10 டிசம்பர், 2010

யாழ். பல்கலைக்கழகத்தை தரமுயர்த்துவதற்கு தமிழர்களின் வரிப்பணத்தை பயன்படுத்தலாம்: மாவை




உலகத் தரத்திற்கு உயர்த்துவதற்கு இலங்கையிலுள்ள ஆறு பல்கலைக்கழகங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவையாவும் தென்னிலங்கையை சேர்ந்தவையாகும் என்பதுடன் யாழ். பல்கலைக்கழக த்தை உலக தரத்திற்கு உயர்த்துவதற்கு தமிழ் மக்களின் வரிப் பணத்தை பயன்படுத்த வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. யான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

யாழ்ப்பாண பல்லைக்கழகத்தில் விவசாயப் பீடத்தை உருவாக்குவதற்கு எடுக்கும் முயற்சிக்கு நன்றியை தெரிவிக்கின்றோம் என்றாலும் வடக்கு கிழக்கில் விவசாயம், கடல்சார் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு அங்கு பல்கலைக்கழகங்களை உருவாக்க வேண்டும்.

யாழ். பல்கலைக்கழகம் முக்கியமானது. வரலாற்று ரீதியில் கல்வித் துறையில் வளர்ச்சியடைந்த மக்கள் சமூகத்தை கொண்டது வடக்கு பிரதேசமாகும். அரசாங்கம் ஆறு பல்கலைக்கழகங்களை உலக தரத்திற்கு உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. நல்ல திட்டம் எனினும் அவையாவும் தென் பிரதேசத்திலேயே இருக்கின்றது.

கல்வியில் உயர்ந்த இடமாக வடக்கு கிழக்கு இருக்கின்றது. யாழ். பல்கலைக்கழகம் கால தாமத்தால் அமைக்கப்பட்டாலும் உலக தரத்திற்கான தரத்தை எட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். வரவு செலவுதத் திட்டத்தில் யாழ். பல்கலைக்கழகத்தை உயர்த்துவதற்கான வார்த்தை இல்லை, பிரேரணை முன்வைக்கப்படவில்லை. நிதியும் ஒதுக்கப்படவில்லை. அந்த பல்கலைக்கழகத்தை தரமுயர்த்துவதற்கு திட்டமிட்ட செயற்பாடு அவசியமானதாகும்.

யாழ். பல்கலைக்கழகத்தை தரமுயர்த்துவதற்கு இந்தியா உதவி செய்வதாக அமைச்சர் தெரிவிக்கின்றார். அதனை நாம் வரவேற்கின்றோம். ஆனால் யாழ்ப்பாண மக்களும் தமிழ் மக்களும் வரிப்பணம் செலுத்துகின்றனர். அந்த பணத்தை யாழ். பல்கலைக்கழகத்தை தரமுயர்த்த பயன்படுத்த வேண்டும். பட்டதாரிகள் வேலைவாய்ப்பு இன்றி திமுறுகின்றனர். பட்டம் பெற்று நான்கு, ஐந்து ஆண்டுகள் வேலைவாய்ப்பின்றி இருக்கின்றனர். சிலருக்கு துறைச்சார் வேலைவாய்ப்பு வழங்கப்படுவதில்லை. இது அடிப்படைப் பிரச்சினையாகும்.

கல்வித் துறையில் முறையான வேலைத் திட்டம் வகுக்கப்பட வேண்டும். அரசியலுக்கு அப்பால் நிரந்தரமான திட்டக் குழுவை நியமித்து திட்டங்களை வகுக்க வேண்டும். அதன் மூலமே உலக மாற்றத்திற்கு ஏற்ப கல்வி முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.

பாடங்கள் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் மாறுகின்றது. அதற்கேற்ற வகையில் பாடத் திட்டங்களை வகுக்க வேண்டும். தனியார் பல்கலைக்கழகங்கள் உருவாக்குவது நல்ல செயற்பாடாகும் என்றாலும் அந்த பல்கலைக்கழகங்களில் புதிய புதிய பாடத் திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும்.

பலகலைக்கழகத்தில் பட்டம் பெற்று வெளியேறிய மூன்று ஆண்டுகளுக்குள் வேலை வாய்ப்புக்களை வழங்க வேண்டும். இல்லையெனில் ஏழை பட்டதாரி மாணவர்களை இனங்கண்டு மாதத்திற்கு சிறு தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக