10 டிசம்பர், 2010

ஒரு இலட்சத்து 42 ஆயிரம் பேர் பல்கலைக்கழகத்துக்கு தகுதி: கணித, விஞ்ஞானத்தில் யாழ்.மாணவர்கள் முதலிடம்

இம்முறை வெளியான க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின்படி ஒரு இலட்சத்து 42 ஆயிரத்து 381 மாணவர்கள் பல்கலைக் கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். இருந்தபோதும், வெட்டுப் புள்ளி அடிப்படையில் சுமார் 22 ஆயிரம் மாணவர்களுக்கே தேசிய பல்கலைக்கழகங்களில் அனுமதி பெறும் வாய்ப்புள்ளதாகக் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இப் பரீட்சைக்கு தமிழ் மொழிமூலத்தில் தோற்றிய மாணவர்களுள் கணிதப் பிரிவில் யாழ். வேம்படி மகளிர் கல்லூரி மாணவி சுமங்கலி சிவகுருநாதனும் உயரிரியல் விஞ்ஞான மாணவர்களுள் பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரி மாணவன் பாலகோபாலன் கோகுலனும், கலைப்பிரிவில் நீர்கொழும்பு நியுஸ்டெட் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த அமீருல் ஹம்சா பாத்திமா சஸ்னாவும் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தில் சித்தியடைந்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தது.

இப்பரீட்சையில் வர்த்தகப்பிரிவில் தோற்றிய மாணவர்களுள் தமிழ் பேசும் மாணவர்கள் எவரும் முதல் 10 இடங்களுக்குள் வருமளவுக்கு சித்தியடையவில்லை என்பதும், இம்முறை பரீட்சைக்குத் தோற்றிய 2 இலட்சத்து 30ஆயிரத்து 237 மாணவர்களுள் 23ஆயிரத்திற்கு மேற்பட்டோர் 3 பாடங்களிலும் சித்தியடையத் தவறியுள்ளமையும் குறிப்பிடத்தக்க விடயங்களாகும்.

2010ஆம் ஆண்டுக்காக கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற க.பொ. . உயர்தரப்பரீட்சைக்கு தோற்றியிருந்த மாணவர்களுள் உயிரியல் பிரிவில் தோற்ற 21,459 பேரும் கணிதப் பிரிவில் தோற்றியவர்களுள் 12,606 பேரும் வர்த்தகப் பிரிவு மாணவர்களுள் 35,571 பேரும் கலைப் பிரிவில் 72,745 மாணவர்களும் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இவர்களுள் பாடசாலைகளினூடாக தோற்றிய 120,256 மாணவர்களும் 22,125 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் உள்ளடங்குகின்றனர்.

பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிக்கும் தகுதியை 1 இலட்சத்து 42 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் விண்ணப்பிக்க தகுதிபெற்றுள்ள போதிலும் பல்லைக்கழக வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையிலேயே அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். இதன் அடிப்படையில் நோக்கினால் சுமார் 22 ஆயிரம் பேரே பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்பினை பெறும் சாத்தியமுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இப்பரீட்சையில் அகில இலங்கை ரீதியாக 4,384 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் ஏ சித்தியைப் பெற்றுளனர். அதாவது விஞ்ஞானப்பிரிவில் 367 பேரும் ,கணிதப்பிரிவில் 404 பேரும் வர்த்தகப் பிரிவில் 1,576 பேரும் கலைப்பிரிவில் 2,037 பேரும் 3 ஏ சித்திகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர். ஆயினும் 23,420 மாணவர்கள் 3 பாடங்களில் எஸ் சித்தியையேனும் பெறத் தவறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக