22 பிப்ரவரி, 2011

காலியில் ஆணைக்குழுவிடம் 24 பேர் சாட்சியமளிப்பு




காலியில் சனிக்கிழமை நடைபெற்ற கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் விசாரணை அமர்வில் பிரதேசத்தை சேர்ந்த பொதுமக்கள் 24 பேர் கலந்துகொண்டு சாட்சியமளித்ததாக ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

வெள்ளிக்கிழமை மாத்தறையில் நடைபெற்ற நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வில் அதிகளவில் அரச ஊழியர்கள் கலந்துகொண்டு சாட்சியமளித்திருந்தனர். நாட்டின் சட்டம் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்றே மாத்தறையில் சாட்சியமளித்த பல அரச ஊழியர்கள் குறிப்பிட்டிருந்தனர். கொழும்பில் நடைபெற்றுவந்த ஆணைக்குழுவின் அமர்வுகள் முடிவுக்கு வந்த நிலையில் தற்போது வெளிமாவட்ட அமர்வுகள் நடைபெற்று வருகின்றன.

மார்ச் மாத நடுப்பகுதியளவில் அம்பாறை மாவட்டத்திலும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியிருந்த அம்பாறை மாவட்ட அமர்வுகள் அப்போது நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக பிற்போடப்பட்டுவந்தது.

இதேவேளை கொழும்பில் நடைபெறும் அமர்வுகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருந்தாலும் விசேட தேவைகள் ஏற்படின் சில அமர்வுகள் நடத்தப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அடங்கிய இறுதி அறிக்கை மே மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக