17 பிப்ரவரி, 2011

இலங்கை அக்கறையை வெளிப்படுத்த வேண்டும் - கோரிக்கை

இலங்கை,அதன் மீது விமர்சனங்களை முன்வைப்போரை தூற்றுவதை விட்டுவிட்டு, அங்கு கடந்த 2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இறுதிக்கட்ட இராணுவ நடவடிக்கையின் போது நிகழ்ந்த சம்பவங்களுக்கான பொறுப்பேற்கும் தன்மை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு தீர்வு காண்பதில் தனக்குள்ள அக்கறையை வெளிப்படுத்த வேண்டுமென அங்கு ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட கடந்த கால யுத்தம் தொடர்பான ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் அந்நாட்டின் மூத்த இராஜிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்று முடிந்த உள்நாட்டு யுத்தத்துக்கான காரணங்கள் பற்றியும் இறுதிக்கட்ட போரின் போதான சம்பவங்கள் பற்றியும் ஆராய்ந்து, எதிர்வரும் மே மாதம் அரசாங்கத்துக்கு அதன் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ள படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவில் முன்னர் ஐநாவுக்கான இலங்கைத் தூதுவராக செயற்பட்ட எச்.எம்.ஜீ.எஸ், பலிஹக்கார அங்கம் வகிக்கின்றார்.

இலங்கை அரசும் அரசியல் கட்சிகளும் தோல்வியடைந்த தலைமைத்துவத்தையே வெளிக்காட்டியுள்ளதாகவும் நாடு கடுமையான சர்வதேச கவனத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில், வெளிநாட்டு யோசனைகள் தவிர்க்கமுடியாதவை எனவும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பிரதி தலைவருக்குரிய பணிகளை ஆற்றியுள்ள பலிஹக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.

போருக்குப் பின்னரான நாடு வெளிநாட்டு கொள்கைகளில் எதிர்கொண்டுள்ள சவால்கள் பற்றி விரிவுரையொன்றை ஆற்றும் போதே, இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய வெளியுறவுச் செயற்பாடுகள் தொடர்பில் விமர்சனப்போக்கை வெளிப்படுத்தியுள்ளார்..

விடுதலைப் புலிகள் ஆயிரக்கணக்கான சிவிலியன்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தியமை அந்த மக்களை பெரும் மனிதநேய அபாயத்தில் தள்ளியமையால் உலகின் முக்கிய சக்திகள் நல்லெண்ண அடிப்படையில் தலையிட்டு பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலமான முடிவொன்றையே காணும் நிலமை ஏற்பட்டதாகவும் முன்னாள் ஐநா தூதுவர் தெரிவித்தார்.

இலங்கை அரசு அதன் இராணுவ நடவடிக்கையை ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் தடுத்து நிறுத்தாமல் அதனை தவிர்த்து போரில் வெற்றி பெற முடிந்தது, இருந்தபோதிலும் தற்போது நாடு இன்னும் பல இராஜதந்திர பிரச்சனைகளுக்கு முகம்கொடுத்துள்ளது.

இந்த நிலைமைகளிலிருந்து நாடு விடுபடுவதற்கு இலங்கை மீது விமர்சனங்களை முன்வைப்போர் அடங்கலாக அனைத்து நாடுகளுடனுமே இணைந்து செயற்படவேண்டியது அவசியம் எனவும், போர்க்கால சம்பவங்கள் தொடர்பில் பொறுப்பேற்கப்படவேண்டியுள்ள நிலைமைகள் குறித்து தமது கவலைகளை வெளிப்படுத்துவோருக்கு, அரசாங்கம் அது குறித்து மிகுந்த அக்கறையுடன் செயற்படுகின்றது என்பதை வெளிக்காட்ட வேண்டுமென எச்.எம்.ஜீ.எஸ், பலிஹக்கார தெரிவித்தார்.

மிக முக்கியமாக, விடுதலைப்புலிகளின் பயங்கரவாதத்தினாலோ அல்லது இராணுவத்தினரின் படைநடவடிக்கையினாலோ எதனால் பாதிக்கப்பட்டிருந்தாலும் போருடன் தொடர்புடைய துயரங்களுக்கும் அவற்றுக்கான அடிப்படைக் காரணங்களுக்கும் அரசாங்கம் பொறுப்பேற்கிறது என்பதை குறிப்பாக போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணர்த்த வேண்டும்..

இலங்கை மீதான விமர்சனங்களை முன்வைப்போரால் ஏற்படுகின்ற தற்போதைய சவால்களை இவ்வாறு தான் எதிர்கொள்ள வேண்டுமே தவிர அந்த விமர்சகர்களை தூற்றிக்கொண்டிருக்கக் கூடாது எனவும் ஐநாவுக்கான முன்னாள் தூதுவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான போக்கு ஒருபோதும் தேசத்துரோகமாகாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் இடம்பெற்ற பல மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட அரசாங்கத்தின் விசாரணைகள் எந்த வித நீதியையும் இதுவரை வழங்க வில்லையென சர்வதேச மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டு வருகின்றன.

அரசாங்கம், போரில் பாதிக்கப்பட்ட சமூகங்களின் குறிப்பாக சிறுபான்மை மக்களின் உண்மையான கவலைகளை மனிதநேய அடிப்படையிலான கொள்கைகளுடன் அணுகும் அளவுக்கு நாட்டில் மனித உரிமைகள் மேலோங்க வேண்டுமென பலிஹக்கார மேலும் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக