8 ஏப்ரல், 2011

கூட்டமைப்பு எம்.பி.க்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படின் அது இராணுவத்தினரே

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்பட்டால் அது இராணுவத்தினரால் நிகழ்த்தப்பட்டதாகவே இருக்கும் என்பதுடன் எமது உறுப்பினர்களின் பாதுகாப்புக்கு சபாநாயகரே உத்தரவாதம் வழங்க வேண்டும் என்று கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடித்துக் கொள்வதற்கான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். சுரேஷ் எம்.பி. இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

அவசரகாலச் சட்டத்தை மாதா மாதம் நீடித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இங்கு காரணங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. இந்த சட்டத்தின் கீழ் இருந்து கொண்டுதான் ஜனநாயகம் குறித்தும் தேர்தல்கள் தொடர்பிலும் பேசிக் கொண்டிருக்கின்றோம். யுத்தம் நிறைவடைந்து இரண்டு வருடங்கள் எட்டப்படுகின்ற இன்றைய நிலையிலும் இயல்பு நிலை இன்னும் வழமைக்கு திரும்பாதிருக்கின்றது.

வடக்கு கிழக்கில் இன்றும் எத்தனையோ பாடசாலைகள், கல்லூரிகள் இராணுவத்தின் பிடியில் இருக்கின்றன. ஆனாலும் பாடசாலைகளை, கல்லூரிகளை கொடுத்துவிட்டதாகவும் விட்டு விட்டதாகவும் கூறப்படுகின்றது. இது பிச்சை போடுவது போன்ற கதையாக இருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் புலம்பெயர்ந்த சமூகமும் இணைந்து இங்கு மீண்டும் ஒரு யுத்தத்துக்கு வழி வகுத்து வருவதாக அல்லது முயற்சிப்பதாக யாழ். மாவட்டத்தின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க தெரிவித்திருக்கின்றார்.

இடம்பெயர்ந்துள்ள எமது மக்கள் மீள் குடியேற்றப்பட வேண்டும் என்று நாம் வலியுறுத்தி வருகிறோம். மக்களுக்கு சொந்தமான இடங்களிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என்று கேட்கிறோம். மேலும் மக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி வருகின்றோம். இத்தகைய செயற்பாடுகள் இராணுவத்துக்கு எதிரானவையாக கூறப்படுகின்றது.

இவ்வாறு எப்படி கூற முடியும்?

மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள மக்களின் பிரதிநிதிகளான எனது பெயரையும் மாவை சேனாதிராஜாவின் பெயரையும் குறிப்பிட்டு மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இது எம்மீதான அச்சுறுத்தலாக அமைந்திருக்கின்றது. எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களாகிய எமது பாதுகாப்புக்கும் பேச்சு உரிமைக்கும் இந்த பாராளுமன்றமும் சபாநாயகரும் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

எமது உயிர்களுக்கு எந்தவிதத்திலாவது ஆபத்துக்கள் ஏற்பட்டால் அது இராணுவத்தினராலேயே ஏற்பட்டதாக அமைந்திருக்கும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் எமது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இந்த பாராளுமன்றம் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

இன்று வடக்கில் இராணுவ ஆட்சிதான் இடம்பெற்று வருகின்றது. அங்கு இடம்பெறுகின்ற கலை, கலாசார நிகழ்வுகளுக்கு அரச நிகழ்வுகளுக்கு இராணுவத்தினர் அழைக்கப்பட வேண்டமென்ற சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கின்றது. அழைப்புக்கள் விடுக்கப்படாதுவிட்டால் எதிர்விளைவுகள் ஏற்படுகின்றன. வடக்கின் சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தின் தலையீடு அதிகரித்திருக்கின்றது.

பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வுகள் எட்டப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.

அதனடிப்படையிலேயே பேச்சுக்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டு வருகின்றது.

புலிகள் ஒழிக்கப்பட்டுவிட்டதால் இங்கு பிரச்சினைகளும் தீர்ந்து விட்டதாக அர்த்தம் இல்லை. தற்போது முன்னரிலும் பார்க்க பிரச்சினைகள் பன்மடங்கு அதிகரித்திருக்கின்றன. எமது மக்கள் இம்சிக்கப்படுகின்றனர். எமது மக்களின் சுதந்திரத்துக்கு தடை ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. இராணுவ ஆட்சியின் கீழேயே தமிழ் மக்கள் ஆளப்படுகின்றனர். எனவே இந்த இராணுவ ஆட்சி முறைமை மாற வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக் கொள்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக