24 பிப்ரவரி, 2011

ஜனாதிபதி கூறிய அதிபாதுகாப்பு வலயம் எங்குள்ளது?




விபரங்கள் வர்த்தமானி அறிவிப்பில் இல்லை சபையில் தமிழ்க் கூட்டமைப்பு தெரிவிப்பு வடக்கில் அதியுயர் பாதுகாப்பு வலயம் நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும், அந்த அதியுயர் பாதுகாப்பு வலயம் எங்கு இருக்கின்றது எனக் கேள்வி எழுப்பிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு, பலாலி உள்ளிட்ட அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பான விபரங்கள் வர்த்தமானி அறிவிப்பில் இல்லை என்றும் சுட்டிக்காட்டியது.

அதியுயர் பாதுகாப்பு வலயத்தின் அளவு தற்போது குறைக்கப்பட்டிருக்கின்றது அது எங்கிருக்கின்றது என்பதை யாழ்ப்பாணம் போய்த்தான் பார்க்க வேண்டும் என்று தெரிவித்த அரசாங்கம் கண்ணிவெடிகளில் பயணிப்பதற்க கூட்டமைப்பு ஆசைப்படுகின்றதா? என்றும் கேள்வி எழுப்பியது.

பாராளுமன்றம் சபாநாயகர் தலைமையில் நேற்று கூடியது சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது கூட்டமைப்பின் எம்.பி.யான அ.விநாயகமூர்த்தி கிளிநொச்சி உட்பட வடக்கில் பாதுகாப்புப் படையினர் தங்கியிருக்கும் தனியார் வீடுகள் மற்றும் நிறுவனங்களின் எண்ணிக்கை. அவ்விடங்கள் உண்மையான உரிமையாளருக்கு எப்போதும் மீளவும் ஒப்படைக்கப்படும் உள்ளிட்ட கேள்விகளை கேட்டிருந்தார்.

கேள்விகளுக்கு பதிலளித்து கொண்டிருந்த ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன, பொதுமக்களுக்கு சொந்தமான சுமார் 1129 தனியார் காணிகள், வீடுகள் மற்றும் நிறுவனங்கள் என்பன இராணுவத்தினரால் பாவிக்கப்படுகின்றன. வடக்கில் பாதுகாப்பு படைகளும் அமைந்துள்ள அதியுயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருக்கும் நிறுவனங்கள் மற்றும் வீடுகளின் பாதுகாப்பு படைமுகாமை நடத்திச்செல்ல வேண்டியிருப்பதனால் உரியவர்களுக்கு அவற்றை ஒப்படைப்பதற்கு தீர்மானிக்கப்படவில்லை.

சுமார் 129 தனியார் காணிகள், நிறுவனங்கள் மற்றும் வீடுகள் கடற்படையினரால் பயன்படுத்தப்படுகின்றன. 35 வரையான தனியார் காணிகளும் பலாலிஅதியுயர் பாதுகாப்பு வலயத்துக்குரிய இலங்கை விமானப்படைத் தளத்திற்குள் இருக்கும் 32 தனியார் வீடுகளும் அதற்குரிய காணிகளும் விமானப் படையினரால் பயனபடுத்தப்படுகின்றன. அதில் இரண்டு அரிசி ஆலைகளும் அடங்குகின்றன.

விமானப்படை வன்னி விசேட நடவடிக்கை பிரிவு தலைமையகத்துக்குரிய விமக்ஷினப் படையினரால் பயன்படுத்தப்படும் பிரதேசத்துக்குள் தனியார் வீடுகள் இல்லை என்பதுடன் ஏழு வகையான தனியார் காணிகள் இருக்கின்றன.

இதேவேளை, இராணுவத்தினரால் பாவிக்கப்பட்ட சிவில் மக்களுக்கு உரிய 472 தனியார் வீடுகள், இடங்கள் மற்றும் நிறுவனங்கள் பொதுமக்களிடம் மீளவும் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மிகுதியில் பெரும்பாலானவை பொது மக்களினால் தங்களது விருப்பத்தின் பேரிலேயே பாவனைக்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

மற்றொரு பகுதி காணிகள் வீடுகள் போன்றவற்றின் அடையாளம் உறுதி செய்யப்படாததுடன் மீளப்பெற்றுக்கொள்வதற்கு கோரிக்கையும் விடப்படவில்லை. கேக்ஷிரிக்கை விடுத்ததும் மீளவும் ஒப்படைக்கப்படும்.

இதேநேரம் சில நிறுவனங்கள் மற்றும் வீடுகள் அதியுயர் பாதுகாப்பு வலயத்துக்குள் இருப்பதனால் பாதுகாப்பு படைமுகாம்கள் இயங்கிவருவதனால் அவற்றை ஒப்படைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்படவில்லை.

கடற்படை முகாம்களை இயங்க வைப்பது அவசியம் என்பதனால் அந்த முகாமை ஸ்தாபிப்பதற்கு பொருத்தமான இடத்தை பிரதேச செயலாளர்கள் மூலம் நிவர்த்தி செய்து கொள்ளும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விமானப்படையினரால் பாவிக்கப்பட்டு வரும் வன்னிப் பிரதேசத்துக்குள் வீடுகள் இல்லை என்பதுடன் அதற்குரிய தனியார் காணிகள் அடுத்த 3 மாத காலத்திற்குள் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு ஒப்படைப்பதற்கு எதிர்பார்க்கின்றோம் என்றார்.

இதனிடையே குறுக்கு கேள்வியொன்றை எழுப்பிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.யான சுமந்திரன், வடக்கில் அதியுயர் பாதுகாப்பு வலயம் நீக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி செவ்வாய்க்கிழமை தெரிவித்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன,. அந்த அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் எங்கு இருக்கின்ற எனக் கேள்வி எழுப்பினார்.

“அக்கேள்விக்கு பதிலத்த அமைச்சர் தினேஷ் குணவர்தன, 20 வருடங்களாக இருக்கும் அதியுயர் பாதுகாப்பு வலயத்தின் அளவு தற்போது குறைக்கப்பட்டுள்ளது. அது எங்கு இருக்கின்றது என்பதை யாழ்ப்பாணம் போய் தான் பார்க்க வேண்டும் என்பதுடன் ஜனாதிபதி அவ்வாறானதொரு அறிவித்தலை விடுவிக்கவில்லை என்றாலும் அதியுயர் பாதுகாப்பு வலயத்தின் அளவு குறைக்கப்பட்டு வருவதாகவே அவர் கூறியிருக்கின்றார்.

அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பான விபரங்கள் வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ளன என்றார்.

குறுக்கிட்ட சுமந்திரன் எம்.பி. குறிப்பாக பலாலி உள்ளிட்ட பிரதேசங்கள் அதியுயர் பாதுகாப்பு வலயமாக வர்த்தமானி அறிவித்தலுக்கு உட்படுத்தப்படவில்லை என்று சுட்டிக்காட்டினார்.

மீண்டும் பதிலளித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன, அவசரகாலச் சட்ட ஒழுங்கு விதிகளின் பிரகாரம் அது வர்த்தமானி அறிவித்தலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றது. எனினும், தற்போது அதியுயர் பாதுகாப்பு வலயம் குறைக்கப்பட்டு வருவதுடன் அதனுள் இருந்த 472 தனியார் காணிகள், வீடுகள் மற்றும் நிறுவனங்கள் பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்றார்.

இதனிடையே குறுக்கிட்ட விநாயகமூர்த்தி எம்.பி. ஆனையிறவுக்கு அப்பால் இருக்கின்ற பிரதேசங்களில்? என்று மற்றுமொரு கேள்வியை எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் தினேஷ், கண்ணி வெடிகளில் பயணிக்க வேண்டுமா? என விநாயகமூர்த்தி எம்.பி.யை பார்த்து கேள்வி எழுப்பினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக