17 ஆகஸ்ட், 2010

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்காமல் பேசுவதில் பயனில்லை:ஐ.தே.க

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும். இதில் நாம் உறுதியாகவுள்ளோம். நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையினை தொடர்வதா? இல்லாதொழிப்பதா என்பது தொடர்பில் அரசாங்கத்தின் தெளிவான பதில் இதுவரையில் கிடைக்கவில்லை என்று ஐக்கிய தேசியக்கட்சியின் பேச்சாளரும் எம்.பி.யுமான கயன்த கருணாதிலக தெரிவித்தார்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை அரசாங்கம் ஒழிக்க இணங்காவிடின் பேச்சுவார்த்தை நடத்துவதில் பயன் எதுவும் இல்லை. இது குறித்து அடுத்த முறை ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையில் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து கேட்டறிவோம். இதற்கமையவே பேச்சை தொடர்வதா? இல்லையா? என்பது தொடர்பில் இறுதி முடிவு எடுப்போம் என்றும் அவர் கூறினார்.

கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்த போதே அவர் இவ்வாறு சுட்டிக் காட்டினார். இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது,

நாட்டின் பிரதான எதிர்க்கட்சி என்ற ரீதியிலும், அதன் தலைவர் என்பதாலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பேச்சுவார்த்தைகளுக்கு அழைக்கும்போது எமது தலைவர் ரணில் விக்கிரமசிங்க அதில் கலந்து கொள்ள வேண்டியது கட்டாயமாகவுள்ளது.

இவ்வாறு கலந்து கொள்வதால் பல்வேறு விமர்சனங்களுக்கும் எமது தலைவர் உள்ளாக நேரிடுகிறது.

ஜனாதிபதியுடனான கடந்த கால பேச்சுவார்த்தைகளின் போது நிறைவேற்று அதிகார முறைமை ஒழிக்கப்படவேண்டுமென்ற ஐ.தே.க வின் நிலைப்பாடு தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக கட்சியின் செயற்குழு கூட்டத்திலும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரையில் அரசாங்கத்தின் நிலைப்பாடு தெரிவிக்கப்படவில்லை. எனவே அரசாங்கத்தின் மீதான நம்பிக்கைத் தன்மையும் கேள்விக்குறியாகியுள்ளது. இவ்விடயம் தொடர்பாக ஐ.தே.க.வுடன் மட்டுமல்லாது அனைத்து அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் மக்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும்.

இதன் மூலம் காணப்படும் பெறுபேறுகளுக்கு அமையவே தீர்வுகள் எட்டப்பட வேண்டும்.மக்களுக்கும் நாட்டுக்கும் நன்மை பயக்கும் விதத்திலான அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஐ.தே. க ஆதரவு வழங்கும்.அடுத்த முறை ஜனாதிபதியை எமது தலைவர் சந்திக்கும் போது நிறைவேற்று அதிகார முறைமை தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாடு கேட்கப்படும்.

அதற்கமையவே அரசுடன் பேச்சுவார்த்தைகளை தொடர்வதா கைவிடுவதா என்பது தொடர்பாக இறுதி முடிவெடுக்கப்படும். ஒன்றுபட்டு போராட தயார் முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவின் விடுதலை ஜனநாயக மீறல்கள், அரசாங்கத்தின் சர்வாதிகார பயணம் மற்றும் விலைவாசி அதிகரிப்பு தொடர்பாக அனைத்து கட்சிகளுடனும் ஒன்றிணைந்து போராட்டங்களை நடத்த ஐ.தே.கட்சி தயாராகவே உள்ளது.இதற்கு யார் தலைமை தாங்குகிறார்கள். அரசியல் ரீதியில் லாபம் கிடைக்குமா என்பது தொடர்பாக நாம் கவனம் செலுத்தமாட்டோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக