24 பிப்ரவரி, 2011

வடக்கில் பாதுகாப்பு வலயங்கள் 1/3 ஆக குறைப்பு : கடற்படையினரின் பயன்பாட்டிலுள்ள காணிகள் மூன்று மாதத்தில் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு


வடக்கில் உள்ள அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் 1/3 ஆக குறைக்கப்பட்டுள்ளதோடு படிப்படியாக பொதுமக்களின் காணிகள், வீடுகள் மீள கையளிக்கப்பட்டு வருவதாக ஆளும் கட்சி பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வன்னிப் பிரதேசத்தில் கடற்படையினர் பயன்படுத்தும் தனியார் காணிகள் 3 மாத காலத்தினுள் மீள உரியவர்களிடம் கையளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

வடக்கிலுள்ள அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி அ. விநாயகமூர்த்தி பிரதமரிடம் கேட்டிருந்த கேள்விக்கு பிரதமர் சார்பாக அமைச்சர் தினேஷ் பதிலளித்தார்.

அமைச்சர் மேலும் கூறியதாவது,

வடக்கில் பொதுமக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகள், வீடுகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் சுமார் 1129 ஐ பாதுகாப்புப் படையினர் பயன்படுத்துகின்றனர். பலாலி அதிஉயர் பாதுகாப்பு வலயத்தில் 32 தனியார் வீடுகள் மற்றும் காணிகளும் இரண்டு அரிசி ஆலைகளும் உள்ளன.

வன்னி விமானப்படையினர் பயன்படுத்தும் பிரதேசத்தில் தனியார் வீடுகள் கிடையாது. ஆனால் 7 தனியார் காணிகள் உள்ளன.

இராணுவத்தினர் பயன்படுத்திய பொதுமக்களின் 472 காணிகள், வீடுகள் மற்றும் நிறுவனங்கள் என்பன பொது மக்களிடம் மீள ஒப்படைக்கப்பட் டுள்ளதோடு சிலர் தமது சுயவிருப்பத்தின் பேரில் தமது இடங்களை படையினருக்கு வழங்கியுள்ளனர். சிலர் தமது வீடுகளுக்கான உரித்தினை உறுதிசெய்யவில்லை. மீளப்பெற விண்ணப்பிக்கவுமில்லை. அவர்கள் விண்ணப்பித்தால் மீள வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சில வீடுகள், நிறுவனங்கள் என்பன அதிஉயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ளதாலும் அப்பகுதிகளில் முகாம்கள் உள்ளதாலும் அவற்றை மீள வழங்க முடிவு செய்யப்படவில்லை. அங்குள்ள இராணுவ முகாமை நிறுவ பிரதேச செயலாளர்கள் மூலம் காணிகள் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

20 வருடங்களாக வடக்கில் அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் பாதுகாப்பு செயற்பாடுகளுக்காக முன்னெடுக்கப்பட்டன. அதி உயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள வீடுகள் படிப்படியாக மீள கையளிக்கப்பட்டு வருகின்றன. விவசாயிகள் தமது நிலங்களுக்கு திரும்பியுள்ளனர். 1/3 பகுதியாக அதி உயர் பாதுகாப்பு வலயம் குறைக்கப்பட்டுள்ளது.

சில பகுதிகளில் மிதிவெடிகள் உள்ளன. மிதிவெடிகளால் எந்த ஒரு குடிமகனும் பாதிக்கப்படுவதற்கு இடமளிக்க முடியாது. தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள் அங்கு நேரில் சென்று உண்மை நிலையை அறிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக