கை அணி கிண்ணத்தை வெல்லவேண்டும் என்றே நாம் அனைவரும் பிரார்த்தித்தோம். ஆனாலும், துரதிர்ஷ்டவசமாக அது நடைபெறவில்லை.
இலங்கை அணி வெற்றி பெறவேண்டும் என்று திருப்பதியில் வேண்டி பூஜை செய்தது பலனளிக்கவில்லை. ஏனெனில் அந்தநாட்டு அணி தோற்கவேண்டும் என்று அந்த நாட்டு தெய்வத்திடம் வேண்டினால் அதற்கு அந்த தெய்வம் இடம்கொடுக்குமா? கொடுக்காது. எனவே எமது நாட்டில் பூஜை செய்து இந்திய அணி தோற்கவேண்டும் என்று வேண்டியிருந்தால் ஒருவேளை தெய்வம் கேட்டுக்கொண்டிருக்கும்.
தற்போது இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்த குமார் சங்கக்காரா, உபதலைவராக இருந்த மஹேல ஜயவர்தன ஆகியோர் பதவி விலகியுள்ளனர். அதேபோல் அரவிந்த டி சில்வாவும் தேர்வுக்குழுவில் இருந்து விலகியுள்ளார். இலங்கை அணி இந்தியாவிடம் தோல்வியடைந்தது குமார் சங்கக்காரவுக்கு நன்மையாகவே முடிந்துள்ளது.
ஏனெனில் வெற்றிகளைக் குவிக்கின்ற தலைவர்கள் இந்நாட்டின் அரசியல் தன்மையை ஏற்றுக் கொள்ளாவிட்டால் எத்தகைய வெற்றியை பெற்றுக் கொடுத்திருந்தாலும் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு விடுவர்.
அந்த வகையில் குமார் சங்கக்கார கிண்ணத்துடன் வந்திருப்பாரேயானால் அவரும் இன்று சிறைக்குள் தான் இருந்திருப்பார். எனவே, குமார் சங்கக்கார தலைமையிலான இலங்கை அணி தோல்வியைத் தழுவிக் கொண்டதுடன் பதவியிலிருந்தும் விலகியமையானது அவரது சிறைவாசத்தை தடுத்திருக்கின்றது. இதற்கு கடவுளுக்கு நன்றி கூற வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக