17 பிப்ரவரி, 2011

சிறுபிள்ளைகளை காண்பித்து பிச்சையெடுக்கும் பெண்களுக்கு எதிராக நடவடிக்கை


சிறு பிள்ளைகளைக் காண்பித்து அதன் மூலம் பொதுக்களின் அனுதாபத்தைப் பெற்று பிச்சையெடுக்கும் பெண்களுக்கு எதிராக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் என்று அதன் தலைவி திருமதி அனோமா திஸாநாயக்க தெரிவித்தார்.

பிள்ளைகள் தங்கள் சிறுபராயத்தை சுதந்திரமாக கழிப்பதற்கான பிறப்புரிமையைப் பெற்றுள்ளார்கள். அந்த உரிமையை அப்பிள்ளைகளைப் பெற்றெடுத்த தாய்க்கு கூட பறித்து விட முடி யாது என்று சிறுவர் பாதுகாப்பு சட்டம் வலியுறுத் துகின்றது.

வீதியில் கைக்குழந்தைகளையும் சிறு பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு பிச்சையெடுக்கும் பெண்களை அந்தந்த பிரதேசங்களில் உள்ள பொலிஸ் நிலையங்களில் இருக்கும் சிறுவர் பராமரிப்பு மற்றும் மகளிர் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்து சம்பந்தப்பட்ட பெண்களை நீதிமன்ற உத்தரவின் பெயரில் இரண்டு வாரங்களுக்கு விளக்கமறியலில் வைத்து பிள்ளைகளை சிறுவர் பாதுகாப்பு இல்லங்களில் சேர்த்து அவர்களை நல்ல முறையில் பராமரிப்பார்கள்.

இரண்டு வார காலத்தில் அப்பெண் போதைவஸ்து உபயோகித்தல், அவற்றை விற்பனை செய்தல், சிறு திருட்டுகள், விலைமாதர் தொழில் புரிகின்றமை போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடவில்லை என்பது நிரூபிக்கப்பட்டால் நீதிமன்றம் இப்படியான தொழிலில் ஈடுபடலாகாது என்று எச்சரித்து பிள்ளைகளையும் தாயமாரிடம் மீண்டும் ஒப்படைத்து விடும்.

அதேவேளையில், மேலே குறிப்பிட்ட குற்றச்செயல்களில் இப்பெண்கள் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு எதிராக நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கி தண்டிக்கும், தாய் சிறையில் இருக்கும் காலத்தில் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பி சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினர் மிகவும் கவனமாக வளர்ப்பார்கள் என்று திருமதி அனோமா திஸாநாயக்க தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக