22 அக்டோபர், 2010

யுத்தத்தின் போது கைப்பற்றப்பட்ட நகைகளை ஒப்படைக்க வேண்டும் - மனோகணேசன்

இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது கைப்பற்றப்பட்ட அரசு மற்றும் இராணுவத்தினரால் நகைகளை, மீண்டும் நகைகளின் சொந்தக்காரர்களிடம் ஒப்படைக்கவேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் பிபிசிக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் கூறியுள்ளார்.

வடக்கே பல்வேறு இடங்களில் சுமார் 110 கிலோ அதாவது சுமார் 49 கோடி பெறுமதியான தங்க நகைகளை சேகரித்திருப்பதாகவும், இந்த நகைகள் சட்ட ரீதியாக இலங்கை மத்திய வங்கியிடம் கையளிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கைபற்றப்பட்ட நகைகள் விடுதலைப்புலிகளின் வங்கிகளிலிருந்து பெறப்பட்டவையாக இருப்பினும் ,அவை தமிழ் மக்களின் சொத்து எனவும், நகைகளுக்கு உரியவர்கள் யார் என்பதை கண்டறிந்து அதை ஒப்படைப்பது அரசின் கடமை என தெரிவித்துள்ளார்.

இந்த நகைகள் இவ்வாறு ராணுவத்தினரால் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன என்று அவ்வப்போது சொல்லப்பட்டு வந்தாலும், இது குறித்து போர் முடிந்த ஒன்றரை ஆண்டு ஆன பிறகு இப்போதுதான் அரசாங்கம் வாய் திறந்திருக்கிறது என தெரிவித்துள்ளார்.

போரின் இறுதிக்கட்டங்களில் சுமார் மூன்று லட்சம் தமிழ் மக்கள் வன்னிப்பகுதியிலிருந்து வெளியேறி, வவுனியா பகுதியில் தஞ்சம் புகுந்தார்கள். அவர்கள் பொதுவாக தங்களது உடமைகள் அனைத்தையும் விட்டுவிட்ட நிலையிலேயே ஓடிவர நேர்ந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக