24 பிப்ரவரி, 2011

இந்தியா உறுதியளித்த 50 ஆயிரம் வீடுகளில் எத்தனை குடிமனைகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன: கூட்டமைப்பு கேள்வி




இந்தியாவினால் உறுதியளிக்கப்பட்ட 50 ஆயிரம் வீடுகளில் எத்தனை வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

அந்த வீட்டு பயனாளிகளின் பட்டியலை 50 வருடங்களுக்குள் தயாரித்து முடித்து விடுவீர்களா? என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. யான எம். சுமந்திரன் கேள்வி எழுப்பினார். இந்தியாவினால் கையளிக்கப்பட்ட 500 உழவு இயந்திரங்களில் 76 மட்டுமே கையளிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் வைக்கப்பட்டிருக்கும் 100 உழவு இயந்திரங்கள் தென்னிலங்கைக்கு நகர்த்தப்படுகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கே இந்த உழவு இயந்திரங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற உற்பத்தி வரி, நிதிச் சட்டத்தின் கீழான கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், விஷம்போல வாழ்க்கைச் செலவு அதிகரித்து செல்கின்ற நிலையில் பொருளாதாரத்தை பாதுகாப்பதற்கான கட்டமைப்புக்களை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும். வாழ்க்கைச் செலவு உயர்ந்து கொண்டே செல்லும்.

இது எவருடைய குற்றமும் அல்ல, எனினும் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கமே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

விலையை கட்டுப்படுத்துவதற்கான நிதிக் கொள்கையை அரசாங்கம் கொண்டிருந்தால் மக்கள் அதிருப்தியடைய மாட்டார்கள். உலக சந்தையில் பொருட்களின் விலைகள் அதிகரித்து செல்கையில் அதனை சிறிய நாடொன்றினால் கட்டுப்படுத்த முடியாது.

எனினும் நாட்டுக்கும் மக்களுக்கும் தேவையான அம்சங்கள் ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளன. சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டவிதிகளின் பிரகாரம் வாகனங்களின் இறக்குமதி அதிகரித்துள்ளது. தீர்வையும் குறைக்கப்பட்டுள்ளது. வீதிகளில் வாகனங்கள் குவிந்திருக்கின்ற நிலையில் தீர்வை குறைக்கப்பட வேண்டுமா? மக்களின் அத்தியாவசிய தேவைகளில் இது அதிமுக்கியமானதா? தாழ்ந்த மட்டத்தில் இருக்கின்ற மக்கள் வாழ்க்கைச் செலவு போராட்டத்தில் திண்டாடி கொண்டிருக்கின்ற நிலையில் வாகன இறக்குமதி தீர்வை குறைப்பின் ஊடாக எவ்விதமான நன்மையும் இல்லை.

விவசாய உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் உணவு பொருட்களின் விலைகளும் விஷம்போல ஏறியுள்ளது. வாழ்க்கைச் செலவு அதிகரித்து கொண்டே செல்கின்றது. இதனால் ஏழைகள் ஏழைகளாகவும் பணவசதி படைத்தோர் வசதி படைத்தவர்களாகவும் இருக்கின்றனர்.

இரு தரப்பினருக்கும் இடையிலான இடைவெளியை குறைக்க வேண்டும். எனினும் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டவிதிகள் மற்றும் ஏற்பாடுகளின் மூலமாக எவ்விதமான வாய்ப்புகளும் இல்லை.

நீண்ட யுத்தத்திற்கு பின்னரான பாதுகாப்பு நிலைமையில் மக்கள் போராடிக் கொண்டிருக்கின்ற நிலையில் மக்களின் குறைகளை அரசாங்கம் வார்த்தைகளின் மூலமாக நிவர்த்திக்க முயற்சிக்கின்றது. வடக்கு கிழக்கில் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுவதாக கூக்குரல் இடுகின்றது. அதற்கு பாலங்களும் வீதிகளும் சான்று பகருகின்றன.

இவையெல்லாம் பிரச்சினை இல்லை. முன்னுரிமையான அம்சங்களுக்கே முன்னுரிமையளிக்க வேண்டும். குடியிருப்பதற்கு வீட்டு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

யுத்தத்தினால் 2,50,000 வீடுகள் தரைமட்டமாகியுள்ளன. இடிந்துபோன குடிமனைகளை கட்டமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் இல்லை. ஆறு கம்புகளை நாட்டி தகரங்களை கூரையாக அமைப்பது குடிமனைகள்?

இந்தியா 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணித்து கொடுப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. ஆனால் இலங்கை அரசாங்கம் ஒரு வீட்டையேனும் கட்டிக்கொடுப்பதற்கு முன்வரவில்லை. தாராள மனம் நிறைந்த இந்தியாவிற்கும் இந்திய மக்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கின்றோம். ஆனால் அந்த வீடுகளில் எத்தனை வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்பதுதான் பிரச்சினையாகும்.

1000 பயனாளிகளின் பட்டியலை தயாரிப்பதற்கு ஒருவருடம் தேவைப்பட்டுள்ளது. முழுமையான பட்டியலை 50 வருடங்களில் தயாரித்து முடித்து கொள்வீர்களா?

இந்தியா வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணா அரியாலையில் சொற்ப வீடுகளை நிர்மாணிப்பதற்கு அடிக்கல்லை நாட்டி வைத்தார். ஏனைய ஒரு வீட்டுக்கேனும் அடிக்கல் நாட்டப்படவில்லை.

வடபகுதி மக்களுக்கென 500 உழவு இயந்திரங்கள் வழங்கப்பட்டன. எனினும் அதில் 100 உழவு இயந்திரங்கள் கஜு கூட்டுத்தாபனத்திற்கும் 100 இயந்திரங்கள் தெங்கு அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கும் வழங்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் வைக்கப்பட்டுள்ள 100 உழவு இயந்திரங்கள் தென்னிலங்கைக்கு நகருகின்றது. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு தலா 38 இயந்திரங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறான ஒழுங்கீனங்கள் ஏன்? ஏனையவற்றை தென்னிலங்கைக்கு ஏன் நகர்த்துகின்றீர்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக