21 அக்டோபர், 2010

அமெரிக்கா, நார்வேயிலுள்ள புலிகள் மீண்டும் ஒருங்கிணைய முயற்சி



அமெரிக்கா, நார்வேயிலுள்ள புலிகள் மீண்டும் ஒருங்கிணைய முயற்சி செய்து வருகின்றனர் என்று இலங்கை பிரதமர் டி.எம். ஜெயரத்ன கூறினார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு ஜெயரத்ன பேசியதாவது:

கடந்த ஆண்டு முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிப் போரில் ராணுவம் வெற்றி பெற்றது. இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் நார்வேயில் உள்ள புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீண்டும் ஒருங்கிணைய முயற்சித்து வருகின்றனர்.

அமெரிக்கா, நார்வேயிலுள்ள புலிகள் படை தலைவர்கள், புலிகள் புலனாய்வுப் பிரிவை மீண்டும் ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் ஆயுதப் பிரிவையும் ஏற்படுத்த அவர்கள் முயற்சித்து வருகின்றனர்.

இலங்கையில் தனியாக ஒரு மாநிலத்தை அமைக்கும் அவர்களது திட்டத்துக்காக இதைச் செய்து வருகின்றனர்.

நார்வே, அமெரிக்காவிலுள்ள புலிகள் பிரிவின் 2 தலைவர்களும் இந்த காரியத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் புலிகள் பயன்படுத்தி வந்த வெடிபொருட்கள் அடங்கிய ஜாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சாதாரணமாக புலிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்தவர்கள் இந்த ஜாக்கெட்டுகளை அணிந்துகொண்டு மனித வெடிகுண்டாக மாறி தாக்குதல் நடத்துவர்.

இந்த வெடிகுண்டு ஜாக்கெட்டுகளை சமீபத்தில் பாதுகாப்புப் படையினர் கண்டறிந்து செயலிழக்கச் செய்துள்ளனர். தோற்கடிக்கப்பட்ட புலிகளின் தலைவர்கள் இதுபோன்ற காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார் அவர்.

ஆனால் புலிகள் அமைப்பை ஒருங்கிணைக்க முயற்சித்து வரும் தலைவர்களின் பெயர்களை அவர் நாடாளுமன்றத்தில் குறிப்பிடவில்லை.

கடந்த ஆண்டு நடந்த போருக்குப் பின்னர் புலிகள் எந்தவிதத் தாக்குதலையும் நடத்தவில்லை. இந்த நிலையில் புலிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களை இலங்கை ராணுவத்தினர் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.

அவசர நிலை பிரகடன சட்டத்தை இலங்கை அரசு அமல்படுத்தி வருகிறது. இந்த சட்டத்துக்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு இருந்தும்கூட அதை அரசு அமல்படுத்தி வருகிறது.

எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களை பயமுறுத்துவதற்காக இதை ஆளும் கட்சி பயன்படுத்தி வருகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக