25 பிப்ரவரி, 2011

லிபியாவிலுள்ள இலங்கையரை திருப்பி அழைக்க விசேட ஏற்பாடு


லிபியாவில் பணியாற்றும் இலங்கையர் களை நாட்டுக்கு அழைத்துவர கப்பலொன்று அனுப்பிவைக்கப்பட்டி ருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.தனியான விமானத்தில் அழைத்து வரஅரசாங்கம்நடவடிக்கை

லிபியா மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் ஏற்பட்டிருக்கும் குழப்பமான சூழ்நிலையால் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கையர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்குத் தேவையான கப்பலொன்று அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும் இந்த விடயம் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் டிலான் பெரேரா தொடர்ந்தும் வெளிநாட்டுத் தூதரகங்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

லிபியாவிலுள்ள இலங்கையர்கள் அந்நாட்டு அரசாங்கத்தின் ஊடாக இத்தாலிய எல்லையில் வைத்துக் கையளிக்கப்படுவார்கள் என்றும் அவர்களை அழைத்து வருவதற்கும், அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதற்கும் அரசாங்கம் தயாராகவுள்ளது. அங்குள்ள நிலைமைகளை அரசாங்கம் உன்னிப்பாக அவதானித்து வருகிறது என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கூறினார்.

பாராளுமன்றில் அமைச்சர் டிலான்


திரிபோலியைத் தவிர சகல விமான நிலையங்கள் பூட்டு; மோல்டாவுக்கு கப்பல் அனுப்ப தீர்மானம்

லிபியாவில் உள்ள 344 இலங்கை பணியாட்களை நாட்டுக்கு திருப்பி அழைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் டிலான் பெரேரா கூறினார். இவர்கள் இன்று அல்லது நாளை விமானம் மூலம் இலங்கையை வந்தடைய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் அவசரகால சட்டம் தொடர்பில் இடம்பெற்ற ஒத்திவைப்பு வேளை விவாதத்தில், உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது :-

லிபியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலையையடுத்து பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களை திருப்பி அழைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். 37 பணியாட்கள் கிரீஸ் நாட்டுக்கு சென்றுள்ளனர். அங்கிருந்து அவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்படுவர். லிபியா தூதரகத்தில் 200 பேர் தஞ்சமடைந்துள்ளனர்.

அவர்களை விமானம் மூலம் நாட்டுக்கு திருப்பி அழைத்து வர உள்ளோம். விமானம் கிடைக்காவிட்டால் தனியான விமானம் ஒதுக்கி அழைத்து வர நடவடிக்கை எடுத்துள்ளோம்.

திரிப்போலி விமான நிலையம் தவிர ஏனைய விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், கப்பல் மூலம் மோல்ட்டா அல்லது லிபியாவை அண்டிய நாட்டுக்கு அவர்களை அழைத்து வந்து அங்கிருந்து நாட்டுக்கு கொண்டுவர உள்ளோம். 107 பேர் எம்முடன் தொடர்பு கொண்டுள்ளனர். அவர்களை லிபிய தூதரகத்திற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவர்களையும் இரண்டு தினங்களுக்குள் நாட்டுக்கு அழைத்து வருவோம். லிபியாவில் உள்ள பணியாட்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்குத் தேவையான விமான டிக்கெட்டுகளுக்கான நிதி தூதரகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. லிபியாவில் 1200 இலங்கை பணியாட்கள் உள்ளனர். அனைவரும் அரசியல் நெருக்கடியினால் பாதிக்கப்படவில்லை. நாடு திரும்ப விருப்பமானவர்கள் மீள அழைத்து வரப்படுவர்.

அங்குள்ள இலங்கையரை பாதுகாக்கவும் நாட்டுக்கு அழைத்து வரவும் சகல ஒழுங்குகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அரசியல் நெருக்கடியினால் பாதிக்கப்பட்டு ள்ள இலங்கையர் குறித்து ஆராய 24 மணி நேரமும் இயங்கக் கூடிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக