25 பிப்ரவரி, 2011

வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்கும் வகையில் திட்டம்






திருகோணமலையில் பாரிய கைத்தொழில் பேட்டையொன்றை உருவாக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்பொழுது அதிகரித்திருக்கும் வெளிநாட்டு முதலீடுகளை மேலும் அதிகரிக்கச் செய்யும் வகையில் அனைத்து உட்கட்டுமான வசதிகளுடன் கூடிய வலயமொன்றைத் திருகோணமலையில் அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருப்பதாக கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் குறிப்பிட்டார்.

பாரிய தொழில்துறை வலயமொன்றை அமைப்பதாயின் துறைமுக வசதிகள் அவசியம் என்பதால் திருகோணமலை சம்பூரில் தொழில்பேட்டையொன்றை அமைப்பதற்கும், இதற்கு 97 சதுரக் கிலோமீற்றர் நிலப்பரப்பை ஒதுக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். நிலக்கரி சூழை,இரும்பு உருக்குச் சூழை, பாரிய இயந்திரங்களைப் பொருத்தக்கூடிய வலயமொன்றை மிஷேல் பல்தேசிய நிறுவனம் அவுஸ்திரேலியா, பிரேசில் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுடன் இணைந்து உருவாக்குவதற்கான திட்டமொன்றும் தயாரிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த அமைச்சரவைத் தீர்மானத்துக்கு அமைய இந்த வலயம் தொடர்பான தகைமைகாண் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அறிவித்தார். இந்த வலயத்தின் முதற்கட்டத்திற்கு 700 மில்லியன் அமெரிக்க டொலர் தேவையென மதிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான தொழில்பேட்டையால் இயற்கைக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாதா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், இவ்வாறு அமைக்கப்படவிருக்கும் பாரிய தொழில் பேட்டையானது சுற்றாடலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதவகையில் அமைக்கப்படும். உலக நாடுகள் தற்பொழுது எதிர்நோக்கியிருக்கும் இரண்டு முக்கிய பிரச்சினைகளான உணவுப் பிரச்சினை மற்றும் சூழல் மாசடைதல் ஆகியவற்றில் இலங்கை அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது என்றார்.

இதேவேளை, முதலீட்டுச் சபையால் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் சில திட்டங்கள் காலதாமதமடைவதாக முதலீட்டாளர்கள், பலர் விசனம் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக கருத்துரைத்த அமைச்சர், சில திட்டங்களில் காலதாமதம் காணப்படுகிறது. இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது என்றார்.

இதுவரை காலமும் எந்தவொரு நிறுவனமும் இலங்கையில் ஒரு ரூபாவைக்கூட முதலிட முன்வரவில்லை. ஆனால், நாட்டில் அமைதிநிலை தோன்றிய பின்னரே முதலீடுகள் அதிகரித்துள்ளன. கடந்த 18 மாதங்களாகவே இவ்வாறான பிரச்சினைகள் ககாணப்படுகின்றன. நாளாந்தம் இவ்வாறான பிரச்சினைகள் காணப்படும். இவற்றைத் தீர்ப்பதற்கும் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுத்துள்ளது எஎன்றும் அமைச்சர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக