உள்ளூராட்சி சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலத்துக்கு இணக்கம் தெரிவித்து கிழக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சபையின் அமர்வு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது.
உள்ளூராட்சி திருத்தச் சட்டமூலத்துக்கு கிழக்கு மாகாண சபையின் இணக்கத்தைப் பெறுவதற்காக பாராளுமன்றத்திலிருந்து கிழக்கு மாகாண சபைக்கு சட்டமூலப் பிரதிகள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
திருத்தச் சட்டமூலத்துக்கு இணக்கம் தெரிவிக்கும் பிரேரணை மாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்ட போது முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட 18 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். ஏழு வாக்குகள் எதிராக அளிக்கப்பட்டன. 11 மேலதிக வாக்குகளால் சட்டமூலத்திற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
கிழக்கு மாகாண சபையின் எதிர்க் கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபை உறுப்பினருமான தயாகமகே மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
ஆனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஜவாத், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுத்த தீர்மானத்தை மீறி பிரேரணைக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து வாக்களித்தார்.
இதே போன்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) உறுப்பினர் வாக்கெடுப்புக்கு முன்னதாகவே சபையை விட்டு வெளியேறினார்.
கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.
கிழக்கு மாகாண சபையின் அமர்வு செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி இரவு 10.40 மணிவரை நடைபெற்றது.
இரவு 10.40 மணிக்கே வாக்கெடுப்பு நடைபெற்றது. கிழக்கு மாகாண சபை ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இரவு 10.40 மணிவரை கூட்டம் நடைபெற்றது இதுவே முதற்தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக