25 பிப்ரவரி, 2011

உலக கிண்ணம்: ஆர். பிரேமதாச மைதானத்துக்கு கடும் பாதுகாப்பு





இலங்கை - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ளதால் மாளிகாவத்தை பிரேமதாச அரங்கிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும், விசேட போக்குவரத்து ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய நேற்றுத் தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொலிஸ், இராணுவம், விசேட அதிரடிப்படை, எம். எஸ். ரி. போன்ற சிறப்பு பாதுகாப்புகள் வழங்கப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சங்கராஜ மாவத்தை, வின்சன்ட் பெரேரா மாவத்தை, பபாபுள்ளே மாவத்தை, பிரதீபா மாவத்தை, ஜும்மா மஸ்ஜித் ரோட், மாளிகாவத்தை லேன், ஸ்டேஸ் ரோட் போன்ற வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

0 ரூபா, 100 ரூபா, 500 ரூபா டிக்கட் பெற்றுக் கொண்டுள்ளவர்கள் பிரதீபா மாவத்தை சந்தி வழியாக கெத்தாராம அரங்கிற்குள் பிரவேசிக்கலாம்.

மேலும் 50 ரூபா, 100 ரூபா டிக்கெட் பெற்றுக்கொண்டுள்ளவர்கள் ஜும்மா மஸ்ஜித் வீதி வழியாக சென்று பி.1 மற்றும் பி.2 என்ற நுழைவாயில் ஊடாக கெத்தாராம அரங்கிற்குள் செல்லலாம்.

250 ரூபா, 500 ரூபா டிக்கெட் பெற்றுக் கொண்டவர்கள். புதிய போதிராஜ மாவத்தையூடாக சென்று கெத்தாராம அரங்கிற்குள் பிரவேசிக்க முடியும். உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் உத்தியோகபூர்வ அதிகாரிகள், அலுவலர்கள், ஊடகத்துறை என அடையாளமிடப்பட்ட வாகனங்கள் மற்றும் 5000 ரூபா அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை கொண்ட அனுமதி சீட்டை கொண்டவர்கள் பாபாபுள்ளே மாவத்தை ஊடாக சென்று அரங்கிற்குள் பிரவேசிக்கலாம் என்றும் பொலிஸ் மா அதிபர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக