25 பிப்ரவரி, 2011

அவசரகால சட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்வுக்கு பாதிப்பில்லை சகல உரிமைகளையும் தமிழரும் அனுபவிக்க வேண்டும்: அரசின் இலக்கு






அவசரகால சட்டத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையெனவும், நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்புக்காகவே அச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் பிரதமர் டி. எம். ஜயரட்ண பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அவசியமில்லையென பாதுகாப்புப் படையினர் உத்தரவாதமளிக்கும் பட்சத்தில், அதனை நீக்கிவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமெனவும் பிரதமர் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கில் அவசரகால சட்டத்தைப் பயன்படுத்தி தமிழ் மக்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன என ஜே.வி.பி. எம்.பி. அநுரகுமார திசாநாயக்க சபையில் முன்வைத்த குற்றச்சாட்டை முற்றாக மறுத்த பிரதமர், நாட்டின் ஏனைய பகுதி மக்கள் அனுபவிக்கும் சகல உரிமைகளையும் தமிழ் மக்களும் அனுபவிக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் அரசாங்கம் செயற்படுகிறது எனவும், குறிப்பாக அம்மக்களின் கெளரவத்தைப் பாதுகாப்பதிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று ஜே.வி.பி. எம்.பி. அநுர குமார திசாநாயக்க அவசரகால சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டுமெனக் கோரி சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையொன்றை முன்வைத்தார்.

இதன் மீதான விவாதத்தை ஆரம்பித்துவைத்து அநுரகுமார திசாநாயக்க எம்.பி. முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கையிலேயே பிரதமர் டி. எம். ஜயரத்ன இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் பிரதமர் மேலும் தெரிவித்ததாவது:

அநுர குமார திசாநாயக்க எம்.பி. எதிர்வரும் உள்ளூராட்சிச் சபைத் தேர்தலை இலக்காக வைத்தே அவசரகால சட்டம் என்ற போர்வையில் சபையில் உரையாற்றியுள்ளார். அது மட்டுமல்ல, 1971ம் ஆண்டிலிருந்து தமிழர்களுக்கு எதிராக செயற்பட்ட ஜே.வி.பி.யினர் இப்போது வடக்கு, கிழக்கு மக்களுக்காக பரிந்து பேசுகின்றனர் என்றால் அது விந்தையே.

ஊடக சுதந்திரம் ஊடகங்கள் மீதான தாக்குதல்கள் குறித்தும் அவர் தமதுரையில் குறிப்பிட்டார். அது இத்தேர்தல் காலத்தில் ஊடகங்களின் ஆதரவை அதிகமாக பெற்றுக்கொள்வதற்காகவே என்பதை சகலரும் அறிவர்.

அவசரகால சட்டம் எவருக்கும் எதுவித பாதிப்பும் ஏற்படுத்தவில்லை. அதிலிருந்த சில கடுமையான சரத்துக்கள் அண்மையில் நீக்கப்பட்டன. தற்போது சாதாரண சட்டமே அதில் நடைமுறையிலுள்ளது.

அண்மையில்கூட சில பிரதேசங்களில் ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டன. புலி உறுப்பினர்கள் 5000 பேர் தற்போதும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எனினும், அவர்களுக்கு தொழிற் பயிற்சிகளை வழங்கி தொழில்களைப் பெற்றுக்கொடுப்பதிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அவர்களை நாம் எதிரிகளாகப் பார்க்கவில்லை.

யுத்தம் முடிவடைந்த போதும், நாட்டில் சில சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அதற்கு அவசரகால சட்டம் எவ்வகையிலும் காரணமல்ல. பாராளுமன்ற உறுப்பினர்களோ, அமைச்சர்களோ எத்தகைய சம்பவங்களிலும் சம்பந்தப்படவில்லை. அதேபோன்று ஊடகங்களுக்கு எதிராக இந்த அரசாங்கம் எந்தவித நடவடிக்கையும் மேற்கொண்டதில்லை.

அவசரகால சட்டத்தினால் பிரயோசனம் பெறுவதற்கு அரசு ஒருபோதும் நினைக்கவில்லை. நாட்டில் சகலரும் எவ்வித பயமும் அச்சமும் இன்றி சுதந்திரமாக வாழும் சூழலை ஏற்படுத்துவதிலேயே அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.

வேறு நாடுகளில் தினமும் ஆயிரக்கணக்கான மனிதப் படுகொலைகள் நடைபெறுகின்றன. எனினும் எமது மக்களில் 100ற்கு 94 வீதமானோர் படிப்பறிவுள்ளவர்கள். எத்தகைய பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கக்கூடிய வாய்ப்பு இங்குள்ளது.

அநுரகுமார திசாநாயக்க எம்.பி. செய் நன்றி மறந்து பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ மற்றும் சட்டமா அதிபரையும் குற்றஞ்சாட்டுகிறார் என்றார் பிரதமர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக