27 ஏப்ரல், 2011

பயனாளிகளின் பெயர்ப்பட்டியல் விரைவில் கிடைத்தால் வீடமைப்புத்திட்டம் அமுலாகும்: இந்தியா

ஐம்பதாயிரம் வீடுகளை அமைப்பதற்கு வெளிப்படையான முறையில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் பெயர்ப்பட்டியலை இலங்கை அரசாங்கத்திடமிருந்து பெறுவதற்கு காத்திருக்கிறோம். பயனாளிகன் பெயர்ப்பட்டியல் விரைவில் கிடை த்தால் வீடமைப்புத்திட்டத்தின் செயற்பாடுகள் காலதாமதமின்றி நிறைவேற்றப்படும்என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு 50 ஆயிரம் வீடுகளை அமைத்தக்கொடுக்க இந்தியா இணக்கம் தெரிவித்திருந்தது. ஆனால், வீடுகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லையென்ற குற்றச்சாட்டு அண்மைக்காலமாக எழுந்திருந்தது.

இது குறித்து விளக்கம் அளிக்கும்வகையில் இந்திய தூதரகம் நேற்று அறிக்கையொன்றினை விடுத்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்காக இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் இந்திய அரசாங்கத்தின் நன்கொடை உதவியுடன் அமைக்கப்படவிருக்கும் 50,000 வீட்டுத் திட்டத்தின் முன்னேற்றம் பற்றிச் சமீபத்தில் சில ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளை நாம் பார்வையிட்டோம்.

இவை சமீபத்தில் நடைபெற்ற யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டவையெனக் குறிப்பிடப்பட்டுள்ளன. ஊடகங்களில் வெளியிடப்பட்ட இந்தக் கருத்துக்கள் அடிப்படையற்றவையும் தவறான எண்ணத்தைத் தோற்று விப்பவையுமாகும். இதன் உண்மையான நிலவரம் கீழ்வருமாறானது.

இந்திய அரசாங்கம், முன்னோடித்திட்டமாக வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் அமைக்கப்படவிருக்கும் 1000 வீடுகளுக்கான திட்டத்தை நிறைவேற்றவும் அமுல் படுத்துவதற்குமாக வரையறுக்கப்பட்ட ஹிந்துஸ்தான் பிறிவாப் மற்றும் வரையறுக்கப்பட்ட கீகக இன்ப்றா புறொஜெக்ற்ஸ் ஆகிய நிறுவனங்களை முறையே திட்ட முகாமைத்துவ ஆலோசகர்களாகவும், ஒப்பந்தக்காரர்களாகவும் நியமித்துள்ளது.

இத்திட்டத்தை மேற்கொள்வதற்குத் தேவையான வளங்களை இந்த ஒப்பந்த நிறுவனங்கள் ஏற்கெனவே திரட்டியுள்ளன. எதிர்பாராத சூழ்நிலைகள் ஏற்பட்டாலன்றி, கால அட்டவணைக்கேற்ப இந்த வீட்டுத் திட்டம் நிறைவேற்றப்பட்டு இவ்வாண்டின் பிற்பகுதியில் பயனாளிகளிடம் வீடுகள் கையளிக்கப்படும்.

உள்நாட்டில் இடம்பெயர்ந்தோரின் முக்கியமான எதிர்காலத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான இந்திய வீடமைப்புத் திட்டமானது இலங்கை அரசாங்கத்தின் நெருங்கிய ஆலோசனையுடனும் ஒத்துழைப்புடனும் நிறைவேற்றப்படுகின்றது.

இரு நாடுகளும் இந்த முன்னோடித்திட்டத்திற்கான தங்களின் பங்கிலும் பொறுப்பிலும் கண்ட இணக்கப்பாட்டிற்கமையத் தேவையான ஆவணங்கள் இந்திய உயர் ஸ்தானிகர் கௌரவ அசோக் கே. காந்தா அவர்களுக்கும் நிதி திட்டமிடல் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.பீ.ஜயசுந்தர அவர்களுக்குமிடையே 2010 நவம்பர் 26ஆம் திகதி பரிமாற்றம் செய்து கொள்ளப்பட்டன.

இது சம்பந்தமாக விதிமுறைகளுக்கமைய வெளிப்படையான முறையில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் பெயர்ப்பட்டியலை இலங்கை அரசாங்கத்திடமிருந்து பெறக்காத்திருக்கிறோம்.

பயனாளிகளின் பெயர்ப்பட்டியலை விரைவில் கிடைக்கச் செய்வது இத்திட்டத்தின் செயற்பாடுகளை காலதாமதமற்ற முறையில் நிறைவேற்றலைச் சாத்தியமாக்கும்.

இந்த முன்னோடித் திட்டத்தை விரைவில் செயற்படுத்துவதானது மீதமாயுள்ள 49,000 வீடுகளை அமைப்பதற்கான ஒழுங்குகளைச் செய்வதையும் எளிதாக்கும் என எதிர்பார்க்கின்றோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக