1 பிப்ரவரி, 2011

அமைச்சர் டக்ளஸ் - நிருபமாராவ் நேற்று சந்தித்துப் பேச்சு வடக்கு மீனவர் பிரச்சினை தொடர்பில் ஆராய்வு




இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளி விவகாரச் செயலாளர் திருமதி நிருபமாராவ் தலைமையிலான உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவினர் நேற்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை சந்தித்துக் கலந்துரையாடினர்.

இச்சந்திப்பில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவும் கலந்து கொண்டார்.

மேற்படி கலந்துரையாடலின் போது இலங்கை மீனவர்கள் எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெளிவாகவும் விரிவாகவும் எடுத்துரைத்தார்.

இதன் பிரகாரம், வட மாகாண மீனவர்கள் முகங்கொடுத்து வருகின்ற பிரச்சினைகள் தொடர்பில் தெளிவுபடுத்திய அமைச்சர், கடந்த சுமார் 30 வருட கால யுத்த அனர்த்தத்திற்குப் பின்னர் இம்மீனவர்கள் சுதந்திரமாக தொழிலில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்திய மீனவர்களது டோலர் படகுகளினால் பாரிய பிரச்சினைகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த டோலர் படகுகள் இந்தியாவின் கடல் எல்லைக்குட்பட்ட வளங்களை அழித்தொழித்து விட்டு இப்போது எமது கடற்பகுதிகளிலுள்ள வளங்களை அழித்து வருவது மட்டுமல்லாமல் எமது மீனவர்களது வலைகளை பாரிய அளவில் சேதமாக்கியும் எமது மீனவர்களை அச்சுறுத்தியும் வருகின்றன என சுட்டிக்காட்டினார்.

எனவே, இதற்கொரு முடிவு விரைவாக காணப்படுவது ஆரோக்கியமானதாகும். ஆகவே இருதரப்பினரும் சந்தித்து பரஸ்பரம் தங்களுடைய பிரச்சினைகளை பரிமாறிக் கலந்துரையாடுவதன் மூலம் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என அவர் கூறினார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்த கருத்துகளுக்கு மேற்படி இந்திய உயர்மட்ட பிரதநிதிகள் குழுவினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக