25 பிப்ரவரி, 2011

மீனவர் பிரச்சினைக்கு இணக்கப்பாட்டுடன் நிரந்தர தீர்வு





கடற்றொழில் தொடர்பான பிரச்சினைக்கு இரு நாடுகளுக்குமிடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி நிரந்தர தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் கூறினார். இது தொடர்பில் இரு நாடுகளுக்குமிடையில் கூட்டுக்குழுவொன்றை அமைக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் நேற்று உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது,மீனவர் தொடர்பான பிரச்சினையின் போது இரு நாட்டுக்குமிடையிலான நல்லுறவின் அடிப்படையில் கெளரவமாகவே நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இந்திய மீனவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து பூரண விசாரணை முன்னெடுக்கப்படுகிறது. இதற்கான முழு அதிகாரம் கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற கடல் எல்லை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு எமது கடற்படை படகுகள் எதுவும் செல்லவில்லை.

இந்திய மீன்பிடிப்படகுகளை சந்திக்க நேரிட்டால் எமது கடற்படையினர் மனிதாபிமானமாகவே செயற்பட்டு வந்துள்ளனர்.

யுத்தம் மற்றும் பாதுகாப்புப் பிரச்சினை காரணமாக வடக்கு கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது அந்த நிலை மாறியுள்ளது. வடபகுதி மக்கள் தமது வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப ஆரம்பித் துள்ளனர்.

மீன்பிடி பிரச்சினை தொடர்பில் நாம் இந்திய வெளியுறவுச் செயலாளருடன் பேச்சு நடத்தி வருகிறோம். மனிதாபிமான ரீதியில் இதற்கு தீர்வு காண முயற்சி முன்னெடுக்கப்படுகிறது.

கடல் எல்லையை தாண்டிச் சென்று மீன்பிடிப்பது தொடர்பில் நிரந்தர தீர்வு எட்டப்பட வேண்டும். இதற்கு தற்காலிக தீர்வு காண்பது நல்லதல்ல. பல தடவைகள் இரு நாடுகளும் பேச்சு நடத்தியுள்ளன.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணக்கூடிய தெளிவான அரச இயந்திரம் உள்ளது. இதனூடாக இரு நாடுகளும் இணைந்து இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாண உள்ளோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக