10 டிசம்பர், 2010

அதிக மாணவர்களை உள்வாங்க தனியார் பல்கலைக்கழகங்கள் *வருடாந்தம் சுமார் 15 ஆயிரம் பேர் உயர்கல்விக்காக காத்திருப்பு *26 பல்கலைக்கழகங்களுடன் பேச்சு


*யாழ். பல்கலை நுண்கலை பிரிவை பீடமாக்க நடவடிக்கை



பல்கலைக்கழக வாய்ப்பின்றி இருக்கும் மாணவர்களைக் கூடுதலாக உள்வாங்கும் வகையில் அரச சார்பற்ற பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படுவதாக உயர் கல்வி அமைச்சர் எஸ். பி. திசாநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அதேநேரம், வெளிநாடுகளில் உள்ள புத்திஜீவிகளைத் திருப்பியழைக்கவும் இங்கிருந்து இனிமேல் யாரும் சென்று விடாதிருக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் சுட்டிக்காட்டிய அமைச்சர், உள்நாட்டு செலாவணியைப் பாதுகாக்கும் பொருட்டும் இந்தப் பல்கலைக்கழகங்களை நிர்மாணிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

உயர் கல்வி அமைச்சுக்கான நிதியொதுக்கீட்டுக் குழு நிலை விவாதத்திற்குப் பதில் அளித்துப் பேசிய அமைச்சர் திசாநாயக்க, யாழ். இராமநாதன் நுண்கலை பிரிவை நுண்கலைப் பீடமாக்குவதாகவும் உறுதியளித்துள்ளார்.

தனியார் பல்கலைக்கழகம் அல்லது அரச சார்பற்ற பல்கலைக்கழகம் வெறுமனே பணத்தை மட்டும் மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்படவில்லை. வருடாந்தம் சுமார் 15 ஆயிரம் பேர் உயர் கல்வி கேட்டு அழுது புலம்புகிறார்கள். ஆகவே, 20% புலமைப் பரிசில் வழங்க வேண்டும். இலவசக் கல்வியை விஸ்தரிக்கும் நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

தனியார் பல்கலைக்கழகம் வந்தால் அரச பல்கலைக்கழகங்கள் பாதிக்கப்படுமென சிலர் கூறுகிறார்கள். அப்படியாயின் நாம் அதற்கான சட்ட திட்டங்களை வகுத்துக் கொள்ள முடியும். இதற்கென அடுத்த மாதம் இரண்டு நாள் செயலமர்வொன்றை நடத்த வேண்டும் என்று கூறிய அமைச்சர் இதில் கலந்து கொள்ளுமாறு ஜே. வி. பி. உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்கவுக்கு அழைப்பு விடுத்தார்.

ஏற்கனவே, 57 தனியார் பல்கலைக்கழகங் கள் இங்கு இயங்கி பெருந்தொகைப் பணத்தைப் பெற்றுக் கொண்டு பட்டங் களை வழங்குகின்றன. அது பற்றி எல்லாம் யாரும் கதைக்கிறார்களில்லை. எமது பல்கலைக்கழகங்களின் நிலைமை மோசமானதால், எமது விரிவுரையாளர்கள் வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். இவ்வாறு சென்றவர்கள்தான் இங்கு வரவிருக்கிறார்கள். இப்படி 26 பல்கலைக்கழகங்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.

வெளிநாடுகளில் அதிக பணம் செலவழித்துப் பயில்கிறார்கள். நாம் சர்வதேச தரத்தில் பல்கலைக்கழகங்களை உருவாக்கினால் வெளிநாட்டு மாணவர்கள் இங்கு வருவார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக