1 பிப்ரவரி, 2011

லங்கா இ - நியூஸ்’ அலுவலகத்துக்கு தீ உடன் விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவு






மாலபேயிலுள்ள லங்கா இ.நியூஸ் நிறுவனத்தில் நேற்று அதிகாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை 3.25 அளவில் இடம்பெற்றுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்.

அதிகாலை தலங்கம பொலிஸணுக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து அங்கு விரைந்த பொலிஸார் பிரதேச பொது மக்களின் ஒத்துழைப்புடன் தீயை அணைக்க உடனடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இ. நியூஸ் அலுவலகத்தின் நுழை வாயிலுள்ள பிரதான கதவு உடைக் கப்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அலுவலகத்தின் உபரகணங்கள் இயந்திரங்கள் பல தீயில் எரிந்து நாச மாகியுள்ளன. மேற்படி நிறுவனத்திற்குள் தீ பற்றிக் கொண்டதா அல்லது தீ வைக் கப்பட்டுள்ளனவா என்பது தொடர்பான விசாரணைகளை உடனடியாக பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

கொழும்பு தெற்கு பிரதேசத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தயா சமரவீரவின் ஆலோசனைக்கமைய விசேட பொலிஸ் குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதேவேளை லங்கா இ.நியூஸ் நிறுவன தீ வைப்பு சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணைகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்டோரை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

இத்தகைய நாசகார செயலை மேற்கொண்டோர் மீது பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இது தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கையொன்றை தமக்குச் சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி கேட்டக் கொண்டுள்ளார்.

மாலபேயிலுள்ள இ-நியூஸ் நிறுவனம் நேற்று அதிகாலை இனந்தெரியாதோரின் தீ வைப்புக்கு இலக்காகியுள்ளது. தலங்கம பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை லங்கா ஈ-நியூஸ் ஊடக நிறுவனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை அரசாங்கத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான செயல் என்று மக்கள் தொடர்பாடல் மற்றும் தகவல் துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இது தொடர்பாக மக்கள் தொடர்பாடல் மற்றும் தகவல் அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

தேர்தலுக்கு வேட்பு முனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையிலும், நாட்டில் முக்கியமான நிகழ்வுகள் இடம்பெறும் வேளையிலும் இவ்வாறு ஊடகவியலாளர்கள் மீதும் ஊடக நிறுவனங்கள் மீதும் தாக்குதல் நடத்தி அந்த குற்றத்தை அரசாங்கத்தின் மீது சுமத்தி அரசாங்கத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்துவது இவர்களின் நோக்கமாகும் என்று கூறும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இடைக்கிடை இடம்பெறும் ஊடகவியலாளர்கள் காணாமற் போதல் அல்லது கொலை செய்யப்படுதல் ஆகிய நிகழ்வுகளை பாரிய சம்பவங்களாக சித்தரித்தல் மூலம் இந்த நிலையை நன்கு உணர்ந்து கொள்ள முடியும் என்று அமைச்சர் குறிப்பிடுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக