10 டிசம்பர், 2010

புலிகளின் செயற்பாட்டாளர்களால் லண்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம், தமிழ் மக்களின் ஆர்ப்பாட்டமல்ல: டலஸ்





லண்டனில் ஜனாதிபதி தங்கியிருந்த வேளையில் புலிகளின் செயற்பாட்டாளர்கள் 250 அல்லது 300 பேர் மேற்கொண்ட ஆர்ப்பாட்டமானது ஜனாதிபதிக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் காணப்படுகின்ற நெருங்கிய உறவுக்கு எந்த வகையிலும் தடையாகவோ பாதிப்பாகவோ அமையாது. அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருங்கிய மற்றும் சுமுகமான உறவுக்கும் ஏனைய தமிழ்க் கட்சிகளுடனான உறவுகளுக்கும் எவ்விதமான பாதிப்பும் ஏற்படாது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெஎக்ஷிருளாளரும் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஏனைய தமிழ் கட்சிகளுடனான எதிர்கால பேச்சுவார்த்தைகள் எவ்வாறு அமையும் என்பது தொடர்பில் விபரிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இம்முறை வரவு செலவுத்திட்டத்தை எதிர்த்து வாக்களிப்பது இல்லை என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ள நிலையிலேயே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் சுமுகமான உறவு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்திருக்கின்றார்.

இவ்விடயம் குறித்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேலும் குறிப்பிடுகையில்: ஜனாதிபதிக்கு லண்டனில் தங்கியிருந்த வேளையில் புலிகளின் செயற்பாட்டாளர்கள் 250 அல்லது 300 பேர் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். அது தமிழ் மக்களின் ஆர்ப்பாட்டம் அல்ல. மாறாக புலிகளின் செயற்பாட்டாளர்களின் நடவடிக்கையாகும்.

இந்நிலையில் அவ்வாறான செயற்பாடானது எந்த வகையிலும் ஜனாதிபதிக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் காணப்படுகின்ற நெருங்கிய உறவுக்கு எவ்விதமான பாதிப்பையோ தடையையோ ஏற்படுத்தாது.

மேலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் அரசாங்கத்துக்கு தற்போது சிறந்த சுமுகமான உறவு ஏற்பட்டுள்ளது. அந்த உறவு தொடர்ந்து முன்னெடுக்கப்படும். வடக்கின் அபிவிருத்தி மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் தொடர்ந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் அரசாங்கம் பேச்சுக்களை நடத்த எதிர்பார்க்கின்றது.

அண்மையில் கூட சில தமிழ்க் கட்சிகளுடன் ஜனாதிபதி பேச்சுக்களை நடத்தியிருந்தார். அந்த வகையில் லண்டனில் புலிகளின் செயற்பாட்டாளர்கள் மேற்கொண்ட நடவடிக்கை இங்குள்ள நெருங்கிய உறவுகளை எந்த வகையிலும் பாதிக்காது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக