8 ஆகஸ்ட், 2010

பிரிட்டனுடன் கருத்து வேறுபாடு நீங்கியது: ஜர்தாரி


பிரிட்டனுடன் அனைத்து கருத்து வேறுபாடுகளும் நீங்கி விட்டதாக பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி தெரிவித்துள்ளார்.

அண்மையில் இந்தியா வந்திருந்த பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன், பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்படும் ஜிகாதி அமைப்புகள் மூலம் ஆப்கானிஸ்தான், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு தீவிரவாதம் பரவுவதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகளை பாகிஸ்தான் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

டேவிட் கேமரூனின் கருத்துகள் பாகிஸ்தான் அரசியல் வட்டாரத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இருநாட்டு உறவில் விரிசல் ஏற்படும் நிலையும் உருவானது.

இந் நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ நினைவாக அவரது நண்பரான பிரிட்டிஷ் அமைச்சர் ஆலன் டன்கன், பிரின்சஸ் ரிஸ்போரோ நகரில் வியாழக்கிழமை சிறப்புக் கூட்டம் நடத்தினார். இதில், பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரி, பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந் நிகழ்ச்சியின்போது ஜர்தாரியும், டேவிட் கேமரூனும் சந்தித்து நீண்ட நேரம் பேசினர். இது குறித்து லண்டனில் இருந்து வெளியாகும் கார்டியன் நாளிதழுக்கு ஜர்தாரி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

பிரிட்டிஷ் பிரதமருடன் நேரடியாக மனம்விட்டு பேசியதின் மூலம் இருவரும் இப்போது நெருங்கிய நண்பர்களாகி விட்டோம். பிரிட்டனும், பாகிஸ்தானும் இன்று, நேற்றல்ல, நீண்டகால நட்பு நாடுகள்.

ஜிகாதி விவகாரம் தொடர்பாக பிரதமர் கேமரூனிடம் விரிவாக விளக்கமளித்துள்ளேன். அதை அவர் புரிந்துக் கொண்டார்.

தீவிரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் தொடர்ந்து போரிட்டு வருகிறது. அந்தப் போரில் எனது மனைவி பேநசீர் புட்டோ உள்பட 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை இழந்து விட்டோம்.

தீவிரவாதத்தை ஒழிக்க முழுமூச்சோடு செயல்பட்டு வருகிறோம். அதை பிரதமர் டேவிட் கேமரூனும், பிரிட்டிஷ் மக்களும் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

பாகிஸ்தானை மையமாகக் கொண்டு இந்தியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட உலக நாடுகளில் தீவிரவாதம் தாக்குதல் நடைபெறுகிறது என்ற கருத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

எனது சந்திப்பின் மூலம் பிரிட்டனுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவு மேலும் மேம்படும் என்றார் ஜர்தாரி.

பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் அல்லல்படும்போது வெளிநாடுகளில் ஜர்தாரி சுற்றுப் பயணம் மேற்கொண்டிருப்பதை அந் நாட்டு அரசியல் கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. பணக்காரரான ஜர்தாரிக்கு ஏழைகளின் துயரம் தெரிவதில்லை என்று எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.

இது குறித்து கேட்டபோது, அபுதாபி, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் பாகிஸ்தான் வெள்ள நிவாரணத்துக்கு நிதி திரட்டி வருவதாக ஜர்தாரி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக