18 மார்ச், 2011

10 வகை உணவுப் பொருட்களின் விலை 30 வீதத்தால் குறையும் வர்த்தக அமைச்சு





சிங்கள- தமிழ் புது வருட பண்டிகை காலத்தில் 10 வகை அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் சுமார் 30 சதவீதத்தால் குறைவடையும் என்று வர்த்தக அமைச்சின் செயலாளர் சுனில் எஸ். சிரிவர்தன தெரிவித்துள்ளார்.

சீனி, கிழங்கு, வெங்காயம், பருப்பு, கோதுமை மா, கடலை, பயறு, நெத்தலி, ரின் மீன், அரிசி உள்ளிட்ட உணவு வகைகள் சதொச மற்றும் கூட்டுறவுச் சங்க களஞ்சியசாலைகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதால் எதிர்காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைவடையும் என்று அவர் கூறியுள்ளார்.

35 ஆயிரம் மெட்ரிக் தொன் உள்ளூர் கிழங்கு ஊவா பரணகம, வெலிமடை மற்றும் நுவரெலியா ஆகிய இடங்களில் இருந்து சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கிழங்கும் தற்போது சந்தையில் உள்ளது என்று அவர் மேலும் கூறினார். அதேவேளை 5 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியும் சந்தையில் விநியோகிக்கப் பட்டுள்ளது.

இது மட்டுமன்றி இறக்குமதியாகும் உணவுப் பொருட்கள் இலங்கைக்கு விரைவில் வந்து சேரவுள்ள நிலையில் உணவுப் பொருட்கள் பலவற்றின் விலைகள் ஏற்கனவே குறைந்துள்ளன.

204 ரூபாவுக்கு விற்கப்பட்ட டின் மீன் 174 ரூபாவுக்கும், ஒரு கிலோ 97 ரூபாவுக்கு விற்கப்பட்ட சீனி 90 ரூபாவுக்கும், ஒரு கிலோ 100 ரூபாவுக்கு விற்கப்பட்ட பெரிய வெங்காயம் 70 ரூபாவுக்கும் ஒரு கிலோ 90 ரூபாவுக்கு விற்கப்பட்ட சின்ன வெங்காயம் 60 ரூபாவுக்கும் ஒரு கிலோ 220 ரூபாவுக்கு விற்கப்பட்ட பயறு 216 ரூபாவிற்கும், ஒரு கிலோ 145 ரூபாவுக்கு விற்கப்பட்ட பருப்பு 139 ரூபாவுக்கும், முட்டை ஒன்று 12 ரூபாவுக்கும் தற்போது விலை குறைந்திருப்பதாக செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக