7 ஜூன், 2011

தமிழீழ மாணவர் எழுச்சி நாளாக தியாகி பொன். சிவகுமாரனின் 37ம் வருட நினைவு தினம்...!!!‏




தமீழீழ விடுதலைப் போராட்டத்திற்கு மாணவர்கள் மத்தியில் உந்துதலாக அமைந்த தரப்படுத்தல் திட்டத்துக்கு எதிராக யாழ் மாணவர்களால் தொடங்கப்பட்ட தமிழ் மாணவர் பேரவையில் தன்னையும் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு... தமிழ் மக்களின் விடிவிற்கான ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவராகவும் செயற்பட்டு... 1974ம் ஆண்டு ஜூன்மாதம் 5ம்திகதி அன்று பொலீசாரின் சுற்றிவளைப்பின்போது அவர்களிடம் அகப்படாமல் தன்னுயிரை தியாகம் செய்த யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரின் முன்னாள் மாணவர் பொன். சிவகுமாரன் அவர்களின் 37ம் வருட நினைவுதினம் இன்றாகும்.

பொன்.சிவகுமாரான் தமிழ் மக்கள் மத்தியில் அன்பையும், மதிப்பினையும் பெருமளவில் பெற்றிருந்த வேளை இலங்கை போராட்ட வரலாற்றில் தமிழ் மக்களின் விடிவிற்காக முதன்முறையாக தம் இன்னுயிரைத் தியாகம் செய்து ஒரு வரலாற்றினையும் இவர் படைத்தார்.
பொன்.சிவகுமாரானின் வரலாற்றை எடுத்துக் கொண்டால்... உரும்பிராயில் 1950 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 26 ஆம் நாள் பொன். சிவகுமாரன் பிறந்தார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் உயர்கல்வி கற்றவர். அந்தக் காலகட்டத்தில்தான் இலங்கையில் கல்வித் தரப்படுத்துதல் அறிமுகப்படுத்தப்பட்டது.


இத்தரப்படுத்தல் திட்டத்துக்கு எதிராகத் தொடங்கப்பட்ட தமிழ் மாணவர் பேரவையில் தன்னையும் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு சிவகுமாரன் செயற்பட்டார். 1970களின் தொடக்கத்தில் சிறிமாவோ பண்டாரநாயக்கா அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சோமவீர சந்திரசிறீயின் வாகனத்துக்கு குண்டு வைத்தவர் சிவகுமாரன் என்று குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவராக இருந்து அமரத்துவம் அடைந்த வேலுப்பிள்ளை பிரபாகரனால் ஆரம்பித்து வைத்த அரசியல் கொலைகளுக்கு முன்பாக 1971 ஆம் ஆண்டு தொடக்கத்தில் யாழ்ப்பாண நகரத் தந்தையாகவும் அப்போது சிறிமா கட்சியின் அமைப்பாளராகவும் இருந்த அல்பிரட் துரையப்பாவுக்கு குறிவைத்து அவரது வாகனத்தில் குண்டு பொருத்தினார். குண்டுவெடித்து சிதறி வாகனத்தின் மேல்பக்கம் எல்லாம் பெருந்தொலைவுக்கு சென்று விழுந்தது. ஆனால் துரையப்பா வருவதற்கு முன்னரே குண்டு வெடித்துச் சிதறியது. இந்தத் தாக்குதல்கள் ஈழ விடுதலைப் போராட்டத்தில் முதல் தாக்குதல்கள் என்று சொல்லலாம்.

அதன் பின்னர் துரையப்பாவின் வாகனத்துக்கு குண்டு வைத்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டு காலம் சிறையிலே கழித்தார். சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர் மீண்டும் அவர் சில முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். தனியே தாக்குதல் முயற்சி என்பதுமட்டும் அல்ல. குறிக்கோளை வைத்துக் கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் ஈடுபடுத்திக்கொண்டார். இளைஞர் பேரவை அப்போது நடத்திய உண்ணாவிரதம் போன்றவற்றில் பங்கேற்று மதியுரைகளை வழங்கிச் செல்வார்.

1973 இல் தமிழ் மாணவர் பேரவையின் பொறுப்பாளராக இருந்த சத்தியசீலன் போன்றவர்கள் கைதான காலகட்டம். அதற்கு முதலே சிவகுமாரன் கைதாகி, அனுராதபுரம் சிறையிலே அடைக்கப்பட்டு மல்லாகம் நீதிமன்றில் வழக்குகளும் நடைபெற்றன.

யாழ். தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகளுக்குப் பின்னர், அப்படுகொலைக்கு உத்தரவிட்ட சந்திரசேகரவைக் கொல்ல வேண்டும் என்ற முடிவை எடுத்தவர் பொன்.சிவகுமாரன். மாநாடு நடைபெற்ற 9 நாளும் தன்னை தொண்டராகப் பதிவு செய்து கொண்டு மாநாடு வெற்றிபெற வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்த நிலையில்... மாநாட்டுக்கு குழப்பம் விளைவித்த சந்திரசேகரவை அங்கேயே கொல்ல வேண்டும் என்று வெளிப்படையாகக் கூறி... அதனாலேயே சிவகுமாரன் தேடப்பட்டார். ஆனால் சந்திரசேகரவைக் கொல்வதற்காக சிவகுமாரன் மேற்கொண்ட முயற்சி சூழ்நிலைகளால் தோல்வியடைந்தது.



இதே நேரம் பொன்.சிவகுமாரன் பிறந்த ஊரான உரும்பிராயை சேர்ந்த 'உரும்பிராய்' நடராஜா என்பவர் விடுதலைக்குப் போராடிய இளைஞர்களைக் காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தவர். அவர்மீது தாக்குதல் நடாத்துவதற்கு சிவகுமாரன் தலைமை ஏற்றார்.

ஆனால் கோப்பாயில் காவல்துறையினர் சுற்றிவளைத்த போது அகப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக தனது 24 வயதில்... 1974ம் ஆண்டு ஜூன்மாதம் 5ம்திகதி சயனைட் அருந்தி வீரச்சாவை தழுவினார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதன் முதலில் சயனைட் அருந்தி தன்னுயிரை மாய்த்தவர் பொன். சிவகுமாரன் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்காலக் கட்டத்தில் பொன். சிவகுமாரனின் வீரச்சாவு இளைஞர்களிடத்திலே ஒரு எழுச்சியை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் யாழ் எங்கும் பொன். சிவகுமாரனின் படங்கள் விற்பனையாகிக் கொண்டிருந்தது. அந்நேரம் பள்ளிகளில் கல்வி கற்றுக் கொண்டிருந்த மாணவர்களின் புத்தகங்களில் சட்டைப் பைகளில் பொன். சிவகுமாரனின் படம் இருந்தது மட்டுமல்லாமல் சுடுகாட்டுக்குப் பெண்கள் முதன் முதலில் சென்ற நிகழ்வாக அந்நிகழ்வு அமைந்தது.

பின்னாளில் தரப்படுத்தலின் பின் தமது கல்வியை தொடர தமிழ் நாட்டிற்கு சென்ற பள்ளிப் பருவங்களில் பொன். சிவகுமாரனின் போராட்டங்களில் ஈர்ப்புக் கொண்ட மாணவர்களினால் 80 களின் ஆரம்பத்தில் மறைந்த கிழக்கிலங்கை போராளி இராஜ்மோகனின் வழி நடத்தலில் 'தமிழீழ மாணவர் பேரவை' ... 83 ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் பின் தமிழகம் சென்ற அகதி மாணவர்களுக்கு பள்ளிகள்... கல்லூரிகளில் அனுமதிகள் எடுத்துக் கொடுத்தது மட்டுமல்லாமல்... அகதி முகாம்களில் இருந்த அகதிகளுக்கு பல்வேறு உதவிகளை செய்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முன்னோடியாக இருந்து அல்பிரட் துரையப்பாவின் கொலைக்கு முதன் முதலில் வித்திட்ட பொன். சிவகுமாரனின் வழியில்... அக்கொலையை அமிர்தலிங்கம் கோஷ்டியின் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வலையில் சிக்கி பொன்னாலை கிருஷ்ணன் கோவிலில் வைத்து கொலை செய்த அமரத்துவம் அடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனும் பொன். சிவகுமாரனும் ஒரே திகதியான 26 ஆம் திகதி பிறந்திருந்தாலும்... சயனைட் அருந்தி தன்னுயிரை மாய்க்கும் வரலாற்றை உருவாக்கிய பொன் . சிவகுமாரனின் வழியில் தமிழீழ விடுதலைப் புலிகளின்... 'தமிழீழ விடுதலைக்கான போராட்டம்' என்று கூறி தமிழ் இனத்தையே அழித்த... முள்ளி வாய்க்காலில் முடிவுற்ற... போராட்டத்தில் இணைந்த உறுப்பினர்களின் கழுத்தில் சயனைட் குப்பிகளை அணிவித்து அவர்களின்

உயிரிழப்பில் தம் குறுநில ஆட்சியை நடாத்திய தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் அமரத்துவம் அடைந்தது சயனைட் குப்பியை கடித்து அல்ல என்பது வரலாறு.

இந்நிலையில் வீர வரலாறு படைத்த நாளாக... ஜூன் 6 ஆம் நாள் பொன். சிவகுமாரன் நினைவாக 'தமிழீழ மாணவர் எழுச்சி நாள்' கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நாளில் தமிழீழ மாணவர் பேரவையினரும் ( பொன். சிவகுமாரன் நினைவாக 'தமிழீழ மாணவர் எழுச்சி நாளாக நினைவு கூறுமிடத்து... தற்போது தமிழருக்கான போராட்டம் என்று தொடக்கி பல அழிவுகளின் பின் பல மாணவர்கள் பெற்றோரை இழந்தும்... ஊனமுற்றும்... பொருளாதார வசதியற்றும் தமது கல்வியை தொடர முடியாத நிலையில் இருக்கும் பொது, புலம்பெயர் தேசங்களில் வசதியாக உள்ளவர்கள் (முக்கியமாக அக்காலக் கட்டத்தில் இலங்கையில் தமது கல்வியை தொடர முடியாத நிலையில் தமிழகத்தில் தமிழீழ மாணவர் பேரவை (Tamil Eelam Students Organaization - TESO) மூலம் கல்லூரிகளில் அனுமதி எடுத்து தமது கல்வியை தொடர்ந்து தமது வாழ்வை வளமாக்கிக் கொண்டவர்கள்) இவ்மாணவர்களின் எதிர்காலத்தை கவனத்தில் எடுத்து அவர்களின் கல்வியை தொடர தம்மாலான உதவிகளை அவர்களை சென்றடையும்படி எவ் வழியிலோ... சரியான வழியில் (திரும்பவும் ஓர் ஆயுதப் போராட்டத்திற்கு வித்திடாமல்)செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறார்கள்.

(சுற்றுச் சூழல் நாள் ஜூன் 5 ஆம் நாள் வருவதால் அதற்கடுத்த நாள் சிவகுமாரன் நினைவு நாளாக ஆக்கப்பட்டது)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக