25 பிப்ரவரி, 2011

தேர்தல்: சகல பிரதேசங்களிலும் ஐ.ம.சு.மு அமோக வெற்றிபெறும்





கிராமிய மக்களாலேயே தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக நடத்தப்படுகின்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றிபெறும் என முன் னணியின் தலைவர்கள் தெரிவித்தனர்.

கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்ற முன்னணியின் செய்தியாளர் மாநாட்டிலேயே முன்னணியின் தலைவர்களான அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, அமைச்சர் பாடலி சம்பிக ரணவக்க, அமைச்சர் விமல் வீரவன்ச ஆகியோர் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை ஒன்றாக ஒரே நேரத்தில் நடத்துவதையே அரசாங்கம் விரும்புகிறது. விட்டுவிட்டு நடத்தவோ, கட்டம் கட்டமாக நடத்துவதோ அரசின் எண்ணமில்லை.

தேர்தல்கள் பின்போடப்பட்ட இடங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றிபெறும்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தனது முதலாவது மாநாட்டை எதிர்வரும் 28ம் திகதி அனுராதபுரத்திலிருந்து ஆரம்பிக்கிறது என்றும் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

வேட்பு மனுக்கள் நிராகரிக்கப் பட்டால் அதற்கெதிராக நீதிமன்றம் செல்வது தவறு என ஜே. வி. பி.யினர் கூறுகின்றனர். தேர்தல் ஆணையாளர் என்ன முடிவை எடுக்கிறாறோ அதனை ஏற்றுக் கொண்டு அமைதியாக இருக்க வேண்டும் என்கிறார்கள். ஐ. ம. சு. மு. வினதும் ஐ. தே. க. வினதும் சுயேச்சை குழுக்களினதும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டவுடன் அவை அமைதியாக இருந்துவிட வேண்டும் என ஜே. வி. பி. கூறுகிறது. ஆனால் முன்பு ஒருமுறை ஜே. வி. பி.யின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால் ஜே. வி. பி. யினரே அதற்கு எதிராக நீதிமன்றம் சென்றது.

இந்த ஞானம் ஏன் அன்று ஜே. வி. பி.யினருக்கு வரவில்லை. ஜே. வி. பி.யினருக்கு இன்று இனங்காண முடியாத அரசியல் நோய் ஒன்று பீடித்துள்ளது. ஐ. ம. சு. முன்னணியின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதால் திஸ்ஸமகாராம, ஹோமாகம, எம்பிலிப்பிட்டிய போன்ற இடங்களில் ஓரளவேனும் தமது அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்ளலாம் என்ற நட்பாசையுடன் இருந்த அவர்களுக்கு நாம் நீதிமன்றம் சென்றது அச்சத்தை கிளப்பிவிட்டிருக்கிறது. அவர்கள் கோட்டைகள் சரிந்து விடுவது நிச்சயம்.

ஐ. தே. க. வின் தலைவர் இன்று நாட்டிலேயே இல்லை. தேர்தல் காலத்தில் நிற்கும் தமது வேட்பாளர்கள் பற்றி அவருக்கு அக்கறை இல்லை. வேட்பாளர்களும் விரக்தியடைந்த நிலையில் இருக்கிறார்கள். ஐ. தே. க.வில் சஜித் பிரேமதாசா உட்பட 50 வீதமானவர்கள் ஐ. ம. சு. மு.வுக்கே வாக்களிக்கவுள்ளனர். மீதமானவர்கள் வாக்களிப்பிலிருந்து ஒதுங்கிக் கொள்வார்கள்.

எதிர்வரும் 17ம் திகதி தேர்தல்கள் முடிவடைந்த பின்னர் ஐ. ம. சு. மு. அமோக வெற்றி! ஐ. தே. க. 10ஆவது தடவையாகவும் தோற்றது! ஜே. வி. பி.யின் திஸ்ஸ மகாராம கோட்டையும் சரிந்தது!!! என்ற பிரதான தலைப்பை தாங்கிய செய்திகள் வெளிவரும் என்றும் விமல் வீரவன்ச கூறினார்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கிராமிய மக்கள் நிச்சயமாக ஐ. ம. சு. முன்னணிக்கே ஆதரவை வழங்குவார்கள்.

அரசாங்கத்தை அச்சுறுத்தவோ, அல்லது அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுக்கவோ பாடம் புகட்ட வேண்டும் என்றோ மக்கள் எண்ணவில்லை.

குடிநீர், நீர்ப்பாசனம், மின்சாரம், வீதிகள் உள்ளிட்ட உட்கடமைப்பு வசதிகளையும் கிராம மட்டத்திலிருந்து பெற்றுக் கொடுப்பதே உள்ளூராட்சி தேர்தல்களின் நோக்கமாகும். அம்மக்களுக்கு தெரிந்த ஒரு பிரதிநிதியை அவர்களாகவே தெரிவு செய்வதற்காக ஒரு சந்தர்ப்பம் கமநெகும, மகநெகும, திவிநெகும போன்ற திட்டங்களின் ஊடாக கிராமங்களிலிருந்து நாட்டை அபிவிருத்தி செய்வதே அரசின் நோக்கமாகும். எனவே, இதனை உறுதி செய்யும் வகையில் மக்கள் அரசுக்கு நிச்சயமாக வாக்களிப்பார்கள் என்றும் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக