20 அக்டோபர், 2010

வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் இரு ஆண்டுகளில் ரூ. 5457.15 மில். செலவு வட மாகாண பிரதம செயலாளர்

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப் படும் வடக்கின் வசந்தம் அபிவிருத்திக் கருத்திட்டத்தின் மூலம் இரண்டு ஆண்டுகளில் 5457.15 மில்லியன் ரூபா செலவில் 3263 செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் இடம்பெயர்ந்த 3,43,466 மக்கள் தொகையில் 2010 ஒக்டோபர் வரை 3,20,156 பேரை மீளக் குடியமர்த்தியுள்ளதுடன், எஞ்சியுள்ள 23,310 பேரை மீள் குடியமர்த்துவதற்கான துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப் பட்டுள்ளதாக மாகாண பிரதம செயலாளர் சிவசாமி தெரிவித்தார். வடமாகாண அபிவிருத்தி செயற்பாட்டு மீளாய்வுக் கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று வவுனியா இராணுவத் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாகாண அபிவிருத்தி மீளாய்வு அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே மாகாண பிரதம செயலாளர் இதனைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது :-

ல்வேறு சவால்களுக்கு மத்தியில் வட மாகாணத்தில் துரித அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. கல்வி, சுகாதாரம், மீள்குடியேற்றம், விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் மின் விநியோகத் திட்டங்கள் வடக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அரசாங்கம், உள்ளூராட்சி சபைகள், உலக வங்கி ஆகிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஜனாதிபதியின் அபிவிருத்திச் செயலணி என்பவற்றினூடாக பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறை ப்படுத்தப்பட்டு வருவதுடன், பெரும் பாலான திட்டங்கள் நிறைவு செய் யப்பட்டும் உள்ளன.

குறிப்பாக யுத்தத்தினால் இடம் பெயர்ந்தவர்களில் பெருமளவிலானோர் மீள்குடியேற்றப்பட்டு, அவர்களுக்கான வாழ்வாதார உதவித் திட்டங்கள் பல நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

கல்வித் துறையில் மேற்கொள்ளப் பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களில் 2010ம் ஆண்டில் 97 பாடசாலைகள் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கென 458.21 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

மேலும் 243 பாடசாலைகள் புனரமைக்கப்பட்டுள்ளன. 226 மில்லியன் ரூபா செலவில் பாடசாலை உபகரணங்கள், சீருடைகள், கணனி இயந்திரங்கள் ஆகியன பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் உட்பட ஏனைய செயற்திட்டங்களுக்காக 260 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்கான அபிவிருத்தித் திட்டங்களில் பாதிக் கப்பட்டுள்ள பாடசாலைகளை புனர மைத்தல், கணனி கற்கை நிலையங்களை ஆரம்பித்தல் மற்றும் மன்னார், வவுனியா, யாழ்ப்பாண மாவட்டங்களில் ஆங்கில மொழிப் பயிற்சி நிலையங்களை உருவாக்குதல் போன்ற திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

சுகாதாரத் துறை அபிவிருத்தித் திட்டங்களில் புதிய கட்டடங்களை நிர்மாணித்தல், கட்டடங்களைத் திருத்துதல், வைத்திய உபகரணங்கள், மருத்துவப் பிரிவுகள், வாகனங்கள் மற்றும் விடுதிகள் புனரமைப்பு போன்ற திட்டங்களுக்காக 1132 மில்லியன் ரூபா கடந்த இரண்டு ஆண்டுகளில் செலவிடப்பட்டுள்ளது.

அத்துடன் 2010 – 2012 வரையிலான அபிவிருத்தித் திட்டங்களில் மீள் குடியேற்றப் பகுதியிலுள்ள வைத்திய சாலைகளை நிர்மாணித்தல், புனரமைத்தல் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய வைத்தியசாலைகளுக்கான மருத்துவ உபகரணங்களைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள், பிரதேச வைத்தியசாலை புனரமைப்பு உள்ளிட்ட திட்டங்களுக்கென 1691 மில்லியன் ரூபாவும் செலவி டப்படவுள்ளது.

உள்ளூராட்சி சபை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 437 கிலோ மீற்றர் நீளமான வீதிப் புனரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இதற்கென 293.55 மில்லியன் ரூபா செல விடப்பட்டுள்ளது. வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 2009, 2010 ஆம் ஆண்டுகளில் 1838 மில் லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் 9399 கிலோ மீற்றர் உள்ளூராட்சிச் சபை வீதிகள், நெடுஞ்சாலைகள், விவசாயம் மற்றும் நீர்ப்பாசன திட்டங்களுக்கான வீதிகள் புனரமைக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான நீர் விநியோகத் திட்டங்களுக்கென 16,400 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதுடன், மாகாண மின் விநியோகத் திட்டத்திற்கென 120.56 மில்லியன் ரூபாவை செல விட்டுள் ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற மீளாய்வுக் கூட்டத்தில் வரவேற்புரையை வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி நிகழ்த்தினார். வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் கள் தமது மாவட்டங்களில் மேற்கொள்ளப் பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள், எதிர் காலத் திட்டங்கள் தொடர்பான அறிக் கைகளை சமர்ப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக