20 அக்டோபர், 2010

இலங்கையில் தமிழக இளைஞர் கொலை : 4 மாதங்களின் பின் உடல் ஒப்படைப்பு


இலங்கையில் கொலை செய்யப்பட்ட தமிழக ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கீழமானாங்கரையை சேர்ந்த செல்வராஜ் என்பவரது உடல் நான்கு மாதங்களுக்கு பின், அவரின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சமையல்துறையில் கல்வி கற்ற செல்வராஜ் (24) இலங்கைக்கு வீட்டு வேலைக்காகச் சென்றார்.

அங்குள்ள ஒரு ஹோட்டலில் வேலை என்றதும் மறுப்பு தெரிவித்த இவர், வேறு வழியின்றி அங்கு பணியாற்றினார். எனினும் ஹோட்டல் முகாமையாளர் தொடர்ந்து தொந்தரவு கொடுக்கவே, மீண்டும் தன்னை இந்தியா அனுப்பி விடுமாறு செல்வராஜ் கோரினார்.

ஆத்திரமடைந்த ஹோட்டல் முகாமையாளர், தனது மனைவி மற்றும் புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் ஒருவரின் உதவியுடன், செல்வராஜைக் கொலை செய்து, கடலில் வீசினார்.

தகவலறிந்த பொலிசார் குற்றவாளிகளைக் கைது செய்தனர். இத்தகவல், இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மூலம் செல்வராஜின் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது.

செல்வராஜின் உடல் நான்கு மாதங்களுக்குப் பின் விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு, திருச்சியில் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் உடல் சொந்த ஊருக்குக் கொண்டு வரப்பட்டு உறவினர்கள் முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்டது.

செல்வராஜின் தந்தை தென்னரசு இது குறித்துத் தெரிவிக்கையில்,

"குடும்பம் வறுமையில் வாடியபோதும், கடன் வாங்கி மகனை படிக்க வைத்தேன். குடும்ப கஷ்டம் தீரும் என்ற கனவில் இருந்த எங்களுக்கு, ஏமாற்றமே மிஞ்சியது.

மகன் உடலைக் கொண்டு வரக்கோரியும், இலங்கை அரசிடமிருந்து இழப்பீட்டு தொகை வாங்கி தருமாறும், கடந்த ஆகஸ்டில் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்திடம் கேட்டு கொண்டோம்.

ஆனால் எவ்வித பலனுமில்லை. இந்திய தூதரக அதிகாரியின் தனிப்பட்ட முயற்சியாலேயே மகன் உடல் கிடைத்தது. நிவாரண நிதி கேட்டு அரசு அலுவலகம் முன் சாகும் வரை போராட்டம் நடத்த உள்ளோம்" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக