22 அக்டோபர், 2010

வடக்கு உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம்


* அச்சுவேலி கைத்தொழில் பேட்டை மீள ஆரம்பம்

* தனியார் ஒத்துழைப்புடன் உற்பத்தித்திறன் மேம்பாடு

* இலங்கை, இந்தியா, ஐ.நா.969 மில்லியன் ரூ. ஒதுக்கீடு


வடமாகாணத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பாரிய வேலைத் திட்டங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கமைய யாழ். அச்சுவேலி கைத்தொழில் பேட்டையை மீள ஆரம்பிக்கவும் தனியார்த் துறையின் பங்களிப்புடன் வாழ்வாதார மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

சுமார் 969 மில்லியன் ரூபா செலவில் இந்த பாரிய வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்திய அரசாங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பு ஆகியன இதற்கான நிதியுதவிகளை வழங்கவுள்ளதுடன் அரசாங்கமும் பெருந்தொகை நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, ரிஷாத் பதியுதீன் ஆகியோர் அமைச்சரவைக்கு தனித்தனியாக சமர்ப்பித்த பத்திரங்களுக்கே அமைச்சரவை நேற்று முன்தினம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு அமைச்சரவையின் பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தலைமையில் அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.

அமைச்சர் இங்கு மேலும் தகவல் தருகையில் குறிப்பிட்டதாவது,

யாழ். அச்சுவேலி கைத்தொழில் பேட்டையை மீள ஆரம்பிப்பதற்கான யோசனையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சமர்ப்பித்துள்ளார்.

இதற்கமைய யுத்தத்தினால் சேதமடைந்த 65 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட அச்சுவேலி கைத்தொழில் பேட்டையிலுள்ள 36 தொழிற்சாலைகளும் மீள ஆரம்பிக்கப்பட வுள்ளன. யாழ்ப்பாணத்தில் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் துறையை மேம்படுத்தும் பொருட்டு முன்னெடுக்கப்படவுள்ள இந்த வேலைத் திட்டத்திற்கு இந்திய அரசு 174 மில்லியன் ரூபா நிதியுதவியையும் இலங்கை அரசாங்கம் 25 மில்லியன் ரூபா நிதியையும் வழங்கவுள்ளன.

1971ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த கைத்தொழில் பேட்டையை மீள ஆரம்பிப்பதன் மூலம் இந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும்.

இதேவேளை, தனியார்த் துறையின் பங்களிப்புடன் வாழ்வாதார மற்றும் உற்பத்தித் திறன் மேம்பாட்டுக்கான யோசனையை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அமைச்சரவைக்குச் சமர்ப்பித்துள்ளார். ஐக்கிய நாடுகள் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பின் ஸினியிளிலி ஒத்துழைப்புடன் 7.7 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் முன்னெடுக்கப்படவுள்ள இந்தத் திட்டத்திற்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் வடக்கு, கிழக்கில் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல், உற்பத்தித் திறனை மேம்படுத்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

2010- 2014ம் ஆண்டு காலத்திற்குள் முன்னெடுக்கப்படவுள்ள இத்திட்டத்தின் மூலம் வடக்கு, கிழக்கில் வாழ்வாதாரம், கிராமிய கைத்தொழில் துறை, மீன்பிடி கைத்தொழில் துறை, விவசாயத்துறை போன்றன மேம்படுத்தப்படவுள்ளன.

வடக்கில் உட்கட்டமைப்பு வசதிகளை மாத்திரம் ஏற்படுத்துவதுடன் நின்று விடாமல் அந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை, தொழில்துறையை மேம்படுத்துவதற்கான பாரிய வேலைத் திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

இடம்பெயர்ந்த மக்களுக்கு தற்காலிக இருப்பிடத்தையும் பணத்தையும் மாத்திரம் வழங்குவதுடன் நின்று விடாமல் அவர்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் செய்து கொடுப்பதும் அரசாங்கத்தின் கடமையாகும்.

அதனை அரசாங்கம் உரிய முறையில் நிறைவேற்றி வருகிறது. இதற்காகவே இது போன்ற பாரிய திட்டங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி வருகிறது.

இவ்வாறு அமைச்சர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக