வாழ்க்கைச் செலவு தொடர்பாக ஆராயவென ஜனாதிபதி தலைமையிலான 15 பேர் கொண்ட உயர்மட்ட அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த அமைச்சரவை உப குழுவை நியமித்துள்ளார். பிரதமர் உள்ளிட்ட 15 அமைச்சரவை அமைச்சர்களை உள்ளடக்கிய இவ்வுபகுழு, வாழ்க்கைச் செலவு மற்றும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற பொருளாதார அபிவிருத்தி பணிகள் ஊடாக மக்களுக்கு கிடைக்கும் பலன்கள், எவ்வகையான நிவாரணங்கள் மக்களுக்கு பெற்றுக் கொடுக்க முடியும் என்பது பற்றியும் ஆராய்ந்து பரிந்துரை செய்யும்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூடிய அமைச்சரவை கூட்டத்தின் போதே இந்த உயர்மட்ட அமைச்சரவை உப குழு நியமிக்கப்பட்டதாக அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறினார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இச் சமயத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக