மனிதனுக்கும் யானைக்கும் இடையி லான ஜீவமரணப் போராட்டத்துக்கு பிரதான காரணமாக மனிதனே இருந்து வருகிறான். யானைகளின் வாசஸ்தலத் தில் மனிதன் குடியேற்றங்களை அமைத்து வருவதனால்தான் யானைகள் காடுகளை அண்டியுள்ள தங்களின் வாசல்பூமியில் அமைந்துள்ள கிராமங்களுக்குள் ஊடுருவி பயிர்களை அழித்தும், வீடுகளை உடைத்தும் சில சந்தர்ப்பங்களில் மனிதனையும், மனித உயிர்களையும் பழிவாங்குகிறது.
இதற்கான காரணம் என்ன என்பதை ஆய்வாளர்கள் இப்போது கண்டுபிடித்திருப்ப தாகப் பொருளாதார அபிவிருத்தித்துறை அமைச்சர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டபோதே இந்தத் தகவலை வெளியிட்டார்.
யானைகள் கிராமங்களுக்குள் ஊடுருவி வருவதைத் தடுப்பதற்கான மின்வேலிகள் இன்று ஒரு தடையாக இருக்கவில்லையென்றும் அடர்ந்த காடுகளில் மரங்கள் உயரத்தில் இருப்பதனால் யானைகளுக்கு இலை குழைகளை இலகுவில் பறித்து சாப்பிட முடியாதிருப்பதனால், அவை கிராமங்களுக்குள் நுழைந்து உணவைத் தேடுகின்றன என்று தெரிவித்த அமைச்சர் பசில் ராஜபக்ஷ, தேனீக்களை வளர்ப்பதன் மூலமும், போகன்விலா மற்றும் எலுமிச்சை செடிகளை நாட்டுவதன் மூலம் யானைகள் கிராமங்களுக்கு வருவதை மக்கள் தடை செய்து வருவதாகக் கூறினார்.
யானைகள் எங்கள் நாட்டின் ஒரு தேசிய செல்வமாகும். அவை மனிதனுக்கு சில சந்தர்ப்பங்களில் உயிரிழப்பை ஏற்படுத்தினாலும், அது எமது நாட்டின் மரபுரிமையின் சின்னமாக விளங்குகிறது. அதனைக் காப்பாற்றுவது அவசியம் என்று வலியுறுத்தினார். யானைகளை விரட்டியடித்து கொல்வதில் ஆர்வம்காட்டும் விவசாயிகள் யானைகள் அடித்து இறப்பவர்களைவிட விஷப் பாம்பினால் மரணமடையும் மக்களின் எண்ணிக்கை கூடுதலாக இருப்பதை மறந்துவிடுகிறார்கள் என்று அமைச்சர் கூறினார்.
யானையைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த அமைச்சர் காட்டுப் பன்றிகளைப் பற்றித் தனது கவனத்தைத் திருப்பினார். எங்கள் நாட்டிலுள்ள சட்டம் ஒரு விநோதமான சட்டமாகும். காட்டுப் பன்றியைக் கொன்று அதன் இறைச்சியை சாப்பிடுவதை சட்டம் குற்றமாகக் கருதவில்லை. ஆனால், காட்டுப் பன்றி இறைச்சியை விற்பனை செய்வதையோ அல்லது அந்த இறைச்சியை வீடுகளில் வைத்திருப்பதையோ தண்டனைக்குரிய குற்றமாக சட்டம் கருதுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த விறுவிறுப்பான கலந்துரையாடலில் கலந்து கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், ஒரு தடவை வனவிலங்கு காவலர்கள் ஒரு யானையை பிடித்து ஒரு காட்டில் விட்டபோது, அந்த யானை தான் பிடிபட்ட தூரத்திலிருந்து இருந்த இடத்திற்கு உடடினயாகத் திரும்பிவிட்டது என்று கூறி இரண்டு கால் யானைகளும் இதைத்தான் செய்கின்றன என்று சிரித்தார்.
இன்னுமொரு சுவையான சம்பவத்தையும் ஜனாதிபதி கூறினார். வனவிலங்கு சரணாலயத்திலுள்ள அதன் பொறுப்பதிகாரியின் காரியாலயத்திற்குள் அத்துமீறிப் பிரவேசித்த ஒரு நபர் அங்கிருந்த தொலைபேசியில் இலக்கத்தைச் சுழற்றி அந்த அதிகாரியின் மனைவியுடன் ஏதோ புரியாத மொழியில் பேசியதைக் கேட்ட அந்த மனைவி பதற்றமடைந்து விட்டாராம்.
விசாரணை செய்து பார்த்த போது மறுமுனையில் தொலைபேச்சில் பேசியது ஒரு மனிதன் அல்ல என்பது தெரியவந்தது. காட்டிலுள்ள ஒரு குரங்கே இந்த சேஷ்டையைப் புரிந்திருக்கிறது என்று ஜனாதிபதி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக