22 அக்டோபர், 2010

அரச ஊழியர் பொறுப்புடன் செயற்படின் பொருளாதார அபிவிருத்தியில் தன்னிறைவு காண்பது உறுதி

அரச ஊழியர்கள் மேலும் பொறுப்புணர்வுடன் செயற்பட் டால் பொருளாதார அபிவிருத்தி யில் நாடு தன்னிறைவு காண்பது உறுதியென ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்தார். தம்மிடம் கண்ணீருடன் வரும் மக்களை மகிழ்ச்சியுடன் திரும்பிச் செல்ல வைக்க முடியுமானால் அதுவே சிறந்த அரச சேவையாளருக்குரிய இலட்சணமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

நம்பிக்கை இழக்கச் செய்யாது நம்பிக்கையூட்டும் சேவையை வழங்குவதன் மூலமும் தம்மிடம் சேவைபெற வருவோரை தமது உறவினராக மதித்து சேவை வழங்க முன்வரும்போதும் அரச சேவை உயர் ஸ்தானத்தைப் பெறுகிறது. இதனை மனதிற்கொண்டு அரச ஊழியர்கள் செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

பொருளாதார அபிவிருத்தியுடன் உயர் பண்பு மிக்க சமூகமொன்றைக் கட்டியெழுப்ப மக்களிடையே சிறந்த சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது.

பிரதமர் டி.எம்.ஜயரத்ன, அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள், உயர் மட்ட அரச அதிகாரிகள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மேலும் தெரிவிக்கையில்,

எமது நாடு 2500 வருட வரலாற்றைக் கொண்டது. ஐந்து வருட திட்டம், பத்து வருட திட்டம் என பல்வேறு திட்டங்கள் வகுத்து நடைமுறைப்படுத்தப்பட்டு அவை தோல்விகண்டன. எனினும் 2005ம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ தேர்தல் விஞ்ஞாபனமாக மஹிந்த சிந்தனைத் திட்டத்தை முன்வைத்தார். அது நடைமுறைப்படுத்தப்பட்டு பின்னர் கடந்த வருடத்தில் அதன் எதிர்காலத் திட்டமும் சமர்ப்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

30 வருட கொடூர யுத்தத்திற்குப் பின்னர் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக முன்வைக்கப்பட்ட இத்திட்டம் நாட்டில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றுள்ள சூழல் அபிவிருத்திக்கும், முதலீடுகளுக்கும் சுற்றுலாவுக்கும் மிகச் சிறந்ததென சர்வதேச அவதானிகள் பகிரங்க கருத்துக்களை முன்வைக்கின்றனர்.

தென்கொரியா போன்ற நாடுகள் ‘எம்மால் முடியும்’ என்ற கோட்பாட்டுடன் செயற்பட்டதனால் தான் பாரிய முன்னேற்றமடைந்துள்ளன. இலங்கையிலும் முடியாது, சரிவராது என்ற சிந்தனை யுகத்துக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

2006 மார்ச் 16ல் அன்றைய இலங்கைக்கான நோர்வேயின் சமாதானத் தூதுவராகச் செயற்பட்ட எரிக் சோல்ஹெய்ம் அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடிய விடயங்களை இன்று ஞாபகப்படுத்துவது பொருத்தமாகும். ‘பிரபாகரனுடன் யுத்தம் செய்து வெல்ல முடியாது என்றும் அவர் மாவீரன் என்றும் புலிகளை அழிக்க முடியாது என்றும் குறிப்பிட்டு யுத்தத்தை கைவிடுமாறு கேட்டுள்ளார்.

எனினும் ஜனாதிபதி அதனை ஒரு சவாலாக ஏற்று செயற்பட்டார். இன்று பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு நாடு சுதந்திரமடைய அது வழிவகுத்துள்ளது. எம் அனைவருக்குள்ளும் இயலும் என்ற சிந்தனை அவசியம்.

நாட்டில் 1.2 மில்லியன் அரச ஊழியர்கள் கடமையில் உள்ளனர். பொது கணிப்பீட்டின்படி அவர்கள் ஒரு நாளில் 3 1/2 மணி நேரமே வேலை செய்கின்றனர். அவர்கள் மேலும் 1/2 மணி நேரத்திற்கு அர்ப்பணிப்புள்ள சேவையை வழங்க முடியுமானால் நாம் பொருளாதார அபிவிருத்தியில் மேலும் முன்னேற்றமான நாட்டைக் கட்டியெழுப்புவது மிக சுலபமாகும் எனவும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக