27 ஏப்ரல், 2011

ரஷ்யா மற்றும் சீனா கொடுத்த அழுத்தமே பான் கீ மூனின் பின்வாங்கலுக்கு காரணம்

ஐக்கிய நாடுகள் சபையின் சட்டதிட்டங்களுக்கு அப்பாற்பட்டு செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழு தயாரித்துள்ள அறிக்கையை நாங்கள் முழுமையாக எதிர்க்கின்றோம். இது தொடர்பில் உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியில் தெளிவுபடுத்தல்களை மேற்கொள்ளவுள்ளோம். உள்நாட்டில் மக்களை தெளிவுபடுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் கருத்தரங்குகளை நடத்த ஏற்பாடுகளை செய்துள்ளோம் என்று சுதந்திர பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த விடயம் குறித்து ரஷ்யாவும் சீனாவும் கொடுத்த அழுத்தம் காரணமாகவே ஐ.நா. செயலாளர் நாயகம் தனது நிலைப்பாட்டில் பின்வாங்கியுள்ளார். அதாவது ஆரம்பத்தில் கடும் தொனியில் செயற்பட்ட பான் கீ மூன் தற்போது உறுப்பு நாடுகள் இணக்கம் வெளியிட்டால் மட்டுமே சர்வதேச விசாரணை ஒன்றுக்கு செல்ல முடியும் என்று கூறியுள்ளார் எனவும் சங்கம் குறிப்பிட்டது.

அந்த வகையில் ஐ.நா. வின் செயற்பாட்டினால் இலங்கையில் ஏதாவது குழப்பங்கள் ஏற்படின் அல்லது சமாதான நிலைமையில் விரிசல் ஏற்படின் அதற்கான முழுப் பொறுப்பையும் ஐ.நா. செயலாளரே ஏற்கவேண்டும் என்றும் விரிவுரையாளர் சங்கம் கூறுகிறது.

கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட இந்த சங்கத்தின் பிரதிநிதிகள் மேற்கண்ட விடயங்களை குறிப்பிட்டனர்.

சுதந்திர பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தின் தலைவரும் பேராதனை பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளருமான கலாநிதி விஜித்த நாணயக்கார கருத்து வெளியிடுகையில் :

இந்த நெருக்கடியான சூழலில் நாட்டில் அனைவரும் இன மத கட்சி பேதமின்றி ஒற்றுமையுடன் செயற்படவேண்டும். ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் ஒன்றுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை செயற்படுவதை ஏற்க முடியாது. 26 வருடகால பயங்கரவாதத்தையே அரசாங்கம் தோற்கடித்தது. அந்த வகையில் தற்போது பொருளாதார அபிவிருத்தியை நோக்கி பயணிக்கும் எமது நாட்டுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் ஐ.நா. நிபுணர் குழு செயற்பட்டுள்ளது. அதனை ஏற்க முடியாது. எனவே எமது நாட்டின் இறைமைக்கு எதிராக செயற்படும் நிலைமை தொடர்பில் நாங்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும். நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையை குழப்புவதற்கு இடமளிக்க முடியாது. யுத்தம் முடிவடைந்தததிலிருந்து புலிகளின் சர்வதேச செயற்பாட்டாளர்கள் பாரியளவில் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றனர். தற்போது இந்த நிபுணர் குழு விடயமானது எமது நாட்டுக்கு எதிரான சதித்திட்டங்களின் ஒரு அங்கம் மட்டுமேயாகும். எனவே அனைவரும் முன்வந்து முழு மனதுடன் இந்த அறிக்கையை நிராகரிக்கவேண்டும் என்றார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் எம். எஸ். அனீஸ் கருத்து வெளியிடுகையில் :

உலகில் மிகவும் பலமான பயங்கரவாத அமைப்பையே அரசாங்கம் தோற்கடித்துள்ளது. வடக்கு கிழக்கு மாகாணங்களின் மக்களை மீட்கும் நோக்கிலேயே இந்த பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தற்போது யுத்தம் முடிவடைந்துவிட்டது. இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு தயாரித்துள்ள அறிக்கையானது உள்நோக்கம் கொண்டது.

பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டமை காரணமாக முழுமையாக வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களே நன்மையடைந்தனர். அவர்கள் இன்று சுதந்திர காற்றை சுவாசிக்கின்றனர். அந்த வகையில் இலங்கைக்கு சர்வதேச ரீதியில் அபகீர்த்தி ஏற்படும் வகையில் நிபுணர் குழு செயற்பட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கின்றோம்.

இந்த அறிக்கையானது எமது நாட்டின் இறைமைக்கு சவால்விடக்கூடியதாக உள்ளது. 1983 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டுவரை புலிகளால் சுமார் 75 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். தமிழ் சிங்களம் மற்றும் முஸ்லிம் என்ற வேறுபாடின்றி கொன்றொழித்தனர்.

அப்போது இந்த ஐக்கிய நாடுகள் சபை எங்கே இருந்தது? அதன் செயலாளர் என்ன செய்துகொண்டிருந்தார்? மக்களால் உருவாக்கப்பட்ட அரசுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையினால் செயற்பட முடியுமா?

1988 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜே.வி.பி. பிரச்சினையில் 60 ஆயிரம் இளைஞர்கள் கொல்லப்பட்டனர். அப்போது இந்த ஐக்கிய நாடுகள் சபை ஏன் வாய் திறக்கவில்லை? இந்த நிபுணர் குழுவின் அறிக்கையில் உள்நோக்கம் உள்ளது. இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

எனவே இதன் பின்னணியில் சர்வதேச சதித்திட்டம் ஒன்று உள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் கட்சிபேதங்களை மறந்து நாட்டுக்காக ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் என்றார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை விரிவுரையாளர் பிரதீப மஹாஹேவா கருத்து வெளியிடுகையில் :

ஐக்கிய நாடுகள் இவ்வாறு குழுவை நியமித்து அறிக்கை தயாரித்துள்ளதை ஏற்க முடியாது. இந்த விடயத்தில் ரஷ்யா மற்றும் சீனா ஆகிய வீட்டோ அதிகாரம் கொண்ட நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக செயற்படுகின்றன.

இந்த நாடுகளின் அழுத்தம் காரணமாக ஐ.நா. செயலாளர் நாயகம் பின்வாங்கியுள்ளார். அதாவது ஆரம்பத்தில் கடும் தொனியில் செயற்பட்ட பான் கீ மூன் தற்போது உறுப்பு நாடுகள் இணக்கம் வெளியிட்டால் மட்டுமே சர்வதேச விசாரணை ஒன்றுக்கு செல்ல முடியும் என்று கூறியுள்ளார்.

எனவே தற்போதைய நிலைமையில் ஐ.நா. வின் செயற்பாட்டினால் இலங்கையில் ஏதாவது குழப்பங்கள் ஏற்படின் அல்லது சமாதான நிலைமையில் விரிசல் ஏற்படின் அதற்கான முழுப் பொறுப்பையும் ஐ.நா. செயலாளரே ஏற்கவேண்டும். மேலும் ரஷ்யா மற்றும் சீனா ஆகிய வீட்டோ அதிகாரம் கொண்ட நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக உள்ளமையினால் இந்த அறிக்கையினை ஐ.நா. வின் பாதுகாப்பு சபைக்கு கொண்டு செல்ல முடியாது.

மேலும் எமது வெளிநாட்டு தூதுவர்கள் சற்று உற்சாகமாக செயற்பட்டு சர்வதேச ரீதியில் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் முயற்சிகளை தோற்கடிக்க முன்வரவேண்டும் என்றார்.

சுதந்திர பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அஜித் திசாநாயக்க குறிப்பிடுகையில் :

இது எமது ஆரம்ப முயற்சி மட்டுமேயாகும். இந்த நாட்டின் இலவசக் கல்வியை பெற்ற நாங்கள் நாட்டுக்காக செயற்படவேண்டியது கட்டாயமாகும். எனவே ஐ.நா.வின் இந்த விடயம் தொடர்பில் உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியில் தெளிவுபடுத்தல்களை மேற்கொள்ளவுள்ளோம்.

உள்நாட்டில் மக்களை தெளிவுபடுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் கருத்தரங்குகளை நடத்த ஏற்பாடுகளை செய்துள்ளோம். கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கை மே மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் வெளிவரவுள்ளது. இந்நிலையில் அதற்கு முன்னர் இவ்வாறு அறிக்கை வெளியிடுவது முறையற்ற விடயமாகும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக