22 அக்டோபர், 2010

மகாவலி பிரதேச மக்களின் பிரச்சினை: ஒரு இலட்சம் காணி உறுதிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை


மகாவலி பிரதேசத்தில் வாழும் மக்கள் எதிர்நோக்கியுள்ள காணி உறுதிப்பத்திர பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்காக ஒரு இலட்சம் காணி உறுதிகளை வழங்க நடவடிக்கை எடுத்திருப்பதாக நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று பாராளுமன்ற த்தில் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் இற்றை வரையும் 40 ஆயிரம் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டு ள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, மொரகஹகந்த நீர்ப்பாசனத் திட்டம் காரணமாக இருப்பிடத்தையும், விவசாய பூமியையும் இழக்கும் சகலருக்கும் மாற்று இருப்பிடங்களும், விவசாய நிலமும் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். இலங்கை மகாவலி அதிகார சபை சட்டத்தின் கீழான கட்டளைகள் மீதான விவாதத்தை ஆளும் தரப்பில் தொடக்கி வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அமைச்சர் தொடர்ந்தும் உரை யாற்றுகையில்:- மகாவலி பிரதேசங்களில் குடியிருக்கும் மக்கள் காணி உறுதிப் பத்திரங்கள் தொடர்பாகப் பெரும் பிரச்சினைக்கு நீண்ட காலமாக முகம் கொடுத்து வந்தார்கள். இப்பிரச்சினையைத் தீர்த்து வைக்கும் வகையில் மகாவலி பிரதேசத்தில் வாழ்பவர்களுக்காக ஒரு இலட்சம் காணி உறுதிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளேன் இத்திட்டத்தின் கீழ் இற்றைவரையும் 40 ஆயிரம் காணி உறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. காணி அமைச்சின் ‘பிம்சவிய’ திட்டத்தின் ஊடாக இத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றேன்.

காணி உறுதி வழங்கும் நடவடிக்கை தாமதமடைவதற்கு நில அளவையாளர்கள் பற்றாக்குறையே பிரதான காரணமாகும். இப்பிரச்சினையை துரித கதியில் தீர்த்து வைக்கவே நடவடிக்கை எடுத்து வருகின்றேன். அதேநேரம், மகாவலி பிரதேசங்களில் சட்ட விரோதமாகக் குடியேறியுள்ளவர்களை வெளியேற்றவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றன.

மொரகஹகந்த நீரப்பாசனத் திட்டத்தின் கீழ் 88 ஆயிரம் ஹெக்டேயர் நிலம் அபிவிருத்தி செய்யப்படவிருக்கின்றது. இது பராக்கிரம சமுத்திரத்தை விடவும் நான்கு மடங்கு பெரிய அபிவிருத்தித் திட்டமாகும். இத்திட்டம் காரணமாக இருப்பிடங்களை இழந்துள்ள 1581 குடும்பங்களை மீளக்குடியமர்த்தவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். இத்திட்டம் காரணமாக இருப்பிடத்தையும், விவசாய நிலத்தையும் இழப்பவர்களுக்கு மாற்று இடத்தில் இருப்பிடமும், விவசாய நிலமும் வழங்கப்படும்.

மொரகஹகந்த நீர்ப்பாசனத் திட்டம் மக்களுக்கும், வனஜீவராசிகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெடுக்கப்படுகின்றது. இத்திட்டத்திற்கு குவைத் நிதியமும், ஜய்க்கா நிறுவனமும் நிதியுதவி வழங்குகின்றன.

உலக உணவுத் தேவையைக் கருத்திற் கொண்டு 1970 களில் மகாவலி அதிகார சபை ஆரம்பிக்கப்பட்டது. அப்போது நாட்டில் 9 இலட்சம் ஹெக்டயர் நிலத்தில் விவசாயத்தை மேம்படுத்துவது இலக்காகக் கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் நாம் இத்திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளோம். இத்திட்டத்திற்குள் புதிய ஆறுகளையும், குளங்களையும் உள்ளடக்கியுள்ளோம். மகாவலி பிரதேசத்தில் மரக்கறி பயிர்ச்செய்கையும், பழச் செய்கையும், அலங்கார மீன் வளர்ப்பும் ஊக்குவிக்கப்படுகின்றது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக