22 பிப்ரவரி, 2011

யாழ். மீனவர்கள் இந்திய துணை தூதரகத்திற்கு முன்னால் அமைதிப் போராட்டம்


இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வரும் இந்திய மீனவர்களின் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்துமாறு கோரி யாழ். மாதகல் பகுதி மீனவர்களும், குருநகர் மற்றும் பாசையூர் பகுதி மீனவர்களும் பலாலி வீதியிலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்துக்கு முன்னால் அமைதி வழியிலான போராட்டங்களை நேற்று நடத்தியிருந்தனர்.

இந்திய அரசாங்கத்துக்கு எதிரான வாசகங்களைத் தாங்கிய சுலோக அட்டைகள் சகிதம், கறுப்புத் துணிகளால் வாய்களை மூடியவாறு மாதகல் பகுதி மீனவர்கள் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந் தப் போராட்டத்தின் இறுதியில் கடற் றொழில் தலைவர்களுடன் இணைந்து மாதகல் பங்குத்தந்தை ஆனந்தகுமார், இந்தியத் துணை தூதரகத்தின் பிரதம அதிகாரி எஸ். மகாலிங்கத்திடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றையும் கையளித்திருந்தனர்.

அதேநேரம் , குருநகர் மற்றும் பாசையூர் மீனவர்கள் யாழ். ஆரியகுளச் சந்தியில் இருந்து பலாலி வீதியில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் வரை பேரணியாக வந்ததுடன், தூதரகத்துக்கு முன்னால் அமைதிப் போராட்டமொன்றையும் நடத்தியிருந்தனர்.

தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுவதாகவும், இதனால் இலங்கையின் கடல்வளம் அழிக்கப்படுவ தாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் தெரிவித்தனர். நேற்றுமுன்தினமும் 60 படகுகளில் இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இந்திய மீனவர்களின் இவ்வாறான நடவடிக்கையை தடுத்து நிறுத்தி தமக்கு நல்லதொரு முடிவைப் பெற்றுத்தர வேண்டும் என்பதற்காக யாழ். இந்தியத் துணைத் தூதரகத்துக்கு முன்னால் அமைதி வழியான போராட்டத்தில் தாம் ஈடுபட்ட தாகவும் மீனவர்கள் கூறினர்.

இதேநேரம், இந்த விடயம் தொடர்பாக, கருத்துத் தெரிவித்த வலிகாமம் தென்மேற்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமா சத் தலைவர் விநாயகமூர்த்தி சுப்பிரமணியம், 2010 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் இருந்து ஆரம்பித்த இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடித் தொழில் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாகக் கூறினார்.

இலங்கை கடற்பரப்புக்குள் வரும் இந்திய இழுவைப் படகுகள் இலங்கை மீனவர்களின் வலைகளை வெட்டிச் செல்வதுடன் களவாடிச் செல்வதாகவும் குறிப்பிட்டார்.

இந்திய மீனவர்களின் இவ்வாறான நடவடிக்கைகளினால் மாதகல் மீனவர்கள் 85 வீதமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், 145 படகுகளில் சென்று மீன்பிடியில் ஈடுபடும் மாதகல் மீனவர்கள் தற்போது 4 அல்லது 5 படகுகளிலேயே மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார். இதனால் மாதகல் மீனவர்கள் பட்டினிச்சாவை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக